சென்னை: தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் மற்றும் முதல் தளம் அல்லது, ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்கள் அதிகபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கட்டிடமாக இருக்க வேண்டும். இந்த கட்டிடம் கட்டவோ, மறு கட்டுமானம் செய்யவோ அனுமதி பெறுவதற்கு, நில உரிமையாளர், நில குத்தகைதாரர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.
விண்ணப்பம் அளிக்கும்போது, மனை இடத்தின் புகைப்படம், நில உரிமையாளர் என்பதற்கான சுயசான்றிட்ட விற்பனை பத்திரம், சுய சான்றிட்ட பட்டா அல்லது டவுன் சர்வே நில பதிவேடு ஆவணம், மனைப்பிரிவு அனுமதி அல்லது உட்பிரிவு அனுமதிக்கான ஆவணம், மனைப் பிரிவு வரன்முறை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
கட்டிடத்துக்கு தயாரிக்கப்பட்ட வரைபடம் தொடர்பானவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றை ‘ஏ4’ தாளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் உண்மையானது என விண்ணப்பதாரர் சான்றளிக்க வேண்டும். இதுதவிர, சுயசான்று கட்டிடத்துக்கு விண்ணப்பிக்கும் நிலையில் மனை இடத்தை சுற்றிலும் உள்ள சாலை அளவு, அதிகபட்ச உயரம், தளப்பரப்பு குறியீடு, குறைந்தபட்சமாக சுற்றிலும் விடப்பட வேண்டிய இடத்தின் அளவு ஆகியவையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர் கட்டிடம் அமையும் பகுதி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு பகுதியாக இருந்தால் 1.5 மீட்டரும், இதர பகுதிகளில் 3 மீட்டரும் சாலை அகலம் இருக்க வேண்டும். அதிகபட்ச உயரம் 10 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச தளப்பரப்பு குறியீடு 2 மடங்காகும்.
மேலும், சாலை அடிப்படையில் சுற்றிலும் விடப்பட வேண்டிய இடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டிடத்தின் முன்புறம் மனையின் உள்ளே, தொடர் கட்டிடப் பகுதி மற்றும் இதர பகுதிகளில் 1.5 மீட்டர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவாக இருந்தால் 1 மீட்டர் விடப்பட வேண்டும். கட்டிடம் 7 மீட்டர் உயரத்துக்குள் இருந்தால், தொடர் கட்டிடப் பகுதி, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவுக்கு இருபுறமும் இடம்விடவேண்டாம். மனை அகலம் 9 மீட்டர் வரை இருந்தால் ஒரு பக்கத்துக்கு 1 மீட்டரும், 9 மீட்டருக்கு அதிகமாக இருந்தால், இருபுறமும் தலா 1 மீட்டர் அல்லது ஒருபுறம் 2 மீட்டர் இடம் விடவேண்டும். கட்டிடத்தின் உயரம் 7 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை இருந்தால், மனை அகலம் 9 மீட்டர் வரை, ஒரு புறம் 1 மீட்டரும், 9 மீட்டருக்கு அதிகமாக இருந்தால் இருபுறமும் தலா 1.2 மீட்டரும் இடம் விடவேண்டும். கட்டிட உயரம் 7 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை இருந்தால், பின்புறம் 1 மீட்டர் இடம் விடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.