அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார்.
விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார்.
மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா, வேறு என்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும்.
இவை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பயணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
தற்போது சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவின் 92வது விண்வெளி நடை. அவர் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு இந்த விண்வெளி நடையை தொடங்கினார்.
சுனிதா வில்லியம்ஸ் சிவப்புக் கோடுகள் கொண்ட விண்வெளி வீரருக்கான உடையை அணிந்திருந்தார். அவருடன் விண்வெளிக்குப் பயணித்த மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் இதில் பங்கேற்றார்.
இந்த மாதத்திலேயே இதற்கு முன்பாக, விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு விண்வெளி நடையை மேற்கொண்டிருந்தார்.
புட்ச் வில்மோர் ஐந்தாவது முறையாகவும், சுனிதா வில்லியம்ஸ் ஒன்பதாவது முறையாகவும் விண்வெளி நடையை மேற்கொள்கின்றனர்.
8 மாதங்களாக விண்ணில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ்
அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஒரு சில நாட்களே இருக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எட்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை.
கடந்த ஆண்டு, விண்வெளிக்கு அவரை ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன.
அவர்கள் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது.
எனவே அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது.
ஈலோன் மஸ்கிடம் வலியுறுத்திய டிரம்ப்
இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களையும் பூமிக்கு அழைத்து வரும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதன் நிறுவனரான மஸ்க் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கதில், “சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது,” என்று பதிவிட்டுள்ளார்.
பைடன் நிர்வாகம் இரு வீரர்களையும் கைவிட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் தைரியமான இரண்டு வீரர்களையும் திரும்பக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன், ஈலோன் விரைவில் செல்வார். அவர்கள் பத்திரமாகத் திரும்புவார்கள் என நம்புவோம், ஈலோனுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.