படக்குறிப்பு, 64 வயதான சுப்ரமணியம் “சுப்பு” வேதம் என்பவர் 1983-ஆம் ஆண்டு தனது அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தார்.கட்டுரை தகவல்
எழுதியவர், ஷெரிலன் மொல்லன்
பதவி, பிபிசி நியூஸ், மும்பை
அமெரிக்காவில் செய்யாத கொலைக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்துவதற்கு இரு வெவ்வேறு அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
64 வயதான சுப்ரமணியம் “சுப்பு” வேதம் என்பவர் 1983-ஆம் ஆண்டு தனது அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டார். ஆனால் அந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைக்கவே கடந்த அக்டோபரில் விடுதலை செய்யப்பட்டார்.
வேதம் விடுதலையான உடனே அமெரிக்கா குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐசிஇ) அவரை மீண்டும் விசாரணைக்கு எடுத்து இந்தியாவிற்கு நாடு கடத்தப் போவதாகத் தெரிவித்தது.
வேதம் இந்தியாவில் பிறந்தாலும் அவருக்கு 9 மாதங்கள் இருந்தபோதே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து விட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் நிரந்தர சட்டப்பூர்வ குடியேறியான அவரின் குடியுரிமை விண்ணப்பம் அவர் கைது செய்யப்படுவதற்காக முன்பாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சுப்புவை விடுதலை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் அவரின் சகோதரி சரஸ்வதி வேதம் பேசுகிறார்.
தற்போது லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் வேதம் சிறை வைக்கப்பட்டுள்ளார். இங்கு நாடு கடத்துவதற்கான விமான தளம் அமைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அவரை நாடுகடத்துவதற்கு ஒரு குடியேற்ற நீதிபதி தடை விதித்தார். மற்றுமொரு போதை பொருள் தொடர்பான வழக்கில் அவருடைய தண்டனையை மறுஆய்வு செய்வது தொடர்பாக குடியேற்ற முறையீட்டு வாரியம் முடிவு செய்யும் வரை அவரை நாடு கடத்தக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே தினம் பென்சில்வேனியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திலும் அவரை நாடு கடத்துவதற்கு எதிராக தடை உத்தரவை அவரின் வழக்கறிஞர்கள் பெற்றுள்ளனர்.
வேதமுடன் தங்கியிருந்த நபரின் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறை விசாரித்தபோது போதை பொருள் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டதாகவும் அசோசியேடட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
கொலை குற்றத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையுடன் போதை பொருள் குற்றச்சாட்டில் தனியாக இரண்டரை ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம், ஐசிஇ அதிகாரிகள் வேதமை கைது செய்தபோது 1988-இல் விதிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவு மற்றும் போதை பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை ஆகியவற்றை கைதுக்கான காரணமாகத் தெரிவித்தனர்.
கொலை குற்றத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும் போதை பொருள் வழக்கில் அவரின் தண்டனை தற்போதும் அமலில் உள்ளதாகவும் சட்டப்பூர்வ உத்தரவின் அடிப்படையில் தான் செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது கொலை குற்றத்தில் தவறாக அவர் சிறையில் கழித்த காலத்தை போதை பொருள் வழக்கின் தண்டனையில் கழித்துக் கொள்ள வேண்டும் என வேதமின் வழக்கறிஞர்கள் குடியேற்ற நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டிய சூழல் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
போதை பொருள் வழக்கை மறு ஆய்வு செய்யலாமா என குடியேற்ற மேல்முறையீட்டு வாரியம் முடிவு செய்வதற்கு பல மாதங்கள் ஆகிவிடும்.
இந்த வழக்கு “உண்மையில் அசாத்தியமானது” என வேதமின் வழக்கறிஞரான அவா பெனாச் ஏபி செய்தி முகமையிடம் கூறினார்.
“43 ஆண்டு கால தவறான சிறைவாசம் அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சமமாகிவிடும்.” என்றும் அவர் தெரிவித்தார்.
அவரின் நன் நடத்தை, சிறையில் இருந்தவாறே பெற்ற மூன்று பட்டங்கள் மற்றும் சமூக சேவைகள் என அனைத்தையும் அவரின் வழக்கை விசாரிக்கின்றபோது குடியேற்ற நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என வேதமின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஐசிஇ அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாகக் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் வேதமுக்கு பெரிய அளவில் தொடர்புகள் இல்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
“அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி, அதிகம் பழக்கமானவர்கள் இல்லாத ஒரு நாட்டுக்கு அனுப்புவது, ஏற்கெனவே பெரும் அநீதி இழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு இன்னொரு பெரிய தவறு செய்ததாக ஆகிவிடும்,” என அவரின் வழக்கறிஞர் பெனாச் முன்னர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
1980-இல் நிகழ்ந்த கொலை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தன்னுடைய அறையில் தங்கியிருந்த 19 வயது கல்லூரி மாணவர் டாம் கிஸ்னரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார் வேதம்.
காணாமல் போயிருந்த கிஸ்னரின் உடல் 9 மாதங்கள் கழித்து மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மண்டையோட்டில் துப்பாக்கி குண்டு தாக்கிய காயம் இருந்தது.
கிஸ்னரைக் கொன்றதாக வேதம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவருடைய கடவுச்சீட்டு, கிரீன் கார்ட் இரண்டும் கைப்பற்றப்பட்டு, ‘தப்பிச்செல்ல வாய்ப்புள்ள வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்தப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட தனி வழக்கு ஒன்றில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதை அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையோடு சேர்ந்து ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு முடிவு செய்யப்பட்டிருந்தது.