பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், ரிச்சர்ட் கிரே
- பதவி, பிபிசி செய்திகள்
-
ஒரே பயணத்தில் விண்வெளியில் அதிக நாட்கள் இருந்ததற்கான சாதனை தற்போது 437 நாட்களாக உள்ளது. ஆனால் விண்வெளியில், நீண்ட காலம் இருந்தால் ஒரு விண்வெளி வீரரின் தசை, மூளை மற்றும் குடலில் உள்ள பாக்டீரியா என அவரது உடலில் ஆச்சரியமான வழியில் ஏராளமான மாற்றங்கள் நிகழலாம்.
எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஒன்பது மாதங்கள் விண்வெளியில் இருப்பார்கள் என்று யாரும் நினைத்து பார்க்கவில்லை.
அவர்கள் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அன்று விண்வெளிக்கு சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர்கள் இல்லாமல், இந்த விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் அவர்கள் விண்வெளியில் தங்கியிருப்பது எதிர்பார்த்ததை விட நீண்டது .
அவர்கள் இருவரும், விண்வெளிப் பயணத்தின் கடுமைகளுக்குப் புதியவர்கள் அல்ல. அவர்கள் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள். ஆனால் விண்வெளியின் விசித்திரமான, குறைந்த ஈர்ப்பு விசை சூழலில், நீண்ட நேரம் இருந்ததால் அவர்களின் உடலில் தற்போது பாதிப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
விண்வெளியில் நீண்ட நேரம் தங்கியிருந்தால், உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதைப் புரிந்துகொள்ள, நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்தவர்களை ஆராய வேண்டும்.
நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓராண்டுக்கும் மேலாக அதாவது 371 நாட்கள் தங்கியிருந்தார். இதன் மூலம் அவர் ஒரே பயணத்தில் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிருந்த அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவரும் அவரது குழுவினரும் பூமிக்கு திரும்பவிருந்த விண்கலத்தின் குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது. இதனால், இதற்கு முன்பு அமெரிக்க சாதனையான 355 தொடர்ச்சியான நாட்களை முறியடித்தது, அவர் விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
அவர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் நீண்டகாலம் இருந்ததால், அவர் பூமியின் சுற்றுப்பாதையை மொத்தம் 5,963 முறை சுற்றி வந்தார்.
ஒரே விண்வெளி பயணத்தில் நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற சாதனையை 1990களில் ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி பாலியாகோவ் கைப்பற்றினார். அவர் 437 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.
ஃபிராங்க் ரூபியோ இன்னும் இரண்டு மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்தால் வலேரி பாலியாகோவின் சாதனையை முறியடித்திருக்கலாம்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஒலெக் கொனோனென்கோ மற்றும் நிகோலாய் சப் ஆகிய இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், 374 நாட்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் கழித்த பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிக நீண்ட காலம் தங்கிய சாதனையை படைத்தனர் . இவர்கள் சோயுஸ் MS-25 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்திறங்கினர்.
கஜகஸ்தானில் இந்த விண்கலம் தரையிறங்கிய பிறகு, விண்வெளி வீரர் கோனோனென்கோ மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தூசி மேகத்திற்கு நடுவே தரையிறங்கிய விண்கலத்திலிருந்து வெளியே வந்த பிறகு, பரந்த அளவில் புன்னகைத்துக் கொண்டே அவர் இரண்டு கட்டைவிரலை உயர்த்தினார். மொத்தமாக 1,111 நாட்கள் விண்வெளியில் தங்கி, நீண்ட காலம் விண்வெளியில் இருந்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவர்களது சமீபத்திய பயணத்தில், கோனோனென்கோவும் சப்பும் பூமியின் சுற்றுப்பாதையை 5,984 முறை சுற்றிவந்தனர் மற்றும் 158 மில்லியன் மைல்களுக்கு மேல் பயணம் செய்தனர். ஆனால் விண்வெளியில் குறைந்த ஈர்ப்பு விசை இருக்கும் சூழலில் இவ்வளவு நேரம் செலவிடுவது அவர்களின் உடல்களைப் பாதித்தது, எனவே பூமிக்கு அவர்கள் திரும்பிய போது, அவர்களை குழுவினர் விண்கலத்தில் இருந்து வெளியே வர உதவி செய்யவேண்டியதாக இருந்தது.
விண்வெளியில் ரூபியோவின் நீண்ட கால பயணம், மனிதர்கள் நீண்ட கால விண்வெளிப் பயணத்தை எவ்வாறு சமாளிக்க முடியும், அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளை வழங்கியது. குறைந்த உடற்பயிற்சி உபகரணங்களுடன் உடற்பயிற்சி செய்வது மனித உடலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த ஆராய்ச்சியில் பங்கேற்ற முதல் விண்வெளி வீரர் இவர்தான்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் இந்த முடிவுகள் மிகவும் முக்கியமானது. மனிதர்கள் விண்வெளியில் ஆய்வு பயணங்களை திட்டமிட இது உதவியாக இருக்கும்.
உதாரணமாக, செவ்வாய் கிரகத்திற்கு செல்ல திட்டமிட்டால், அதற்கு சுமார் 1,100 நாட்கள் (மூன்று ஆண்டுகளுக்கு மேல்) ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி வீரர்கள் பயணிக்கும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைவிட மிக சிறியதாக இருக்கும், அதனால் விண்வெளி வீரர்களின் உடல்நலத்தை பேண சிறிய, இலகுரக உடற்பயிற்சி உபகரணங்கள் தேவைப்படும்
ஆனால் உடற்தகுதியை பராமரிப்பதில் உள்ள சிக்கல்களைத் தவிர்த்து, விண்வெளிப் பயணம் மனித உடலுக்கு என்ன செய்கிறது?
பட மூலாதாரம், Getty Images
தசைகள் மற்றும் எலும்புகள்
விண்வெளியில் தொடர்ந்து ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இருக்கும்போது, தசை மற்றும் எலும்புகளின் நிறை விரைவாக குறையத் தொடங்குகிறது. முதுகு, கழுத்து, கெண்டைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள, நமது உடல் அமைப்பை தீர்மானிக்க உதவும் தசைகளை மிகவும் பாதிக்கின்றன. இதுபோன்ற சூழலில் அவை கடினமாக உழைக்க வேண்டியதில்லை மற்றும் தேய்மானம் அடையத் தொடங்குகின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு தசை நிறை 20% வரை குறையலாம், மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான நீண்ட பயணங்களில் அது 30% வரை குறையலாம்.
இதேபோல், விண்வெளி வீரர்கள் ஈர்ப்பு விசையுடன் பூமியில் இருக்கும்போது, தங்களின் எலும்புகளை பயன்படுத்துவதுபோல, விண்வெளியில் பயன்படுத்தாததால், அவர்களின் எலும்புகளில் உள்ள சத்துகள் நீங்கி, அவை வலிமையை இழக்கத் தொடங்குகின்றன. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் செலவிடும் ஒவ்வொரு மாதமும் 1-2% எலும்பு நிறை இழக்க நேரிடும். 6மாத காலத்தில் 10% வரை இழக்க நேரிடும் (பூமியில், வயதான ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு ஆண்டும் 0.5%-1% என்ற விகிதத்தில் எலும்பு நிறை இழக்கிறார்கள்).
இது எலும்பு முறிவுகளால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் காயம் ஏற்பட்டால் அது குணமடைய எடுக்கும் நேரத்தை அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பிய பிறகு அவர்களின் எலும்பு நிறை இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.
இவ்வாறு நடக்காமல் இருக்க, விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது, ஒரு நாளைக்கு 2.5 மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் தீவிர பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ‘ஜிம்மில்’ நிறுவப்பட்ட ஒரு உடற்பயிற்சி சாதனத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியான டெட்லிஃப்ட்கள், பெஞ்ச் பிரஸ்கள் போன்ற உடற்பயிற்சிகள் அடங்கும். தங்கள் எலும்புகளை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சப்ளிமெண்ட்களையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் .
இருப்பினும், இந்த உடற்பயிற்சி முறை கூட தசை செயல்பாடு மற்றும் தேய்மானத்தை தடுக்க போதுமானதாக இல்லை என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று விளக்குகிறது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தசை இழப்பைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க, அதிக எடையைத் தூக்குதல் மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்தல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை முயற்சிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வு பரிந்துரைத்தது.
விண்வெளி வீரர்களின் உடல்களை கீழே இழுக்கும் ஈர்ப்பு விசை இல்லாததால், அவர்கள் விண்வெளியில் இருக்கும்போது அவர்களின் முதுகெலும்புகள் சற்று நீண்டு அவர்களின் உயரம் சற்று அதிகரிப்பதை உணரலாம். இது விண்வெளியில் முதுகுவலி மற்றும் பூமிக்கு திரும்பியதும் டிஸ்க் விலகுதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு, விண்வெளி வீரர் ரூபியோ தனது முதுகெலும்பு விண்வெளியில் நீண்டு வருவதாகக் கூறினார்.
‘எனது முதுகெலும்பு வெகுவாக நீண்டுவிட்டதால், நான் என் இருக்கையை விட்டு நகரவே முடியவில்லை”, என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
உடல் எடை இழப்பு
விண்வெளி சுற்றுப்பாதையில் எடைக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும், விண்வெளியில் பொருட்கள் மிதந்தாலும், அங்கு புவியீர்ப்பு விசை மிகக் குறைவாக இருப்பதால், விண்வெளி வீரர்களுக்கு ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது இன்னும் கடினமான சவாலாக உள்ளது. நாசா தனது விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையான சத்தான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முயற்சித்தாலும், விண்வெளி பயணமானது ஒரு விண்வெளி வீரரின் உடலை பாதிக்கலாம்.
நாசா விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 340 நாட்கள் தங்கியிருந்தார். அவரது இரட்டை சகோதரர் பூமியில் இருந்தார். இவர்கள் நீண்ட கால விண்வெளிப் பயணத்தின் விளைவுகள் குறித்த மிக விரிவான ஆய்வில் பங்கேற்றனர். இரட்டை சகோதரர்கள் என்பதால், ஆராய்ச்சியாளர்கள் அவர்களை ஒப்பிட முடிந்தது. விண்வெளியில் இருந்த ஸ்காட் கெல்லி, தனது உடல் எடையில் 7% இழந்தார்.
கண் பார்வை
பூமியில், ஈர்ப்பு விசை நம் உடலில் உள்ள ரத்தத்தை கீழ்நோக்கி செல்ல உதவுகிறது, அதே நேரத்தில் இதயம் அதை மீண்டும் மேல் நோக்கி செலுத்த உதவுகின்றது. விண்வெளியில் இருக்கும்போது இந்த செயல்முறை பாதிப்பு அடைகிறது, இதனால் வழக்கத்தை விட அதிகமாக தலையில் ரத்தம் சேரக்கூடும்.
சிறிதளவு ரத்தம் கண்ணின் பின்புறம் மற்றும் பார்வை நரம்பைச் சுற்றி தேங்கி, வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் பார்வையில் சில மாற்றங்கள் நிகழலாம். அதாவது பார்வையின் தெளிவு குறைதல் மற்றும் கண்ணின் அமைப்பில் கூட மாற்றங்கள் ஏற்படலாம்.
இந்த மாற்றங்கள் விண்வெளியில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஏற்படத் தொடங்கலாம். சில பிரச்னைகள் பூமிக்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள் சரியாகிவிடுகின்றன, ஆனால் சில பிரச்னைகள் நிரந்தரமாகத் தொடர்கின்றன.
விண்மீன் காஸ்மிக் கதிர்கள் மற்றும் ஆற்றல்மிக்க சூரிய துகள்களின் வெளிப்பாடு மற்ற கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்படவும் வழிவகுக்கும். பூமியின் வளிமண்டலம் இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. ஆனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தவுடன், இந்த பாதுகாப்பு மறைந்துவிடும். அதிகப்படியான கதிர்வீச்சைத் தடுக்க விண்கலத்தில் பாதுகாப்பு கவசங்கள் இருந்தாலும், விண்வெளி வீரர்கள் தங்கள் கண்களில் ஒளிக்கீற்றுகளைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
நரம்பியல் மண்டல மாற்றம்
இருப்பினும், விண்வெளியில் நீண்டகாலம் தங்கிய பிறகு, கெல்லியின் அறிவாற்றல் செயல்திறன் சிறிதளவு மாறியுள்ளதும், பூமியில் அவரது சகோதரர் இருந்ததைப் போலவே ஒப்பீட்டளவில் அப்படியே இருப்பதும் கண்டறியப்பட்டது. இருப்பினும், அவர் பூமிக்கு வந்த பிறகு சுமார் ஆறு மாதங்களுக்கு கெல்லியின் அறிவாற்றல் செயல்திறனின் வேகமும் துல்லியமும் குறைந்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர், ஒருவேளை அவரது மூளை பூமியின் ஈர்ப்பு விசைக்கும், பூமிக்கு திரும்பிய அவரது மிகவும் மாறுபட்ட வாழ்க்கை முறைக்கும் ஏற்ப அவரது உடல் செயல்பட்டிருக்கலாம் .
2014 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 169 நாட்கள் தங்கியிருந்த ஒரு ரஷ்ய விண்வெளி வீரரைப் பற்றிய ஒரு ஆய்வில், விண்வெளியில் இருக்கும் போது மூளையில் சில மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
மூளையின் சில பகுதிகளில் மோட்டார் செயல்பாடு தொடர்பான நரம்பியல் இணைப்பு அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. விண்வெளியில் இருக்கும் போது இயக்கம், சமநிலை மற்றும் உணர்வில் முக்கிய பங்கு வகிக்கும் வெஸ்டிபுலர் கார்டெக்ஸிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈர்ப்பு விசை இல்லாமல் விண்வெளியில் எப்படி நகர்வது என்பதை விண்வெளி வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வாறு நிலையாக நிற்க வேண்டும், “மேல்” அல்லது “கீழ்” இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நீண்ட கால விண்வெளி பயணங்களின் போது மூளையின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிற மாற்றங்கள் குறித்த கவலைகளை மிக சமீபத்திய ஆய்வு எழுப்பியுள்ளது. மூளையில் உள்ள வலது பக்கவாட்டு மற்றும் மூன்றாவது வென்ட்ரிக்கிள்கள் (செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சேமித்து, மூளைக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, கழிவுகளை அகற்றுவதற்குப் பொறுப்பானவை) எனப்படும் பகுதிகள் வீங்கக்கூடும். அவை இயல்பு நிலைக்கு திரும்ப மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம்.
நன்மை தரும் பாக்டீரியா
நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் அமைப்பு, நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய திறவுகோலாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இருந்து தெளிவாகிறது. இந்த நுண்ணுயிரியானது, நாம் உணவை எவ்வாறு ஜீரணிக்கிறோம், உடலில் ஏற்படும் வீக்கத்தின் அளவு, மூளை செயல்படும் விதம் போன்றவற்றை பாதிக்கின்றது.
ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு, அவரை பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள், அவர் உண்ட உணவும், அவர் விண்வெளியில் தனது நாட்களைக் கழித்த மக்களிடையே ஏற்பட்ட மாற்றமும் ( நாம் அருகில் வசிக்கும் மக்களிடமிருந்து அதிக அளவு குடல் மற்றும் வாய்வழி நுண்ணுயிரிகளைப் பெறுகிறோம் ) இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதினர். ஆனால் கதிர்வீச்சுக்கு ஆளாவது மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவது ஆகியவைகூட காரணிகளாக இருக்கலாம்.
தோல்
நாசா விண்வெளி வீரர்கள் ஐந்து பேர் இதுவரை 300 நாட்களுக்கு மேல் விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்திருந்தாலும், அங்கிருந்த வேளையில் அவரது தோல் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த தகவல்கள் ஸ்காட் கெல்லி மூலமாகவே கிடைத்தது.
அவர் விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு சுமார் ஆறு நாட்களுக்கு அவரது தோல் அதிக உணர்திறனுடன் இருந்தது, மேலும் அரிப்பு புண்கள் காணப்பட்டன. விண்வெளி பயணத்தின் போது அவரது தோலில் போதுமான தொடுதல் அல்லது உணர்வு இல்லாதது, தோல் பிரச்னைகள் வர காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், NASA
மரபணுக்கள்
கெல்லியின் விண்வெளிப் பயணத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, அவரது மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள். மரபணுவின் ஒரு இழையின் முடிவிலும் டெலோமியர்ஸ் எனப்படும் கட்டமைப்புகள் உள்ளன, அவை நமது மரபணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் என்று கருதப்படுகிறது. நாம் வயதாகும்போது, இவை குறைகின்றன.
ஆனால் கெல்லி மற்றும் பிற விண்வெளி வீரர்கள் மீதான ஆராய்ச்சி, விண்வெளிப் பயணம் இந்த டெலோமியர்களின் நீளத்தை மாற்றுவதாகத் தெரிகிறது என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விண்வெளிப் பயணத்தின்போது டெலோமியர்கள் கணிசமாக நீளமாக இருப்பது கண்டறியப்பட்டது,” என்று கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கதிரியக்க சுகாதார பேராசிரியர் சூசன் பெய்லி கூறுகிறார், அவர் கெல்லி மற்றும் அவரது சகோதரர் மீதான ஆராய்ச்சி குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.
எதிர்பாராத விஷயம் என்னவென்றால், அனைத்து குழு உறுப்பினர்களும் பூமிக்குத் திரும்பியவுடன் டெலோமியர் நீளம் வேகமாக சுருங்கியது. நீண்ட கால உடல்நலம் மற்றும் வயதடைவதற்கு குறிப்பாக தொடர்புடைய வகையில், விண்வெளி வீரர்களுக்கு விண்வெளிப் பயணத்திற்கு முன்பு இருந்ததை விட விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு குறுகிய நீளத்தில் டெலோமியர்கள் பல இருந்தன”, என்றும் அவர் தெரிவித்தார்.
இது ஏன் நடக்கிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.
“எங்களுக்கு சில ஊகங்கள் உள்ளன, ஆனால் ஒரு வருடம் விண்வெளியில் இருந்த விண்வெளி வீரர் ரூபியோ போன்ற நீண்ட காலம் விண்வெளியில் இருந்தவர்கள் இந்த எதிர்வினை மற்றும் அதன் சாத்தியமான விளைவுகளை உண்மையில் வகைப்படுத்துவதற்கும் புரிந்துகொள்வதற்கும் முக்கியமானவர்களாக இருப்பார்கள்”, என்று பேராசிரியர் சூசன் பெய்லி கூறுகிறார்.
விண்வெளியில் நேரடியான கதிர்வீச்சுக்கு ஆளாவது ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம். விண்வெளியில் நீண்ட காலத்திற்கு கதிர்வீச்சில் இருப்பது விண்வெளி வீரர்களின் மரபணுக்களில் சேதத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
கெல்லி, விண்வெளியில் இருந்தபோது அவரது உடல் புரதங்களை வித்தியாசமாக உருவாக்கத் தொடங்கியது. மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படும் புரத உற்பத்தியில் ஏற்பட்ட இந்த மாற்றம் அவரது மரபணுக்களிலும் மாற்றங்களை கொண்டுவந்தன. இந்த மாற்றங்கள் மரபணு பழுதுபார்ப்பு, எலும்பு வளர்ச்சி மற்றும் அவரது உடல் மன அழுத்தத்தை எவ்வாறு கையாண்டது போன்ற விஷயங்களைப் பாதித்தன. அவர் பூமிக்குத் திரும்பிய ஆறு மாதங்களுக்குள் இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை இயல்பு நிலைக்குத் திரும்பின.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், ஆண்களின் மற்றும் பெண்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகள் விண்வெளிப் பயணத்திற்கு வெவ்வேறு விதமாக செயல்படுவதை எடுத்துக்காட்டியது.
2021 ஆம் ஆண்டு, மூன்று நாட்களுக்கு குறைவாக விண்வெளியில் இருந்த ஸ்பேஸ்எக்ஸ் இன்ஸ்பிரேஷன் 4 பயணக் குழுவினரிடமிருந்து பெறப்பட்ட மாதிரி மரபணு வெளிப்பாட்டு தரவைப் பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பு, வயதடைவது மற்றும் தசை வளர்ச்சி தொடர்பான 18 புரதங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதற்கு முன்பு விண்வெளிக்கு சென்ற மற்ற 64 விண்வெளி வீரர்களின் மரபணு செயல்பாட்டை ஒப்பிடுகையில், விண்வெளி விண்வெளி வீரர்களின் மரபணு செயல்பாட்டை ஒப்பிடுகையில், வீக்கத்துடன் தொடர்புடைய மூன்று புரதங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆண்கள் விண்வெளிப் பயணத்திற்கு அதிக பாதிப்பு அடைந்தவர்களாக இருந்தனர், அவர்களின் மரபணு செயல்பாட்டில் அதிக சேதம் ஏற்பட்டது, மேலும் பூமிக்குத் திரும்பிய பிறகு அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்தனர்.
குறிப்பாக, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் இன்டர்லூகின்-6 மற்றும் நோய் எதிர்ப்பு செல்களை தொற்று ஏற்படும் இடத்திற்கு அனுப்ப உற்பத்தி செய்யப்படும் இன்டர்லூகின்-8 ஆகிய இரண்டு புரதங்களின் மரபணு செயல்பாடும், பெண்களை விட ஆண்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ரத்த உறைதலில் ஈடுபடும் ஃபிர்பிரினோஜென் எனப்படும் மற்றொரு புரதமும் ஆண் விண்வெளி வீரர்களிடமும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது.
விண்வெளி தொடர்பான இந்த மாற்றங்களால் பெண்கள் ஏன் குறைவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவில்லை. பெண்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதன் காரணமாக இவ்வாறு ஏற்பத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
நோய் எதிர்ப்பு அமைப்பு
கெல்லி விண்வெளிப் பயணத்திற்கு முன்பும், பயணத்தின் போதும், பயணத்திற்குப் பிறகும் தொடர்ச்சியான தடுப்பூசிகளைப் பெற்றார், அவரது நோயெதிர்ப்பு அமைப்பு சாதாரணமாக செயல்படுவதாகக் கண்டறியப்பட்டது.
ஆனால் பெய்லியின் ஆராய்ச்சி, விண்வெளி வீரர்கள் சுற்றுப்பாதையில் இருக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவுகளுக்கு ஏற்ப வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளது. 371 நாட்கள் விண்வெளியில் இருந்த ரூபியோவின் மருத்துவ பரிசோதனைகள், ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்கேன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆரையும்போது, அவர்கள் மேலும் அறிந்துகொள்ள முடியும் என்று நிச்சயமாக நம்புவார்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.