பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam
பெரியார் துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கடைபிடிக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்தின் பயணம் எப்படித் துவங்கியது? இந்த இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
தமிழ்நாட்டின் அரசியலிலும் பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. வாழ்வின் எல்லா தளங்களிலும் சுயமரியாதையை முன்னிறுத்திய இந்த இயக்கம், அதற்குப் பிந்தைய பல தசாப்தங்களுக்கு தமிழ்நாட்டின் அரசியல், பண்பாடு, மொழி ஆகிய தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகே பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பே இதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. தனது சிந்தனைகளை பரப்புவதற்காக குடிஅரசு என்ற இதழை அதே ஆண்டு மே மாதத்தில் பிரசுரிக்க ஆரம்பித்தார் பெரியார்.
“அந்த காலகட்டம் வரை பெரியார் காங்கிரசின் கருத்தையே எதிரொலித்துவந்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது கருத்துகளில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, அவருடைய சிந்தனைகளுக்கு, எண்ணங்களுக்கு காங்கிரஸ் சார்பான இதழ்களில் இடம்கிடைக்கவில்லை. ஆகவேதான் தனக்கென ஒரு இதழை அவர் துவங்க வேண்டியிருந்தது. அப்படி அவர் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்” என்கிறார் “நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்” நூலை எழுதியவரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஆ. திருநீலகண்டன்.
1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். “ராஜீய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதர், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக ஜனத்தொகை விழுக்காடு தங்கள் சமூகத்திலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்றது அந்தத் தீர்மானம்.
ஆனால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, “காங்கிரஸால் பிராமணரல்லாதார் நன்மை பெற முடியாது. காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை” எனக் கூறிவிட்டு அந்த மாநாட்டை விட்டு வெளியேறினார் பெரியார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு.
ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை பிரசுரித்தார். அந்தக் கட்டுரையில் “சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது.
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam
காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது போன்ற விஷயங்களை தொடர்ந்து பேசிவந்தார். இதற்குப் பிறகு, 1926ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பட்டியலிட்டார். “மனிதர்களிடம் ஏற்றத் தாழ்வு கூடாது, தீண்டாமை – சேர்க்காமை போன்றவற்றுக்கு இடமேயில்லை, மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்கும் சடங்குகளும் ஜாதிகளும் வேறோடு களையப்பட வேண்டும். தன்மான உணர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் ஒவ்வொருவருக்கும் வேண்டும், எதிர்காலம் அறிவியலுக்கு உரியதே அல்லாமல், மதத்திற்கு உரியது அல்ல” உள்ளிட்டவை அந்தக் கொள்கைகளாக இருந்தன. பெரியாரின் பேச்சும் செயல்பாடுகளும் ஒரு இயக்கமாக மாறியதை இந்த மாநாடு குறித்தது.
காங்கிரசைவிட்டு வெளியேறியிருந்தாலும் 1925-26 காலகட்டத்தில் காந்தியின் கொள்கைகளையும் பெரியார் ஆதரித்துவந்தார். “நூல் நூற்றல், தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு ஆகியவற்றை காந்தி வலியுறுத்துவது ஊக்கமூட்டுவதாக இருந்ததாக பெரியார் கருதினார்” என ‘அயோத்தி தாசிலிருந்து பெரியார் வரை பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி’ (Towards a non-Brahmin millennium from Iyothee Thass to Periyar) என்ற நூலில் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும் குறிப்பிடுகின்றனர். அதே காலகட்டத்தில் நீதிக் கட்சிக்கும் ஆதரவு காட்டினார் பெரியார்.
இந்த நிலையில், 1927ல் பெங்களூரில் மகாத்மா காந்தியை பெரியார் சந்தித்துப் பேசினார். அப்போது, பிராமணர்கள் குறித்தும் இந்து மதம் குறித்தும் பெரியார் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்கவில்லை. இந்தக் கட்டத்திலிருந்து காந்தியிடமிருந்து விலக ஆரம்பித்தார் பெரியார். இதற்குப் பிறகு தொடர்ந்து சுயமரியாதைக் கொள்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல சிறு கூட்டங்களில் பேச ஆரம்பித்தார் பெரியார். பல இடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. ஆங்காங்கே சில மாவட்ட மாநாடுகளும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில்தான் மாகாண சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் 1929-ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. “அதுவரை சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றுவந்த பணிகளை மதிப்பீடு செய்யும் ஒரு மாநாடாகவும் சட்டதிட்டங்கள், கொள்கை, குறிக்கோள்கள், நிர்வாக அமைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் மாநாடாகவும் இது அமைந்தது” என்கிறது கி. வீரமணி எழுதிய திராவிடர் கழக வரலாறு நூல். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி ஆகியவற்றில் பணியாற்றிய பலரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கொள்கை தொடர்பான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த மாகாண மாநாடு கூடும்வரை இந்த இயக்கத்திற்கு டபிள்யு.பி.ஏ. சவுந்திரபாண்டியன் தலைவராகவும் பெரியாரும் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டாவது, மூன்றாவது மாநாடுகள் ஈரோட்டிலும் விருதுநகரிலும் நடைபெற்றன. 1932ல் பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த பிறகு, சுயமரியாதை இயக்கத்தின் மூலம் சமதர்மக் கொள்கைகளையும் பரப்ப விரும்பினார்.
1932 டிசம்பர் 17, 18-ல் கூடிய மாநாட்டிற்கு ம. சிங்காரவேலர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் சமதர்மக் கொள்கையும் முக்கியமான ஒன்று என தீர்மானிக்கப்பட்டது. இயக்கத்தைச் சேர்ந்த சிலர், சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து சமூகச் சீர்திருத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாலும் இறுதியில் அந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த, இயக்கத்தின் பெயர் ‘சுயமரியாதை சமதர்ம இயக்கம்’ என பெயர் சூட்டப்பட்டது.
இதற்கிடையில் குடியரசு இதழில் இடம்பெற்ற கட்டுரைகளுக்காக அந்த இதழ் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1933ல் புரட்சி என்ற புதிய இதழ் துவக்கப்பட்டது. பிறகு அதுவும் தடைசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு 1934ல் பகுத்தறிவு என்ற புதிய இதழ் துவங்கப்பட்டது. இந்த நிலையில், 1933ல் குடியரசில் இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியதற்காக சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் அங்கு அடைக்கப்பட்டிருந்த ராஜாஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அப்போது, அவர் பெரியாரை மீண்டும் காங்கிரசிற்குத் திரும்ப வேண்டுமென அழைத்தார்.
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam
ஆனால், பெரியாரின் செயல்திட்டத்தை காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அதேநேரத்தில், பொப்பிலி அரசர் போன்றவர்கள் அவர் நீதிக்கட்சிக்கு வர வேண்டுமென்றும் கூறிவந்தனர். இந்த நிலையில், 15 செயல்பாடுகள் அடங்கிய ஒரு பட்டியலை அளித்த பெரியார், அந்தச் செயல்திட்டத்தை ஏற்கும் கட்சியில் இணைவதாகக் கூறினார்.
நீதிக் கட்சி அதனை முழுமையாக ஏற்றது. இருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர்களில் சிலர் அதனை ஏற்கவில்லை. நீதிக் கட்சி பணக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்றாரின் ஆதிக்கம் நிரம்பிய கட்சி எனக் கருதினர். இதனால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பலர் அதிலிருந்து விலகி காங்கிரசில் சேர முயன்றனர். ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், கோவை அய்யாமுத்து போன்றோர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் 1934-ல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பலர் விலகினர். 1937ல் நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பதவியேற்ற ராஜாஜி, எல்லா உயர் நிலைப்பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து பெரியார் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்பு கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார்.
இந்த காலகட்டத்தில்தான் ஈ.வெ. ராமசாமிக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை நாடகக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அவருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து நடத்திய நிலையில் பெரியார் கைது செய்யப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட நடராஜனும் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார்கள். 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜாஜி பதவி விலகினார். இதற்குப் பிறகு பம்பாய் (தற்போது மும்பை) சென்ற பெரியார், அங்கே அம்பேத்கர் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகும் பல ஊர்களுக்குத் தொடர்ந்து பயணம் செய்தார் பெரியார்.
1943ஆம் சேலம் செவ்வாய்ப் பேட்டையில் நடந்த நீதிக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை, தென்னிந்திய திராவிடர் கழகம் என மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். அடுத்த மாநாட்டில் பெயரை மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்தில் நீதிக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. ஏ.பி. பத்ரோ, பி. பாலசுப்ரமணியம், சுந்தர்ராவ் நாயுடு ஆகியோர் இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் தனித்தும் செயல்பட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், 1944 ஆகஸ்ட் 27ஆம் தேதி சேலத்தில் 16வது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் பெயர் மாற்றத் தீர்மானம் சி.என். அண்ணாதுரையின் பெயரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகும் நீதிக் கட்சியைச் சேர்ந்த சிலர், நீதிக் கட்சி என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டனர். சிலர் சுயமரியாதை சங்கம் என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட்டனர்.
“நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் 1944-ல் ஒன்றாக இணைந்தன. அதற்குப் பிறகும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் நீடித்தன என்றாலும்கூட, சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் மிகத் தீவிரமாக பெரியார் இயங்கிய காலகட்டமாக இந்த இரு தசாப்தங்களைக் குறிப்பிடலாம்” என்கிறார் ஆ. திருநீலகண்டன்.
பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam
சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக உருவான தருணத்தில் இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தது. இந்தியாவில் அந்த காலகட்டத்தில் விடுதலை இயக்கமும் உச்சத்தில் இருந்தது. ஆகவே, அப்போது தமிழ்நாட்டில் அரசியல் விடுதலையும் பூகோள விடுதலையுமே மிகத் தீவிரமாக பேசப்பட்ட காலகட்டமாக இருந்தது.
“இந்த காலகட்டத்தில் பெரியார் சமூக விடுதலையையும் அரசியல் விடுதலையையும் சேர்த்துப் பேச ஆரம்பித்தார். பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்கும்போதே, தமிழர்கள் தங்களுக்கான அரசியல் – பூகோள விடுதலையைப் பெற வேண்டும் என அவர் கூறிவந்தார். எல்லோரும் இந்திய தேசிய விடுதலையைப் பேசியபோது, இவர் அதற்கு எதிர் திசையிலான அரசியல் – பூகோள விடுதலையைப் பேசினார்” என்கிறார் அவர்.
காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கி நூறாண்டுகள் ஆகிவிட்டன. பெரியார் மறைந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
“சமூகம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த இயக்கம் இல்லாத மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். வட இந்திய மாநிலங்களில் இங்கிருப்பதைப் போல சாதி சார்ந்த வன்முறைகள் கிடையாது. காரணம், யாரும் அங்கே சாதி கட்டமைப்பைக் கேள்வி கேட்பதே கிடையாது. ஆனால், இங்கே சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிரான குரல்கள் எழுகின்றன. அதைப் பொறுக்க முடியாத ஆதிக்க சக்திகள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்.
அடுத்ததாக, இங்கே சாதிமறுப்புத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நடக்கின்றன. அதற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், ஆதிக்க சக்திகளுக்கு அவை கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இதற்கு பெரியாரின் சிந்தனைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அது சமூக தளத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
பட மூலாதாரம், Facebook/Dravidar Kazhagam
வேறு சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஆ. திருநீலகண்டன். “இந்த இயக்கத்தின் காரணமாகவே தமிழ்நாடு சமூக – பண்பாட்டு விடுதலையில் மிக முக்கியமான இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. சாதிப் பட்டம் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ந்திருக்கிறது. பெரியார் தமிழ் மீது வைத்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களால் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. பகுத்தறிவு சார்ந்த நவீன இலக்கியம் வெளியாகத் துவங்கியது. அம்பேத்கரின் எழுத்துகள் தமிழில் வெளியாயின.
சுயமரியாதை இயக்க காலகட்டத்தில்தான் பெரியார் தன் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கினார். 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான முதல் இதழ் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற பெயரும் வெளியானது. அதற்கு அடுத்த இதழில் வெறும் ஈ.வெ. ராமசாமி என்று மட்டுமே அவரது பெயர் இடம்பெற்றது. அதேபோல, 1929-ல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் சாதிப் பட்டத்தை ஒழிக்கும் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்படி சாதிப் பட்டத்தை ஒழித்தவர்களின் பெயர்கள் அடுத்த குடிஅரசு இதழில் வெளியாயின. 1929லேயே பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் தோன்றும்வரை, தமிழ்நாட்டின் வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகள் பெரும்பாலும் வைதீகம் சார்ந்தவையாகவே இருந்தன. இவற்றையெல்லாம் அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்கினார். அவர் எழுப்பிய எதிர்ப்புகள்தான் எதிர் வைதீக நூல்கள், அவைதீக ஆராய்ச்சிகள், எதிர் பண்பாட்டு நூல்கள் வர வழிவகுத்தன. தமிழைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதன் மூலம் ஒரு முற்போக்கு பண்பாட்டு நகர்வை செய்தார்.
அடிப்படையில், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனரல்லாத சாதியினரை முற்போக்கு திசையில் நகர்த்தியது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்பே வள்ளலார், வைகுண்டர், சென்னை வியாக்கியான சங்கம் ஆகியோர் முற்போக்கு சிந்தனை மரபை உருவாக்கினார்கள். பெரியார் ஐரோப்பிய நவீன சிந்தனையை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்வைத்தார் என்பதுதான் முக்கியம்” ” என்கிறார் ஆ. திருநீலகண்டன்.
சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பாக, இந்தியாவில் அதுபோன்ற இயக்கங்களுக்கு மிகச் சில உதாரணங்களே இருந்தன என்கிறார்கள் வ. கீதாவும் எஸ்.வி. ராஜதுரையும். அவர்களது பிராமணரல்லாதோர் ஆயிரமாண்டு காலத்தை நோக்கி (Towards a Non – Brahmin Millennium) என்ற நூலில் இந்த இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பைப் பற்றிக் கூறும்போது, “மகாத்மா ஜோதிபா பூலே ஒரு முன்னோடிதான்; ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்ற தேசம் முழுமையாக வடிவமைக்கப்படவில்லை. ஆனால், சுயமரியாதைக்கார்களைப் பொறுத்தவரை அவர்கள், தேசியவாத அரசியலின் உச்சகட்டத்தில் செயல்பட வேண்டியிருந்தது. அவர்கள் காந்தியை எதிர்த்து நின்றது மட்டுமல்ல, உரிமை, அதிகாரம், நீதி ஆகியவற்றை பற்றிய தனித்துவமான ஒரு சிந்தனைக் கட்டமைப்பையும் முன்வைத்தனர். சுயமரியாதை என்ற லட்சியத்தால் மட்டுமே பிணைக்கப்பட்ட புதிய வரலாற்றுப் பொருளை உருவாக்கினர்” என்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு