• Thu. Jan 16th, 2025

24×7 Live News

Apdin News

சுவடுகள் 56 | ஒலியும் ஒளியும்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

Byadmin

Jan 15, 2025


முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம்.

எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயுதம், மோதிரம் எல்லாத்தையும் சேத்து nanogramஐ மில்லிகிராமாக்கி மொத்தமா நிறுத்து வித்துக் குடுக்க அப்பா வெளீல இருந்து வாற ஒரு ஆளைப்பிடிச்சு duty free இல இருந்து ஒரு மாதிரி கலர் ரீவீ ஒண்டை வாங்கித் தந்தார்.

கொழும்பில இருந்து வந்த பெட்டியை ராகு காலம் தவித்து நல்ல நேரத்தில உடைப்பம் எண்டு வெளிக்கிட “பெட்டியும் உள்ள இருக்கிற ரெஜிபோமும் கவனம்” எண்டு அம்மா தீரக்கதரிசனமாச் சொன்னது பிறகு இடம் பெயரேக்க உதவிச்சுது. கால நேரம் பாத்து பெட்டியை உடைச்சாலும் டிவி ஓடினதிலும் பாக்க பெட்டீக்க இருந்த நாள்த் தான் கூட.

“ Sony trinitron ” பெட்டியை உடைச்சு puzzle மாதிரிப் பாத்து பாத்துப் பொருத்தீட்டு போட வெளிக்கிட “கரண்ட் அடிக்கும் கவனம்” எண்டு அம்மம்மா சொன்னதால செருப்பையும் போட்டுக்கொண்டு on பண்ண “ஸ்ஸ்ஸ்” எண்ட சத்தத்தோட கோடுகோடா கலர் மழை பெஞ்சுது. VHF , UHF அதோட இருக்கிற எல்லா நம்பரையும் மாறி மாறி அமத்த தொடர்ந்து மழை மட்டும் பெய்ய முகம் தொங்கிச்சுது. அன்ரனாக் கம்பியை இழுத்து விரிச்சு திருப்ப ஒரு மாதிரி உருவம் வரத் தொடங்கிச்சுது. வந்த உருவம் நிக்காமல் கடகடவெண்டு மேல கீழ ஓடிக் கொண்டிருந்தச்சுது. முன்னால இருந்த லாச்சி மாதிரி இருந்த பெட்டியைத் துறந்து இருந்த நாலு உருட்டிற switch ஐயும் உருட்டிப் பழகி, பிறகு ஒருமாதிரி மேல கீழ ஓடிறதை நிப்பாட்டி, பிறகு ஒவ்வொண்டாப் பாத்து, ஒண்டு வெளிச்சம் கூட்டிக் குறைக்க மற்றது contrast எண்டு கண்டு பிடிச்சம்.

என்னடா இன்னும் கிளீயர் இல்லை எண்டு ஏங்க அன்ரெனாவை உயத்திக் கட்டினாத்தான் வடிவா எல்லா channelம் இழுக்கும் எண்டு சொல்ல அடுத்த budget ஓட அப்பா வரும் மட்டும் வெறும் மழையையும் இடைக்கிடை வாற நிழலையும் பாத்துக்கொண்டிருந்தம்.

ஒரு மாதிரி அப்பா ஓமெண்ட எங்கயோ ஒரு hardware கடைக்காரன் அன்ரெனா குழாய் விக்கிறதைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட வந்தவன் ஒரு குழாய் காணாது கிளீயரா வழாது எண்டு ரெண்டைப் போட்டு உயரத்தையும் விலையையும் கூட்டினான். கம்பிக்கு மேல கம்பி வைச்சுக்கட்டி அதில மேல பெரிய VHFஅன்ரெனாவைப் பூட்டி, கீழ குறுக்கா சின்ன UHF அன்ரெனாவையும் கட்டி, இடி விழாம இருக்க மண்ணுக்கு பெரிய இரும்புக்குழாயைப் புதைச்சு அதுக்குள்ள இந்தக் குழாயை இறக்கி அது ஆடாம இருக்க ஒரு ஆணியைப் பூட்டி, உயத்தின குழாயில இருந்து மூண்டு கம்பியை இழுத்து, தென்னையில ஒண்டு, பின் பத்தி தீராந்தீல ஒண்டு, முன் முகட்டில ஒண்டு எண்டு கட்டினம். உருட்டிப் பிரட்டி ஒவ்வொரு channel ஆ வரத் தொடங்க அண்டைக்கு முழுக்க பிறவிப் பெரும்பயனை அடைஞ்ச மாதிரி முழு நாளும் ரீவி மட்டும் பாத்துக் கொண்டிருந்தம்.

காலமை நிகழ்ச்சி தொடங்க முதல் கலர் கலரா வாற வட்டத்தைப் போட்டு “கூ” எண்ட சத்தம் வர போடிற TV பத்துமணிக்கு நமோ நமோ தாயே எண்டு முடியும் வரை on இல தான் இருந்திச்சுது . விளங்காத பாசையிலும் advertisement ஐக்கூட ஆவெண்டு பாத்தம்; Pears குளுகுளு baby, இவர்கள் சகோதரிகளா இல்லை தாயும் மகளும் எண்டு வந்த Rexona soap , இலங்கையில எல்லா வாகனமும் இங்க தான் விக்கிறது எண்டு நம்பின இந்திரா டிரேடர்ஸ், இடைக்கிடை தமிழில வாற அல்லி நூடில்ஷ்ஷும் பப்படமும், நந்தன விந்தன, திமுது முத்து எண்டு விளங்காதை எல்லாத்தையும் பாடமாக்கினம்.

கதைக்காத Tom& Jerryம், கூவிற woody wood peckerம், நாய் வளக்காத குறைக்கு “ லசியும்” பின்னேரம் விளையாட முதல் பாத்திட்டு. பிறகு 7.30க்குப் புட்டுப் பிளேட்டோட வந்திருக்க, knight rider, Battlestar galactica, Blake seven, Big foot and wild boy, Geminan, Automanம் இரவில பத்து மணிக்கு A- team, Strasky and Hutchம் இடேக்க ஓடிற Different strokes எண்டும் கொஞ்ச நாளா ஒடி ஓடிப் பாத்தம்.

அடிபாடு தொடங்க, முதலில கட்டி ஒளிச்சு வைக்கிறது ரீவீயுத் தான். ஒவ்வொரு முறையும் இடம் பெயரேக்க மட்டுமில்லை , பள்ளிக்கூடச் சோதினை எண்டாலும் அம்மா அதை மூடிக்கட்டி வைக்கிறதில குறியா இருந்தா. அம்மாக்குப் பிறகு அவவின்டை சீலையைக் கட்டினது எங்கடை ரீவீயும் settyயும் தான். அப்பிடிச் சோதினை முடிஞ்சு இப்ப holiday தானே எண்டு கடவுள் இறங்கி வந்தாலும் “கரண்ட்” எண்ட பூசாரி அடிக்கடி வரத்தைத் தடுத்திடுவார்.

அப்ப எங்கடை வாழ்க்கையில ரீவீயிலேம் தூரதரிசனமா இந்தியா மெல்ல உள்ள வந்திச்சுது. “ வாசிங் பௌடர் நிர்மா” வில வாற வெள்ளைச்சட்டைப் பிள்ளையும், “வாய்மணக்க, தாம்பூலம் சிறக்க” வந்த நிஜாம் பாக்கும் , வயலும் வாழ்வும் எண்டு எங்கடை வீடுகளுக்கு வந்த சேராத வேளாண்மையும் பொறுமையைச் சோதிக்க, வெள்ளிக்கிழமை ஓளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை படமும் படிப்பு டைம்டேபிளிலையே சேந்து இருந்திச்சுது. கடவுளையே கிட்டப்பாக்க காசுகேக்கிற ஊரில இது மட்டும், பேருக்கேத்த மாதிரி தூரத்தில இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் இலவச தரிசனம் இடைக்கிடை கிடைச்சுது. ரேடியோவில வரதாச்சாரியாரின் வர்ணனை மட்டும் கேட்டே matchஐ ரசிச்ச எங்களுக்கு ரீவீல match அதுகும் 83 World Cup வர சிறீக்காந்தும் , கப்பில்தேவும் இந்தியாவும் favorite ஆ மாறத் தொடங்கிச்சுது.

வாய்கெட்டினது வயித்துக்கு எட்டாத மாதிரி, மண்டைதீவில அடி விழ உருவம் அருவமாகி பிறகு கொக்காவிலும் போக ஒன்றாய் தெரிஞ்சது பலவாய் மாறித் தெரிஞ்சு, கடைசீல சோதியாவே போட்டுது. அதோட பாதையிருந்தும் பயணத்தடைகள் கூடி, தியட்டர் இருந்தும் இல்லாமல் போக ஊர் உலகம் உய்ய எண்டு தான் பாத்த படத்தை அக்கம் பக்கச் சனமும் பாக்க எண்டு தொடங்கிச்சுது Local ஓளிபரப்பு. கொய்யாத்தோட்டத்தில றீகல், கச்சேரியடி செல்வாஸ், கோண்டாவில் expo, எண்டு ஊருக்கு ஒரு கோயில் மாதிரி ஒளிபரப்புக்களும் தொடங்கிச்சுது. சும்மா தொடங்கினவங்கள் அன்ரனா இருந்த வீடு வழிய போய் வசூலிக்கத் தொடங்கினாங்கள். காசு வாங்கிற கதை தம்பியவைக்குத் தெரிய வரக் கட்டணமும் கூடிக் படங்களில கட்டுப்பாடும் வரத் தொடங்கிச்சுது .

கொஞ்சம் கொஞ்சமா கோட்டைக்குள்ள விழீற அடி கூடத் தொடங்க அங்க இருந்து திரும்பி வாற கீழ்வீச்சுச் செல்லடியோட மேல்வீச்சு பொம்மரடியும் சேர அம்மம்மா அடம் பிடிச்சா அன்ரனாக் குழாயை மேல இருந்து பாத்தா காம்ப் எண்டு அடிச்சுப் போடுவாங்கள் இறக்குவம் எண்டு. நல்ல வேளை நாங்க குழாயை இறக்க முதல் பக்கத்து நாட்டில இருந்து வந்த நிவாரணப் பொதிகள் இறங்க, குழாயை இறக்காமல் தப்பிச்சம். ஏங்கின நிவாரணங்களும் கிடைக்காம உள்ளூர் அகதியாய் திரிஞ்சிட்டு திருப்பி வீட்டைவர, இல்லாமல் இருந்த கரண்டும் திரும்பி வர, பனிக்கு மட்டும் இழுத்த தூர தர்சன் தொடந்து வடிவா , கிளீயரா இழுக்க அதுக்குப் பிறகு ராமாயணமும் மகாபாரத்துக் கதாவும், எங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

Term test க்கே TV ஐ மூடி வைக்கிற அம்மா அண்ணான்டை A/Lக்கு ஒரேடியா அந்த வருசம் மூடிக் கட்டி வைச்சதைப் பிறகு துறந்தா TV மட்டும் இருந்திச்சுது வேலை செய்யுதா எண்டு பாக்க கரண்டும் இல்லை இழுக்கக்கூடிய channelம் இருக்கேல்லை.

அதுக்குப் பிறகு வேற ஒண்டும் கிடைக்காமல் ஓமர் முக்தாவும் ஒளிவீச்சும் சிறீதர் தியட்டரில பாக்கத் தொடங்க மூடிக்கட்டின TV மூலைக்குள்ளயே இருந்திச்சுது. படத்தை பாக்க ஒரு மாதிரி வந்த புதுத்தணிக்கை குழுவின் அனுமதி வர, வாடைக்கு Water pump generator,deck , cassette எல்லாம் வாடைக்கு குடுக்கிறது பிஸ்னஸா மாறிச்சுது. மூண்டு மணித்தியாலப் படத்தை தணிக்கை எண்டு வெட்டிக் கொத்தி ரெண்டு மணித்தியாலமாத்தர, அந்த ஒலியும் ஒளியும் இல்லாத படங்களை பாக்கத் தொடங்கினம்.

வருசத்துக்கு ஒருக்கா ரெண்டு தரம் கஸ்டப்பட்டு காசு சேத்துப் படம் பாக்கிறது பொங்கல் வருசப்பிறப்பு மாதிரித் தான் எங்களுக்கு ஒரு entertainment. மச்சான் என்ன மாதிரி இந்தமுறை விடுதலைக்க படம் பாப்பம் எண்டு தயாளன் சொல்ல முதலே காங்கேயன், பாஸ்கரன், எண்டு ஒழுங்கேக்க இருந்தவன், வந்தவன், எல்லாம் என்னைக் கழட்டிப் போட்டு அண்ணரோட கூட்டுச் சேந்தாங்கள் எப்பிடியும் ரெண்டு ரஜனி படம் போடோணும் எண்டு. ஒருமாதிரி பொருள், இடம், காலம் எண்டு எல்லாம் சரிவந்து படம் பாக்கவெண்டு வெளிக்கிட்டம். “படம் பாக்க அவங்கட்டை permission வேணுமாம், இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்களாம் எண்டு தொடங்கேக்கயே ஒண்டு வெருட்ட இஞ்சினை சாக்காலை மூடிச் சத்தம் கேக்காமப் பண்ணீட்டு வந்திருந்தம். “ தூளியிலே ஆட வந்த “ குஷ்புவைப் பாப்பம் எண்டு ஆவலா இருக்க ஓடின water pump திடீரெண்டு நிண்டிட்டு. தெரிஞ்ச அறிவில பிளக்கை கழட்டித் துப்பரவாக்கி போட இன்னும் கொஞ்சம் ஓடீட்டு திருப்பியும் நிக்க, வாடைக்கு தந்தவனை தேடிப் பிடிச்சு கொண்டு வந்தம். சாக்கால மூடின எப்பிடி காத்து வரும் புகையும் போகும் எண்டு பேசீட்டு , “சோக்கை இழுக்காதேங்கோ, காபிரேட்டரை கூட்டாதேங்கோ, எண்ணையை மட்டும் விடுங்கோ” எண்டு instructions குடுத்திட்டுப் போனான். சிவராத்திரி மாரி விடிய விடிய இருந்தும், படுத்தும், உருண்டும் குடுத்த காசுக்கு ஐஞ்சாறு படம் பாத்தம். ஒவ்வொருக்காலும் படராத்திரி முடிஞ்சாப்பறகு கொஞ்ச நாளைக்கு விகடன் விமர்சனக்குழுவுக்கும் மேலால விவாதங்களும் வியாக்கியானங்கள் நடக்கும். இதில சிலர் இன்னும் இளையராஜா, பாரதிராஜா எண்டு what’s appஇல பழைய விவாதங்களை தொடருராங்கள்.

95 இல இடம்பெயர இதெல்லாம் காணாமல் போய் திரும்பி வந்து காணாமல் போனோர் பட்டியலில ஆக்களைத் தேடின கூட்டத்தில அம்மா ரீவீயையும் சேத்துக் கனகாலம் தேடித் திரிஞ்சவ.

குஷ்பு மெலிஞ்சு போய், ரஜனி ரோபோவாகி, சுமனும் மோகனும் வில்லனாகி, அம்பிகாவும் ராதாவும் குண்டாகி, குள்ளக்கமல் கிழவனாகிப் போனதாலயோ இல்லாட்டி இப்பத்தை ட்ரெண்ட்க்கு நான் இன்னும் மாறாததாலையோ தெரியேல்லை, பெரிய ரீவீயும், எல்லாச் சனலும் இருந்தாலும் ஏனோ ஒளியும் ஒலியும் இல்லாமப் படம் பாத்த மாதிரி சந்தோசமான படம் ஒண்டையோ , படம் முடிய நல்ல வியாக்கியானங்களையோ ரசிக்கக் கிடைக்கேல்லை.

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 44 | வெத்து இலை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 45 | பிரி(யா)விடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 47 | காதல் கடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 48 | சாண் ஏற பப்பா சறுக்கும் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 49 | லௌ(வ்)கீகம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 51 | துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 52 | மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 53 | உறவுகள் தொடர்கதை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 54 | ஏறேறு சங்கிலி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 55 | பிறவிப் பெருங்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர்

The post சுவடுகள் 56 | ஒலியும் ஒளியும்… | டாக்டர் ரி. கோபிசங்கர் appeared first on Vanakkam London.

By admin