படக்குறிப்பு, சுப்மன் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்தாலும், டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான (T20 World Cup 2026) இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது இந்தத் தேர்வில் மிகவும் ஆச்சரியமான விஷயமாகக் கருதப்படுகிறது.
இஷான் கிஷன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர், அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமூக ஊடக தளமான எக்ஸில் பகிர்ந்துள்ளது.
இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார், துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார், துணை கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கில் நீக்கப்பட்டது குறித்து தலைமைத் தேர்வாளர் அகர்கர் என்ன சொன்னார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுப்மன் கில் அணியில் இடம் பெறவில்லை.
அணித் தேர்வில் சுப்மன் கில் இல்லாதது குறித்து எழுந்த கேள்விகளுக்கு முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் பதிலளித்தார்.
“சுப்மன் கில் ஒரு தரமான வீரர் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், தற்போது அவர் எடுக்கும் ரன்களின் எண்ணிக்கை சற்றே குறைவாக உள்ளது. கடந்த உலகக் கோப்பையிலும் அவர் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. அப்போது நாங்கள் வேறு ஒரு அணியுடன் விளையாடினோம்.
உண்மையில், வேறு எதனையும் விட அணியின் கட்டமைப்பு முக்கியமானது. 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுக்கும்போது, யாராவது ஒருவரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை அந்த வீரர் கில்.” என்றார் அவர்.
இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், “கில் அணியில் இடம்பெறாததற்கும் அவரது ஃபார்மிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. உண்மையில், டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.
ஜிதேஷ் சர்மாவும் வெளியேற்றப்பட்டார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இடம் பெறவில்லை.
ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இதே அணிதான் விளையாடும்.
அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ (BCCI) தேர்வுக் குழுவின் முடிவுகளில், சுப்மன் கில் குறித்த முடிவு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது.
இருப்பினும், இஷான் கிஷன் அணியில் இடம் பிடித்திருப்பதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இஷான் கிஷன் தனது கடைசி டி20 போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளையாடினார். தேர்வுக் குழு ரிங்கு சிங் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் அளித்துள்ளது.
அணி தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ன சொன்னார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி மிகவும் சிறப்பாக இருப்பதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் உட்பட பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ரகள் அணி தேர்வு குறித்து எதிர்வினையாற்றியுள்ளனர்.
“அணி மிகவும் நன்றாக இருக்கிறது. இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேலை அணியில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2024 உலகக் கோப்பை வெற்றியில் அக்சர் படேல் முக்கியப் பங்கு வகித்தார். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்,” என்று வெங்கடேஷ் பிரசாத் சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
“அணியில் இடம் பெறாமல் போனதற்கு, தான் என்ன தவறு செய்தோம் என்று ஜிதேஷ் சர்மா நிச்சயம் சிந்திப்பார். உலகக் கோப்பையை வெல்ல சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இருப்பது அவசியம். உலகக் கோப்பைக்கு முன்னதாக அதிக ரன்களைக் குவிக்க, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் ரன் எடுப்பார் என்று நம்புகிறேன்,” என இதனைக் குறித்து இர்ஃபான் பதான் தனது பதிவில் கூறியிருந்தார்.
பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும், அணித் தேர்வு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் “தேர்வு செய்யப்பட்ட அணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கில்லை நீக்கியது ஒரு பெரிய முடிவு. இது ‘நெருப்பும் பனியும்’ ( Fire and Ice) என்பதற்குப் பதிலாக ‘நெருப்பும் நெருப்பும்’ (Fire and Fire) என்ற அணுகுமுறைக்கு அணி மாறியுள்ளதைக் காட்டுகிறது.”
“இஷான் கிஷன் தற்போது இருக்கும் ஃபார்மில் அவரைப் புறக்கணிப்பது கடினம். துரதிர்ஷ்டவசமாக இதனால் ஜிதேஷ் வெளியேற வேண்டியதாயிற்று, அவருக்காக நான் வருந்துகிறேன். ஆனால் ரிங்கு ஒரு சிறந்த வீரர். இந்த முடிவு அணியை இடது கை பேட்ஸ்மேன்களை அதிகம் சார்ந்திருக்கச் செய்கிறது, ஆனால் இது ஒரு துணிச்சலான முடிவின் இயல்பான விளைவு.” என்று கூறியிருந்தார்.
“உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜிதேஷ் சர்மா தான் செய்த தவறு என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ரிங்கு மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார். இஷானை அணியில் கண்டது மகிழ்ச்சி. இரண்டு விக்கெட் கீப்பர்களும் பேட்டிங் வரிசைக்கு பொருத்தமானவர்கள். அக்சர் படேல் துணை கேப்டனாக திரும்பியுள்ளார். கில்லுடனான பரிசோதனை முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.” என்று வர்ணனையாளரும் விளையாட்டு ஆய்வாளருமான ஆகாஷ் சோப்ரா பதிவிட்டிருந்தார்.