• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் | 7 பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்றம் தடை உத்தரவு!

Byadmin

Feb 3, 2025


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (4) ஆர்ப்பாட்டங்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடியரசின் சுதந்திர தினமானது நாளை 04ஆம் திகதி கொண்டாடப்படவேண்டிய ஒரு தினம் என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பில் 8வது சரத்தில் கூறப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் காந்திபூங்காவில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையோ எந்தவொரு சட்டவிரோத செயற்பாட்டினையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நியாயதிக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக்கூடாது என ஏழு பேரின் பெயர் குறிக்கப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர் அ.அமலநாயகி, செயலாளர் சுகந்தினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கே நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினத்தினை “கரி நாளாக” அனுஷ்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வட கிழக்கில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

நாளைய தினம் மாபெரும் பேரணிக்கும் போராட்டத்துக்கும் மட்டக்களப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேவேளை, ஜனநாயகத்தினை பாதுகாக்கப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தமது உரிமைக்காக போராடும் உரிமை இருக்கும்போது தமிழர்களுக்கு மட்டும் அந்த உரிமையினையும் மறுக்கும் செயற்பாடுகளையே இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் அதிகாரங்கள் கையிலெடுத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே, நாளை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் ஏழு பேருக்கு நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By admin