பட மூலாதாரம், MENAHEM KAHANA/AFP via Getty Images
தனி மற்றும் சுதந்திரமான பாலத்தீன தேசத்தை நிறுவும் முன்மொழிவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து விலகின.
இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், யுக்ரேன், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ‘நியூயார்க் பிரகடனம்’ எனப்படும் இந்த முன்மொழிவை ஆதரித்தன.
இஸ்ரேல், அமெரிக்கா உட்பட மொத்தம் 10 நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளன.
முன்னதாக, மேற்குக் கரையில் உள்ள அடுமிம் குடியேற்றத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஒருபோதும் பாலத்தீன நாடு உருவாகாது, இந்த இடம் எங்களுடையது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாலத்தீனர்கள் உரிமை கோரும் நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் அவர் கையெழுத்திட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் கீழ், பாலத்தீனியர்கள் உரிமை கோரும் நிலத்தில் குடியேற்றங்கள் கட்டப்படும்.
செப்டம்பர் 22 ஆம் தேதி நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியமான கூட்டம் நடைபெற உள்ள நேரத்தில் இந்த திட்டம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
அக்கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், பாலத்தீனுக்கு முறையான தேசிய அந்தஸ்து வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இதே போன்ற நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருகின்றன.
நியூயார்க் அறிக்கையில் என்ன இருக்கிறது?
பட மூலாதாரம், news.un.org
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது சபை அமர்வில் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியபோது, “மத்திய கிழக்கில் அமைதிக்கான முக்கிய படி, இரு நாடு தீர்வை செயல்படுத்துவதாகும். சுதந்திரம், இறையாண்மை, ஜனநாயகம் கொண்ட இரண்டு நாடுகளாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் அமைதி, பாதுகாப்புடன் அருகருகே வாழ வேண்டும்” என்று தெரிவித்தார்.
‘நியூயார்க் பிரகடனம்’ என அழைக்கப்படும் இந்த ஏழு பக்க ஆவணம், இரு நாடுகள் தீர்வை நோக்கி “உறுதியான, நேர்மையான, மாற்ற முடியாத” நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது.
இதில், காஸா போரை நிறுத்த கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்ரேல்–பாலத்தீன மோதலுக்கு நியாயமான, அமைதியான தீர்வை ஏற்படுத்த வேண்டும், எதிர்கால காஸா நிர்வாகத்தில் ஹமாஸுக்கு இடமில்லை, “ஹமாஸ் உட்பட அனைத்து பாலத்தீனக் குழுக்களும் தங்கள் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைத்து, ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்கு பாடுபட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து பாலத்தீனப் பிரச்னை தொடர்பாக சர்வதேச கூட்டம் நடத்தியது. அப்போதிருந்தே நியூயார்க் பிரகடனத்துக்கான விவாதம் தொடங்கியது.
மேலும், இந்த முன்மொழிவை அரபு லீக் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. 17 ஐ.நா. உறுப்பு நாடுகள் (பல அரபு நாடுகள் உட்பட) இதற்கு கையெழுத்திட்டுள்ளன.
முன்மொழிவுக்கான எதிர்வினைகள்
ஐ.நா. பொது சபையில் பாலத்தீன் தேசம் குறித்த தீர்மான விவாதத்தின் போது, இஸ்ரேல் தூதர் டேனி டானன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
“இது ஒருதலைப்பட்சமான அறிவிப்பு. இது அமைதிக்கான படியாக இல்லை. மாறாக, இந்த சபையின் நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு வெற்று சைகை,” என்று அவர் தெரிவித்தார்.
அவர், “இந்தத் தீர்மானத்தால் யாராவது வெற்றி பெற வாய்ப்பு இருக்குமானால், அது ஹமாஸ் தான். இதை அவர்கள் ‘அக்டோபர் 7 தாக்குதலின் விளைவு’ என்று அழைப்பார்கள்,” என்றார்.
இதற்கிடையில், கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், அவரது பயணத்தின் போது, “ஹமாஸ் பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும் பாலத்தீன் அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவதில் அமெரிக்காவின் நிலைப்பாடு” குறித்து ரூபியோ விவாதிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
பட மூலாதாரம், Kiyoshi Ota/Bloomberg via Getty Images
வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது.
இதே நேரத்தில், இந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல்–காஸா போர் நிறுத்தம் குறித்த வாக்கெடுப்பில் இந்தியா விலகியிருந்தது.
அந்த நிலைப்பாடு அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த வாக்களிப்பில் இருந்து விலகிய 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இத்தகைய பின்னணியில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா ஆதரவு தெரிவித்திருப்பது, ஒரு முக்கிய ராஜ்ஜீய நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.
ஐ.நா.வில் இந்தியாவின் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், “இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பிரச்சினையில், பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் அமைதியாக வாழக்கூடிய இறையாண்மை மற்றும் சுதந்திரமான பாலத்தீன அரசை நிறுவும் இரு நாடுகள் தீர்வை இந்தியா எப்போதும் ஆதரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பாலத்தீனப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என வெளியுறவு அமைச்சகம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இதை வலியுறுத்தி, “பாலத்தீன மக்களுக்கு சொந்த எல்லைகளுடன் கூடிய, சுயாட்சி கொண்ட ஒரு நாடு அமைவது அவசியம். அங்கு அவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும்; அதே நேரத்தில் இஸ்ரேலுடனும் அமைதியாக இணைந்து வாழ வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு, டிசம்பர் 2024 இல், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் பிரச்சினையில் இரு நாடுகள் தீர்வை இந்தியா ஆதரிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியது .
பாலத்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது.
ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக , இந்திய அரசாங்கம் இரு நாடுகள் தீர்வுக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.
பட மூலாதாரம், IndiaUNNewYork @x
முன்னதாக ஏப்ரல் 2023 இல் , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது, அதில் இஸ்ரேல் 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், புதிய குடியேற்றங்களை நிறுவுவதையும் ஏற்கனவே உள்ள குடியேற்றங்களை விரிவுபடுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்தது.
இந்த ஆண்டு அக்டோபரில் , காஸாவில் ‘பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பதற்கும் சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும்’ ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜோர்டான் கொண்டு வந்த இந்த முன்மொழிவு மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இதன் பின்னர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த ஆண்டு டிசம்பரில் , மனிதாபிமான அடிப்படையில் காஸாவில் போர்நிறுத்தத்தை அமல்படுத்தும் திட்டத்தை இந்தியாவும் ஆதரித்தது.
இருப்பினும், கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பிரதேசத்தில் மனித உரிமைகள் நிலைமை குறித்த தீர்மானத்தில் இந்தியா ஜனவரி 2023 இல் வாக்களிக்கவில்லை .
அமெரிக்காவும் இஸ்ரேலும் வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன, அதே நேரத்தில் இந்தியா உட்பட பிரேசில், ஜப்பான், மியான்மர் மற்றும் பிரான்ஸ் ஆகியவை வாக்களிப்பில் இருந்து விலகின.
பாலத்தீனம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு
பாலத்தீன பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகக் கருதப்படுகிறது. இதனை வெளியுறவு அமைச்சகம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
பாலத்தீனத்திற்கான இந்தியாவின் ஆதரவு பல ஆண்டு கால பழமையானது.
1974 ஆம் ஆண்டில், பாலத்தீன விடுதலை அமைப்பை பாலத்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டபூர்வமான பிரதிநிதியாக அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடாக இந்தியா ஆனது.
1988 ஆம் ஆண்டில், பாலத்தீன அரசை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியது.
1996 ஆம் ஆண்டில், இந்தியா தனது பிரதிநிதி அலுவலகத்தை காஸாவில் திறந்தது, பின்னர் அது 2003 இல் ரமல்லாவிற்கு மாற்றப்பட்டது.
பல பன்முக மன்றங்களில் பாலத்தீனக் கோரிக்கையை ஆதரிப்பதில் இந்தியா தீவிர பங்காற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 53வது பொதுச் சபை அமர்வின் போது, பாலத்தீனியர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தது.
இஸ்ரேலின் பிரிவினைச் சுவரைக் கட்டும் முடிவை எதிர்த்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்தையும் 2003 அக்டோபரில் இந்தியா ஆதரித்தது.
2011 ஆம் ஆண்டில், பாலத்தீனம் யுனெஸ்கோவில் முழு உறுப்பினராக ஆவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
2012 ஆம் ஆண்டில், பாலத்தீனம் ஐ.நா.வில் வாக்களிக்கும் உரிமைகள் இல்லாமல் “உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக” இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை வழங்கியது.
செப்டம்பர் 2015 இல், ஐ.நா. வளாகத்தில் பாலத்தீனக் கொடியை நிறுவுவதையும் இந்தியா ஆதரித்தது.
பாலத்தீனியர்களுக்கு பல திட்டங்களைக் கட்டுவதில் இந்தியாவும் உதவி வருகிறது.
பிப்ரவரி 2018 இல், பாலத்தீனப் பகுதிக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆனார். அந்த நேரத்தில், பாலத்தீன நிர்வாகத் தலைவர் மஹ்மூத் அப்பாஸிடம், பாலத்தீன மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக உறுதியளித்ததாக மோதி கூறினார்.
“பாலத்தீனப் பகுதி ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திரமான நாடாக அமைதியான சூழலில் வாழ்வதை இந்தியா காண விரும்புகிறது” என்று பிரதமர் மோதி கூறியிருந்தார்.
இந்தியாவுக்கும் இஸ்ரேலுடனும் இடையே உள்ள ஆழமான உறவுகள்
பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images
இந்தியா இஸ்ரேலிடமிருந்து முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து வருகிறது. இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே வழக்கமான பரிமாற்றமும் உள்ளது.
பாதுகாப்பு விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பணிக்குழுவும் உள்ளது.
பிப்ரவரி 2014 இல், இந்தியாவும் இஸ்ரேலும் மூன்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தங்கள் குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி செய்துகொள்வது, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பானவை.
2015 முதல், இந்திய ஐபிஎஸ் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலின் தேசிய போலீஸ் அகாடமிக்கு ஒரு வார கால பயிற்சிக்காக வருகை புரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும்,இரு நாடுகளிலிருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் வந்து செல்கின்றனர்.
இந்தியா தொடர்பான பல படிப்புகள் டெல் அவிவ் பல்கலைக்கழகம், ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைஃபா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு