• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

சுவடுகள் 57 | தண்டனையே குற்றம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

Byadmin

Apr 18, 2025


வாழ்வின் எதார்த்தங்கள் குறித்த கொண்டாட்டமாக டாக்டர் ரி. கோபிசங்கர் எழுதி வருகின்ற சுவடுகள் தொடர் அனுபவங்களால் பாடங்களையும் புகட்டி விடுகின்றன. பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல், நெறிமுறைகள் என இன்றைய சமூகத்திற்கு அவசியமான பல கூறுகளைப் பகிரும் அவரது தொடரில் இது பள்ளியின் படத்தைப் பற்றியதாகவும் அரசியலின் அறத்தைப் பற்றியதாகவும் அமைவது சிறப்பு. 

-ஆசிரியர்

“மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார்.

இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்னொரு பரியாரியார், “நான் அவங்களைக் கலைச்சு விட்டிட்டன் , உவங்கள் சரிவரமாட்டாங்கள், எங்களை மாதிரி இப்பத்தைகள் இல்லை” எண்டு மருத்துவத்தையும் பாடமாக்கித் தள்ளீடுவம் எண்டு நம்பி வந்த பெடிபெட்டைகளை பேசிக்கொண்டு வந்தார். இதுகள் படிச்ச பள்ளிக்கூடம் தான் பிழை எண்டு முடிவுக்கு வந்தவர் அதிலேம் வாத்திமார் அடிச்சுத் திருத்தாததால தான் எல்லாம் இப்பிடித் திரியுது எண்ட புறுபுறுத்தபடி போனார்.

இதையும் கடந்து கிளினிக்குக்குப் போக அங்க ஒரு அம்மா மகனோட உள்ள வந்தா. அவன் தான் வீட்டுக்கு காவலோ தெரியேல்லை கூட்டுக்க நிக்கறதுக்களுக்கு கழுத்தில கட்டிறதை காதில இருந்து கால் வரை தொங்க விட்டபடி பெடியன் வந்திருந்தான். வந்தவனுக்கு ஏதும் வருத்தமோ தெரியாது பாவம் தலை மயிரெல்லாம் கறள் கட்டினமாதிரிக் கலரில இருந்துச்சுது. பதினைஞ்சு வயசு பள்ளிக்கூடத்துக்கு போறேல்லையாம் , ஆனால் பக்கத்தில எங்கயோ “ கூடப் போனதில” அடி வாங்கீட்டானாம் எண்டு உடைஞ்ச கையோட வந்தவனைப் பாக்க விளங்கிச்சுது உடைஞ்சது கை மட்டுமில்லை கன பிணைப்புக்கள் எண்டு.

“ ஏன்டா பள்ளிக்கூடம் போறேல்லை ” எண்டு கேக்க அம்மா “அவன் குளப்படி எண்டு சேர் அடிச்சதாலை நிண்டிட்டான்” எண்டு பெருமைப்பட்டுச் சொன்னா.

அடிச்ச அடிவாங்கின கதையெல்லாம் கேட்டு முடிய மணி ரெண்டாக, மனிசி மத்தியானம் பள்ளிக்கூடம் முடிய ஏத்த வரச் சொன்னது ஞாபகம் வர ,நேரம் போட்டுது எண்டு போட்டு அவசரமாக் காரை எடுத்துக் கொண்டுபோய் சிக்னலில நிக்க பின்னால வந்து நிண்ட மூண்டு சில்லும் , கொக்கு மாதிரி எப்பவுமே ஒண்டைத் தூக்கிக் கொண்டு நிக்கிற ரெண்டு சில்லும் “கோன் அடிச்சுது “, தான் இதுக்கெல்லாம் நிக்கேலாதாம் “என்னை விடு போப்போறன்” எண்ட மாதிரி .

இவனுக்காக எப்பிடிக் காரைத்தூக்கிக் கொஞ்சம் அரக்கிப் ரோட்டுக் கரையில நிப்பாட்டிற எண்டு யோசிக்கப் பச்சை விழுந்திச்சுது. முன்னுக்கு நிண்ட நான் டக்கெண்டு எடுக்க ரெண்டு பக்கத்தாலேம் பாதுகாப்புக்கு போற பொலிஸ்காரன் மாதிரி வந்த ரெண்டு சில்லுக்காரன் நான் slowவாய்ப் போறனாம் எண்டு முறாய்ப்பா முறுக்கிக் கொண்டு போக அதைக் கவனிக்காத மாதிரி நான் ஓடிக்கொண்டு போனன். போற வழியில பிரபல பாடசாலையில படிக்கிறது, படிப்பிக்க விட்டது எல்லாம் பள்ளிக்கூடம் விட்டோன்ன தமன்னாவைப் பாக்கப் போன கூட்டம் மாதிரி பாஞ்சு வந்து நாலைஞ்செண்டு நடு ரோட்டால அணிவகுத்துப் போக ரோட்டின்டை கரைப் பக்கமா மண்ணுக்கால காரை விட்டன்.

ஒரு மாதிரி கஸ்டப்பட்டு நேரம் போகுதெண்டு அரக்கப் பறக்க வந்தா, அண்டைக்கெண்டு பாத்து போக்குவரத்தை சீராக்கிறம் எண்டு வந்து நிண்ட சீருடைக்காரார் எல்லாச் சந்தீலேம் நான் கிட்ட வரவும் என்னை மறிச்சிட்டு மற்றவயை விடவும் சரியா இருந்திச்சுது.

எங்க காணேல்லை எண்டு Mrs அடிச்ச கோலை, வேணும் எண்டு “ miss” பண்ணீட்டு ஒரு மாதிரிப் போய்ப் பள்ளிக்கூட வாசலில நிக்க, வந்து ஏறினவை எல்லாரும் கதவைச் சாத்தின சாத்து காரோட சேத்து எனக்குத் தான் எண்டு விளங்கிச்சுது. ஏறின உடனயே என்னை ஒண்டும் கேக்காம பின்னால திரும்பி, “எத்தினை marks, எத்தினை மணிக்குக் கிளாஸ், எங்க தொப்பியைக் காணேல்லை” எண்ட வழமையான கேள்வி-நேரம் நடக்க “ரோட்டை” மட்டும் பாத்தபடி காரை ஓடிக்கொண்டு போனன்.

ஆளை விட்டாக் காணும் எண்டு பின்னுக்கு பாஞ்சு ஏறினதுகளை பாத்து மனிசி, “இதுகளை ஒண்டும் செய்யேலாது, இங்கபார் சாப்பாடு அப்பிடியே இருக்கு, அப்போத வெறும் socks ஓடித் திரியுது, சட்டையில மை , home work செய்யேல்லையாம் எண்டு complain , நாங்கள் எல்லாம் எங்கடை அம்மா சொன்னா எல்லாம் உடன செய்வம், எண்டு பஞ்ச புராணத்தைத் தொடங்க , “சரிசரி, விடும் பாவம்” எண்டு நான் சொல்ல, “கடைசியா நீங்களும் ஒண்டும் சொல்லாதேங்கோ நான் தான் எல்லாம் பாக்கோணும்” எண்டு புறுபுறுத்தபடி மனிசி வீடு வர வீட்டுக்குள்ள போக, நான் எங்க சோத்துக்கரண்டியைக் காணேல்லை சாப்பாட்டு மேசையில தேடிக்கொண்டிருந்தன்.

பின்னேரம் patient பாத்துக் கொண்டிருக்க உள்ள வந்த ஒருத்தர் மகனை இருத்தி வைச்சிட்டு “ அவனுக்கு கையில நோகுதாம், எழுதவே ஏலாது எண்டு சொல்லிறான்” எண்டு தொடங்கினார். நானும் அங்க நோகுதா இங்க நோகுதா எண்டு கேக்க அவன் அப்பாவைப் பாக்க அவர் தலையும் இவன்டை தலையும் ஒண்டா ஆடிச்சுது ஓமெண்டு . என்னடா இண்டைக்கு வந்த முதலாவது patientஏ இப்பிடி இருக்கு, ஒரு பிரச்சினையேம் காணேல்லை எண்டு போட்டு , ஒண்டுமில்லை சும்மா நோ தான் எண்டு சொல்ல முதல், “எனக்கு X-ray எடுக்கோணும்” எண்டு அப்பா ஓடர் போட நான் தேவேல்லை எண்ட, “இல்லை வாத்தியார் அடிச்சிட்டார் என்டை மகனுக்கு , அவருக்கு நான் ஆரெண்டு காட்டிறன், எல்லா இடமும் கடிதம் போட்டிருக்கிறன், உங்கடை report ஒண்டும் வேணும்” எண்டு என்னையும் சட்டத்தில சாட்சியா சேக்கப் பாத்தார். என்னத்தை எழுதிறது எண்டு தெரியாம எதையோ கிறிக்கிக் குடுக்க, வெளீல போய் உந்த டாக்குத்தர் சரியில்லை நான் கொழும்பில போய்க் காட்டப்போறன் எண்டிட்டுப் போனார்.

ஒரு நாள் இரவு திடீரெண்டு நட்பின் அழைப்பொண்டு “ உடன வந்தா எங்க patient பாப்பீங்களா, மகனுக்கு முதுகில அடிச்சிட்டார் மாஸ்டர், அவன் நோகுதெண்டு இப்ப அழுறான்”எண்டு சொல்லத்தொடங்கி பிறகு நோவை விட்டிட்டு , “என்டை பிள்ளையை எப்பிடி அடிப்பார், நான் உடனயே principalக்கும் சொல்லீட்டன்” எண்டு கதை சொல்லி முடிக்க பிள்ளை நோ மறந்து நித்திரையாகீட்டுது எண்டு நெக்கிறன். இவதான் வழக்காம வேற ஆராவது சொல்லேக்க அடிச்சது சரியெண்டு வக்காளத்துவாங்கிறவ , ஆனாலும் தன்டை மோனுக்கு எண்டோன்ன வாத்திபிழை அவன் நல்லபெடியன் சரியான அமைதி எண்டு அவனைப் பத்தின பட்டோலையை நீட்டியே வாசிச்சா.

88 எண்டு நெக்கிறன் சுண்டுக்குளிச் சந்தீல இந்தியன் ஆமி எங்கடை பள்ளிக்கூட Principalஇலும் பாக்க strict ஆ இருந்த காலம். நாங்கள் கொஞ்சப் பேர் பள்ளிக்கூடத்துக்கு வேளைக்கு வந்து மூலை வகுப்பில நிண்டு “ Recky” எடுக்கிறனாங்கள்; அவங்களை இல்லை சுண்டுக்குளிப் பெட்டைகளை. ஒரு பக்கம் prefects க்கும், ஒரு பக்கம் வாத்திமாருக்கும் sentry போட்டுத்தான் Recky எடுக்கிறது. எல்லாரும் வரிசையா வாங்கில ஏறி நிண்டு பாக்கிறது. அவங்கடை புண்ணியத்தில சுண்டுக்குளிச் சந்தீல எல்லாப் பெட்டைகளும் இறங்கி வரிசையா நடந்தும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் போறதால கனநேரம் கண்ணுக்கு குளிரச்சி . பூக்களை ரசிக்கேக்க குளவிக் கூட்டுக்க கல் எறிஞ்ச மாதிரி ஆரோ ஒருத்தன் எறிஞ்ச கல்லு பொம்பிளை ஆமிக்கோ இல்லை ரீச்சருக்குப் பட்டிச்சோ தெரியேல்லை அடுத்த நாள் வகுப்பு முழுப்பேரையும் கூப்பிட்டு “ ஆர் செய்தது எண்டு சொல்லித் தாங்கோ எண்டு ஒரு கருணா இருக்க மாட்டானா எண்டு தனத்தார் தேட, கடைசிவரை முள்ளிவாய்க்காலில ஒண்டா ஒருந்த மாதிரி நாங்க நிக்க, காட்டிக்குடுக்காட்டிப் பிரச்சினை வரும் எண்ட தனத்தாரின்டை வெருட்டு எடுபடாமப் போக, நாலு பிரம்பு முறிஞ்சும் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு வகுப்புக்கு வந்தம். அடுத்த பாடம் இங்கலீஸ் படிப்பிக்க வந்த Alex Master , நடந்ததை கேட்க சரி இந்தாளும் வெளுக்கப் போகுதாக்கும் எண்டு நெக்க “ , I like you spirit “ எண்டு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.

வாத்தி அடிச்சது “செய் குளப்படீக்காய்” இருந்த காலம். போன முறை செய்யாத குளப்படிக்கு அடிவாங்கினவன் இந்தமுறை தன்டை குளப்படிக்கு வேறொருத்தன் அடிவாங்க விளங்கினான் வாத்தி அடிக்கிறது ஆளுக்கில்லை சிவபருமானுக்கு பாண்டியன் குடுத்த மாதிரித் தான் இந்த அடியும் முழு வகுப்புக்குத்தான் எண்டு.

Friend க்காய் வாங்கின அடி ஒரு கடி மாங்காயில் அடங்கிப் போக வாத்தீன்டை பிரம்படி இனிப்பாய் மாறிச்சுது. அதோட அடிச்ச வாத்தி அண்டே மறந்தாலும் அதைக் கேள்விப்பட்டா அம்மா அந்தக்கிழமை முழுக்க கலைச்சுக் கலைச்சு இன்னும் வெழுப்பா எண்டதால கன அடிகள் வீட்டுக்குப் போகாமல் வகுப்புக்குள்ளயே சமரசப்பட்டிச்சுது.

அடிச்சவாத்தி அடுத்தநாளும் முன்னுக்குக் கூப்பிட சரி இண்டைக்கும் அடிதான் எண்டு வாத்தியையும் திட்டிக் கொண்டு கையைத் தடவித்தடவிப் போக , “புத்தகத்தை எடுத்து அடுத்த பாடத்தை வாசி” எண்டு சொல்லி முன்னால நிக்கவிட நான் சிறுக்க வாத்தியார் உயர்ந்து நிண்டார்.

இப்ப அடிக்கடி நடக்கிற “ மீண்டும் பள்ளிக்கூடம் போறம்” எண்ட நிகழ்வெல்லாத்திலேம் படிச்சதோ படிப்பிச்சதோ ஒருத்தருக்கும் ஞாபகமிருக்காது ஆனால் அடி வாங்கினவனுக்கும் அடிச்ச வாத்திக்குத்தன் தான் ஞாபகமும் கூட, demandம் கூட.

வீடோ, பள்ளியோ கண்டிப்பும் தண்டிப்பும் மாணவருக்கு காவலாய் இருந்த காலம் அது. இப்ப என்னெண்டாத் தண்டனைகள் கண்டிக்கபட்டு, பெற்றவர் இன்று பொலிசாகி, சமூக வலைத்தளங்கள் நீதிபதியாகிப் போய், கடைசியில் தண்டனைகள் குற்றங்களாக்கப் பட்டு நிக்கிற காலம் இது.

அடிச்துக்கெல்லாம் காரணம் சரியா இல்லாட்டியும் அடி வாங்கின நான் சரியாகீட்டன் ஏனெண்டால் அடி கூட தடுப்பூசி மாதிரித்தான் வருத்தம் வர முதலே போட்டால் தான் நல்லம், வருத்தம் வராது வந்தாப்பிறகு ஊசி போட்டுப் பிரியோசனமிருக்காது.

இவை யாவும் நிஜமே

Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 16 | இதில் போனால் சங்கடம் (இ.போ.ச) | டாக்கடர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 18 | “அரிசிப் பொதியோடும் வந்தீரோ” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 19 | பிளவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 20 | நீண்ட வரிசையில்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 21 | கன்னிக்கால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 22 | பொறுப்பு துறப்பு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 24 | இந்த அடி நாளைக்கு… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 25 | பக்கத்து இலைக்கு பாயாசம்…. | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 27 | தலை கால் தெரியாம… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 28 | தாண்டாக்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர் …

சுவடுகள் 29 | அழையா விருந்தாளி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 30 | உண்ட களை தொண்டருக்குமாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 31 | சுயம் இழந்த சரிதம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 39 | இலக்கை நோக்கி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 40 | ‘பாலுமகேந்திரா’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 41 | ‘காய்ச்சல்’ | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 43 | பாஸ் எடுத்தும் fail | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 44 | வெத்து இலை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 45 | பிரி(யா)விடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 46 | “கப்பு முக்கியம்” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 47 | காதல் கடை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 48 | சாண் ஏற பப்பா சறுக்கும் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 49 | லௌ(வ்)கீகம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 51 | துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 52 | மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 53 | உறவுகள் தொடர்கதை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 54 | ஏறேறு சங்கிலி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 55 | பிறவிப் பெருங்கடல் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 56 | ஒலியும் ஒளியும்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 56 | சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

The post சுவடுகள் 57 | தண்டனையே குற்றம் | டாக்டர் ரி. கோபிசங்கர் appeared first on Vanakkam London.

By admin