சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்; காஷ்மீரில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என்று இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு ராணுவமும் காவல்துறையும் அனுப்பப்பட்டுள்ளதாக பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
“இது சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். இதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்”, என்றும் மனோஜ் சின்ஹா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவிக்கின்றார்.
திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.