பட மூலாதாரம், ITJP
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலே, 72 மணிநேரம் தடுத்து வைக்கப்படும் உத்தரவு மூலம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில், 72 மணிநேர விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு காணப்படுகின்றது, அதன்பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தும் நீதிமன்ற அதிமதியை பெற்று 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த முடியும். அப்படியில்லை என்றால், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை விடுவிக்க முடியும்” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
பட மூலாதாரம், Getty Images
‘தெளிவான சாட்சியத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைது’
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது.
”காலை 7.50 மணிக்கு பேலியகொடை போலீஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் வைத்து அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டார்” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
”ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் பெறுபேறுகளுக்கு அமைய வெளியான தெளிவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்’ எனவும் அவர் கூறுகின்றார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்தவிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டமைக்கான முழுமையான காரணத்தை வெளியிட முடியாது எனவும், விசாரணைகளின் பின்னரே அதனை கூறும் இயலுமை உள்ளது எனவும் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியா?
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயர் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமையானது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகவா என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.
”இவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே அவரா பிரதான சூத்திரதாரி அல்லது வேறு யாரும் இருக்கின்றார்களா என்பது வெளியாகும்” என சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் சஞ்ஜீவ மெதவத்த தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தடுத்து வைக்கப்படுவாரா?
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக சரத்துக்களுக்கு அமைய அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக பிரதி போலீஸ் மாஅதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
”சட்டப்படி கைது செய்யப்படும் பட்சத்தில் 3 நாட்கள் தடுத்து வைக்க முடியும். போலீஸ் அத்தியட்சகர் ஒருவரினாலேயே கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்”
”இந்த காலப் பகுதியில் வெளியாகும் சாட்சியங்களின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை ஏற்படுமாயின், சட்டத்திலுள்ள சரத்துக்களுக்கு அமைய தடுத்து வைத்து விசாரணை நடத்தும் உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் தெளிவுப்படுத்தினார்.
விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என பிரதி போலீஸ் மாஅதிபர் நம்பிக்கையை வெளியிட்டார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்வேறு வகையில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பிய போதிலும் அவர் கைது செய்யப்பட்டமையை தவிர வேறு எந்தவித தகவல்களையும் உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடவில்லை.
பட மூலாதாரம், Getty Images
சட்டத்தரணி அலி சப்ரி கண்டனம்
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நடு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக சட்டத்தரணி அலி சப்ரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமீன் கோரி ராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் உறுப்பினரான கெலும் மத்துமகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே சட்டத்தரணி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹன்ன அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாரிய சேவையாற்றிய ஒருவர் எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான தமிழ் செல்வத்தை அழிப்பதற்காக அவர் முன்னின்று செயற்பட்ட ஒருவர் எனவும் சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலி அமைப்பின் மற்றுமொரு தலைவரான குமரன் பத்மநாதனை மலேசியாவிற்கு சென்று இந்த நாட்டிற்கு அழைத்து வந்தது சுரேஷ் சலேதான் என கூறிய சட்டத்தரணி, தேசிய பாதுகாப்புடன் விளையாடுவது தகுதியற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
வவுணத்தீவு பகுதியில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தவறான வழியில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தனது தரப்பிற்கு எதிரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவ்வாறான விசாரணைகள் நடத்துவதற்கு எந்தவித சாட்சியங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளின் ஊடாக தனது தரப்பிற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
அசாத் மௌலானா என்ற அரசியல் புகலிட கோரிக்கையாளரினால் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கப்பட்ட நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனூடாக பிரதிவாதிகளுக்கு எந்தவித நியாயமும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு மாத்திரமன்றி, இலங்கை புலனாய்வு பிரிவும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அதனை தவிர்த்துக்கொள்ள போலீஸார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறியதை அடுத்தே இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
சட்டத்தரணி அலி சப்ரியின் அன்றைய வாதங்கள் முடிவுற்ற நிலையில், மேலதிக வாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் தேதி வரை நீதிபதிகள் குழாமினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
செனல் 4 சர்ச்சைக்குள்ளான வீடியோ
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ”அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக 269 பேர் கொலை செய்யப்பட்டார்களா?” என கேள்வி எழுப்பி 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செனல் 4 தொலைக்காட்சியினால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது.
சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) முன்னாள் ஊடக செயலாளராக கடமையாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா, இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக இருந்தார்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் ராணுவ புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுடன் ரகசிய சந்திப்பு இடம்பெற்றதா என இந்த வீடியோவில் கேள்வி எழுப்பப்பட்டது.
இஸ்லாமிய அடிப்படைவாத குழுவிற்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துக் கொடுக்குமாறு 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் விளக்கமறியலில் இருந்த பிள்ளையான் தனக்கு ஆலோசனை வழங்கியதாக அசாத் மௌலானா செனல் 4 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் அப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானினால் தனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சயின் மௌலவி உள்ளிட்ட சிலருக்கு பிணை வழங்கப்பட்டதாகவும், அந்த குழுவிற்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்
புத்தளம் – கரடிபுவல் என்ற பிரதேசத்திற்கு அந்த குழுவை வருகைத் தருமாறு தான் அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தான் அந்த இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் சுரேஷ் சலே வருகைத் தந்திருந்ததாகவும், அதன்பின்னர் வெள்ளை நிற வேனில் சயின் மௌலவி மற்றும் அவரது சகோதரரான சஹாரான் உள்ளிட்ட 6 பேர் வருகைத் தந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த கலந்துரையாடல் மிக நீண்ட நேரம் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
”இலங்கையில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்தும் தேவை ராஜபக்ஷக்களுக்கு உள்ளது. அதுவே கோட்டாபயவிற்கு ஜனாதிபதியாகுவதற்கு உள்ள ஒரே வழியாகும்.” என சுரேஷ் சலே கலந்துரையாடலின் பின்னர் தன்னிடம் கூறியதாகவும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அசாத் மௌலானா கூறினார்.
சுரேஷ் சலேவை வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்சதான் என இந்த வீடியோவில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்
செனல் 4 வீடியோ தயாரிக்கப்பட்டு வெளியிடுவதற்கு முன்னர் அந்த தயாரிப்பு நிறுவனம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கடிதமொன்றின் ஊடாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் 4 குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் கோரியிருந்தனர்.
இந்த கடிதத்திற்கு பதில் வழங்கிய சுரேஷ் சலே, இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் நாட்டை விட்டு வெளியேறியிருந்ததாகவும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த காலப் பகுதியில் தான் மலேசியா உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றியதாகவும், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் இறுதி வரை தான் இந்தியாவின் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி செயலமர்வில் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மலேசியா மற்றும் இந்தியா அதிகாரிகளிடம் ஆராய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பு
2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 260 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 45 பேர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

சுரேஷ் சலே என்பவர் யார்?
மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே 1987ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி இலங்கை ராணுவத்தில் இணைந்துக்கொண்டார்.
அதன்பின்னர் பல மொழி அறிவுகளை கற்றுக்கொண்டமையை அடுத்து, 1993ம் ஆண்டு ராணுவ புலனாய்வு பிரிவிற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாரிஸ் நகரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சுரேஷ் சலே 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை முதல் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
அவர் மீண்டும் நட்டை வந்தடைந்ததன் பின்னர் 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரை, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு புலனாய்வு தொடர்பாளராக கடமையாற்றியிருந்தார்.
அதன்பின்னர் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மலேசியாவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஆலோசகரான கடமையாற்றியிருந்தார்.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நம்பர் மாதம் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு பாடத்திட்டமொன்றை தொடர்ந்ததாக அவரின் சட்டத்தரணி பசுன் வீரசிங்க, செனல் 4 நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2019ம் ஆணடு டிசம்பர் மாதம் முதல் அவர் இலங்கை அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
2024ம் ஆண்டு அவர் அரச புலனாய்வு பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு