• Fri. Apr 10th, 2026

24×7 Live News

Apdin News

சுங்கப் பிரிவால் நூல்கள் அல்லது பொருட்கள் வரும்போது தடுத்து வைப்பது வழக்கமான நிகழ்வுதானே என்று கூறுகிறார்களே?

Byadmin

Apr 10, 2026


ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் இலங்கையில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது என சிங்கள அமைப்புக்கள் சாடுகின்றன. அத்துடன் படைப்பாற்றல் மற்றும் இலக்கிய வெளிப்பாட்டை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்பதற்கான கவலையை பரந்தளவில் உருவாக்குகிறது. இந்த நிலையில் தீபச்செல்வனின் இது குறித்துக் கேட்டோம்.

 

சுங்கப் பிரிவால் நூல்கள் அல்லது பொருட்கள் வரும்போது தடுத்து வைப்பது வழக்கமான நிகழ்வுதானே என்று கூறுகிறார்களே?

 

சிலவேளைகளில் நூல்கள் அல்லது பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வரும்போது தடுத்து வைத்துவிட்டு உரிய நபர்களை வந்து பெற்றுக்கொள்ள அறிவிப்பார்கள். வரி செலுத்துவதற்காகவோ, அல்லது பொருளின் பொதிச் செலவுக்கான மேலதிக பணத்தை பெறுவதற்காகவோ, அல்லது சிக்கலான பொருட்கள் என்றால் பொதியைப் பிரித்து உரியவரின் முன்பாக பார்வையிட இவ்வாறு தடுத்து வைத்து உரிய நபர்களை அழைப்பதுண்டு.

ஆனால் என்னுடைய நூல்களை தடுத்துவைத்துவிட்டு, இவை நாட்டின் ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இவைகளை விடுவிக்க கலாசார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு கடிதம் வழங்க வேண்டும் என்றும் என்னுடைய புத்தக இறக்குமதி முகவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டது. இந்த விடயம் சிங்கள எழுத்ததாளர்கள் மற்றும் இளையோரினால் அதிக கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டு அரச அமைச்சர்கள் தலையீடு செலுத்தியபோதும் இன்னமும் நூல் விடுவிக்கப்படவில்லை. கடந்த கால அரசுகள் கொண்டு வந்தமுறைகளினால் ஏற்பட்ட சிக்கல் என்று கலாசார அமைச்சர் எனக்குத் தொலைபேசியில் சொன்னார். ஆனால் பிறகு ஒவ்வொரு அமைச்சும் ஆராய்ந்து வருகிறது காத்திருங்கள் என்றார். ஆக மொத்தத்தில் கடந்த கால அரசுகள் கொண்டுவந்த தமிழ் இன ஒடுக்குமுறை ஏற்பாடுகளின் வழியாகத்தான் புத்தகங்களை விடுவிக்கலாமா என ஆராயப்படுகிறது. தமிழ் புத்தகங்களும் தமிழர்கள் போல சந்தேகிகப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்தான் இன்னமும் இந்த நாட்டில் நீள்கிறது என்று நான் சொல்லவில்லை. சிங்கள மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் இப்போது எங்களைக் குறித்து நாங்கள் பேசுவதைக் காட்டிலும் சிங்கள மக்கள் மிகுந்த தெளிவுடன் எங்கள் ஒடுக்குமுறை நிலையைப் பேசுகிறார்கள்.

By admin