• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி  | traffic jam in puducherry due to Increase in tourist arrivals

Byadmin

Nov 2, 2024


புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதி ஸ்தம்பித்தது. பல மணி நேரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 30-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 5 நாட்களும், பிற மாநிலங்களான தமிழகம் உள்ளிட்டவைகளில் தீபாவளி தினமான 31-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், தீபாவளியை முன்னிட்டு விடப்பட்ட தொடர் விடுமுறையில் ஏற்கெனவே சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் அதிகளவில் குவிந்த நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வணி வீதிகளாக நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் நகரப்பகுதி எங்கும் மக்கள் நடமாட்டம் இருந்தது.

புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளி மாநில பதிவெண் கொண்ட கார் உள்ளிட்ட வாகனங்களும் உலா வந்தன. இதனால் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து நகரப்பகுதியே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி, செஞ்சி சாலை, நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் கார், வேன் என வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பல மணி நேரம் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீஸார் போக்குவரத்தை சரி செய்தனர். சட்டம்-ஒழுங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகு குழாமில் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிக்கவே அப்பகுதியில் கடலூர்-புதுச்சேரி சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



By admin