7
சாவரும்போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது என்பதை அனைவருக்கும் தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறது ஈழத் தமிழர் தேசம்.
எங்கள் விடுதலைக்காகப் போராடிய புலி மாவீர்ர்களைப் பயங்கரவாதிகள் என்று சொன்னவர்களுக்கும் பாசிசவாதிகள் என்று ஶ்ரீலங்கா அரசுக்கு ஒத்தோடி அரசியல் செய்தவர்களுக்கும் நவம்பர் 27 தமிழ் ஈழ தேசம் தக்க பதிலை வழங்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்றும் நினைவுகூர அனுமதியில்லை என்றும் இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்கா கூறினார்.
ஆனால் எமது மண்ணின் மைந்தவர்களை, எமது விடுதலைக்காகப் போராடிய மானமா வீர்ர்களை நினைவுகூர எந்த்த் தடைகள் வந்தாலும் துயிலும் இல்லத்தில் திரள்வோம் என்பதை ஈழத் தமிழ் மக்கள் உணர்த்தியுள்ளனர்.
மாவீரர் நாள்
புனிதநாள் மாவீரர் நாள் என்பது ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் தம்மை ஆகுதி ஆக்கிய ஈழ நிலத்து வீரர்ளை அஞ்சலிக்கின்ற புனித நாள்.
விடுதலைத் தாகம் கொண்டு தமிழர் தேசம் எங்கும் விதைக்கப்பட்ட கல்லறைகள் கண் திறந்து பார்க்கும் உணர்வு மேலிடும் நாள். உணர்வுமயமாக மாத்திரம் இந்த நாள் முக்கியத்துவம் பெற்று முடிந்துவிடுவதில்லை.
பண்பாட்டு ரீதியாவும் அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இந்த நாள் முதன்மை பெறுகின்றது. இறந்தவர்களை வழிபடுதல் என்பது மானுட மாண்பு. தமிழ் சமூகத்தில் தெய்வ வழிபாடுகளும் போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நட்டுச் செய்யப்படுகிற வழிபாடுகளும் பண்பாடாக இம் மண்ணில் தொன்று தொட்டு நிலவுகிறது.
அந்த வகையில் மாவீரர் நாள் என்பதும் மாவீரர் துயிலும் இல்லம் என்பதும் தமிழரின் பண்பாட்டுரிமை மையங்களாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள பண்பாட்டு அடையாளங்களை உலக மரபுரிமைச் சின்னங்களாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.
உலகமெங்கும் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை பேணுதலும் அதனை மக்கள் கொண்டாடுவதும் பன்னாட்டு விதிகளுக்கு இயைபானது. அப்படியிருக்க ஈழதேசத்தில் 2009 முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் மாவீரர் துயிலும் இல்லங்களை ஶ்ரீலங்கா அரசு தன் படைகளைக் கொண்டு சிதைத்தது.
ஈழத் தமிழினம்மீது அறமற்ற வகையில் எப்படி இனவழிப்புப் போரைச் செய்து, இனப்படுகொலையைப் புரிந்ததோ அதேபோன்று அறமின்றி மாண்ட வீரர்களின் கல்லறைகளுடனும் யுத்தம் செய்து அழித்து.
இருப்பிற்காகப் போராடிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடங்களும் சிதைக்கப்பட்டன என்பது ஈழ மண்ணில் நாம் சந்திக்கும் இருப்பு சார்ந்த இடரையும் ஒடுக்குமுறையின் கொடூரத்தையும் இந்த உலகிற்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
இராணுவமுகமாகத் துயிலும் இல்லங்கள் அதற்குப் பின்னரும் துயிலும் இல்லங்களில் இராணுவமுகாங்கள் அமைக்ப்பட்டுக் குடியிருந்த மற்றொரு ஆக்கிரமிப்பும் அரங்கேறியது.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய போதும் இன்னமும் கோப்பாய் துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முள்ளியவளை துயிலும் இல்லம், மல்லாவி ஆலங்குளம் துயிலும் இல்லம் என்பன இராணுவத்தின் பாரிய முகாங்களாக உள்ளனர்.
இராமலிங்கம் சந்திரசேகரன்
“என் உறவு விதைக்கப்பட்ட துயிலும் இல்லத்திற்கு நான் செல்ல முடியாமல் போனேன். என் பிள்ளை அனாதையாகக் கிடக்கிறான்…” என்ற வார்த்தைகளை நேற்றுக் கேட்டவேளை மனம் துடித்தது.
இலங்கை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்க அரசு இணங்கியுள்ளதாகக் கூறினார். அந்தச் செயலை இந்த அரசு நிறைவேற்றி இருந்தால் தமிழ் மக்களிடத்தில் ஒரு பெரிய நல்லிணக்க சமிக்ஞையை காட்டியதாக இருந்திருக்கும்.
ஆனால் இராணுவத்தின் வசமுள்ள எந்தத் துயிலும் இல்லங்களும் விடுவிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் பொலிஸார் முரண்பாடுகளில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து அவர்களை மக்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் மணலாறு துயிலும் இல்லத்திற்கு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குச் சென்ற மக்கள் அச்சுறுப்பட்டுள்ளனர். எழுச்சிகொண்ட தமிழர் தேசம் இந்த வருடம் மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழ தேசம் எங்கும் பேரேழுச்சி கொண்டது. எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் இயக்கப்பாடல்களும் ஒலித்தன. நகரப் பிரதான வீதிகளில் மாவீரர் நினைவு வளைவுப் பதாகைகளையும் மக்கள் கட்டி எழுப்பினர்.
பேருந்துகளிலும் வர்த்தக நிலையங்களிலும் தமிழர் நகரங்களிலும் ஆலயங்களிலும் இயக்கப்பாடல்கள் வழியாக மாவீரர்கள் நினைவுகொள்ளப்பட்டமை இம்முறை தாயகத்தின் பேரேழுச்சியை வெளிப்படுத்தியது. கடும் மழையின் மத்தியிலும் மக்கள் அலையலையாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தார்கள். கடந்த ஆண்டைவிட மக்களின் எண்ணிக்கையும் அதிகமாயிருந்ததுடன் ஒழுக்கமைப்புக்களும் சிறப்பாக இருந்தது. வடக்கு கிழக்கு எங்குமுள்ள துயிலும் இல்லங்களில் திரட்சிபெற்ற மக்கள் விண்ணீராலும் கண்ணீராலும் அஞ்சலி செலுத்தி தங்கள் தாகத்தையும் தலைமுறைக் கனவுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நிகரற்ற தியாகங்களாலும் அதியுன்னத வீரங்களாலும் அடையாளம் பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம், எங்கள் தேசத்தில் விதையாக இருந்து விடுதலைக்கும் சுதந்திர அமைதிக்கும் காலத்தை வழிப்படுத்தும் என்ற பெரு நம்பிக்கையைப் பெற்றோம். 2009இற்கு முந்தைய தமிழ் ஈழ தேசத்தை மாவீரர் நாள் நினைவுபடுத்தியது.
அன்றைய காலம்
அன்றைய காலம் எனில் மக்களுடன் போராளிகளும் சீருடைகளுடன் வந்து நின்று தீபங்களை ஏற்றிக் கண்ணீர் விட்டு மக்களுக்கு ஆறுதல் அளிப்பார்கள்.
தளபதிகளும் போராளிகளுமென மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சியுடன் இருக்கும். தமிழ் தேசியத்தை தோற்கடிக்கலால், இல்லாமல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளார்கள்.
புலிகள் இல்லாத 16 ஆண்டுகளில் மக்கள் எவருடைய தலையீடும் இன்றி எவருடைய அழைப்புமின்றி துயிலும் இல்லத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் திரண்டமை வாயிலாக கனதி மிக்க செய்தியை உலகிற்கு மிகத் தெளிவாக வழங்கியுள்ளனர்.
தீபச்செல்வன்