0
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, குருநாகல் வைத்தியர்களின் மருத்துவ சங்கம் 10 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு முன்னெடுத்து வரும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலையை சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க மற்றும் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் உபுல் மடஹபொல ஆகியோர் திங்கட்கிழமை (26) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அமைச்சில் வைத்து கையளித்தனர்.
குருநாகல் மாவட்ட வைத்தியர்களின் மருத்துவ மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்தே, சங்கத்தின் நிறைவேற்று சபையின் கோரிக்கைக்கு இணங்க இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
இந்த நிதிப் பங்களிப்பு பேரிடர் கால சுகாதாரப் பணிகளுக்கு பெரும் உறுதுணையாக அமையும் எனத் தெரிவித்த வைத்தியர் சங்கத்தினர், எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படின் நிதி ரீதியாகவும் நேரடிப் பங்களிப்பு ரீதியாகவும் உதவத் தயாராக இருப்பதாகவும் அமைச்சரிடம் உறுதியளித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த நிதியுதவியைப் பாராட்டியதுடன், இவ்வாறான அனைத்துப் பங்களிப்புகளும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரிச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.