பட மூலாதாரம், Getty Images
தென்மேற்கு சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 115 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரான்ஸ்-மொன்டானா விடுதியில் உள்ள ‘லீ கான்ஸ்டெல்லேஷன்’ என்ற பாரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணிக்கு (புத்தாண்டு தினத்தன்று) இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தீ விபத்தாகவே கருதப்படுவதாகவும், தாக்குதல் நடந்திருக்கலாமா என்ற “கேள்விக்கு இடமில்லை” என்றும் அந்த பிராந்தியத்தின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் இந்தச் சம்பவத்தை, “நமது நாடு அனுபவித்த மிக மோசமான துயரச் சம்பவங்களில் ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக ஓர் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், AFP via Getty Images
பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய விபரங்கள்
வியாழக்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தத் தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 115 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அண்டை நாடான இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
லாசேன் பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குனர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றிடம் கூறுகையில், இதுவரை 22 நோயாளிகள் தனது மையத்தின் பராமரிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் 16-26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், உடல்களை விரைவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்தப் பிராந்தியத்தின் தலைமை வழக்கறிஞர் பீட்ரைஸ் பில்லட் கூறினார்.
ஆனால், உயிரிழந்தவர்களை அடையாளம் காண பல வாரங்கள் ஆகலாம் என்று சுவிட்சர்லாந்துக்கான இத்தாலிய தூதர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, கடுமையான தீக்காயங்கள் காரணமாக அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார்.
பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
தற்போது 16 இத்தாலியர்களைக் காணவில்லை என்றும், மேலும் 12 முதல் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இருபதுகளில் உள்ள ஒரு பெண் மற்றும் 16 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் என மூன்று இத்தாலியர்கள், மிலனில் உள்ள நிகுவார்டா மருத்துவமனையின் முக்கிய தீக்காயப் பிரிவில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக உள்ளூர் கவுன்சிலர் கைடோ பெர்டோலாசோ கூறினார்.
பட மூலாதாரம், FC Metz
தங்கள் நாட்டு குடிமக்கள் எட்டு பேர் பேரைக் காணவில்லை என்றும், உயிரிழந்தவர்களில் பிரெஞ்சு நாட்டினரும் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் குறைந்தது இருவர் பிரெஞ்சு நாட்டினர் என்று பிரெஞ்சு ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்தன.
பிரான்சின் எஃப்சி மெட்ஸ் கால்பந்து கிளப், தனது இளையோர் அணி வீரர் ஒருவர் இந்தத் தீ விபத்தில் “கடுமையாக காயமடைந்துவிட்டதாகத்” தெரிவித்துள்ளது. 19 வயதான தாஹிரிஸ் டோஸ் சாண்டோஸ் சிகிச்சைக்காக ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக அந்த கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் “எந்தவொரு உதவியையும் வழங்கத் தயாராக உள்ளது” என்றும், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் பிரெஞ்சு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரவேற்கப்படுவதாகவும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாக அந்த அமைப்பின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பிரிட்டன் தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், ஆனால் இதுவரை உதவிக்காக யாரும் அணுகவில்லை என்றும் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடிமக்களுக்கு ஆதரவளிக்க தூதரக ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
தீ விபத்து எதனால் ஏற்பட்டது?
பட மூலாதாரம், Valais Cantonal Police handout via Getty Images
விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை, ஆனால் ஆரம்பகட்ட ஆதாரங்கள் இது ஒரு தாக்குதலைக் குறிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்து ஏற்பட்டதாக வந்த முந்தைய அறிக்கைகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “எந்தவொரு வெடிபொருளும் வெடித்து இந்தத் தீ ஏற்படவில்லை. மாறாக தீ பரவும்போது ஏற்பட்ட வெப்பத்தினால் அங்கிருந்த பொருட்கள் வெடித்து, வளாகம் முழுவதும் தீப்பிழம்பாக மாறியது,” என்று பிராந்திய பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் கான்சர் கூறினார்.
சம்பவத்தின் போது அந்த பாரில் இருந்ததாகக் கூறிய இரண்டு பிரெஞ்சு குடிமக்கள், ஒரு பணிப்பெண் ஷாம்பெயின் பாட்டிலின் மேல் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை வைப்பதைப் பார்த்ததாக விவரித்தனர்.
“அந்த மெழுகுவர்த்திகளில் ஒன்று கூரைக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்ததால், கூரையில் தீப்பிடித்தது. சில நொடிகளில் முழு கூரையும் எரியத் தொடங்கியது. அங்கிருந்த அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டவை,” என்று எம்மா மற்றும் அல்பேன் ஆகிய இருவரும் பிரெஞ்சு ஊடகமான பி.எஃப்.எம்.டி.வி-யிடம் தெரிவித்தனர்.
வெளியேறும் வழி “மிகவும் குறுகலாக” இருந்ததாலும், வெளியே செல்வதற்கான படிக்கட்டுகள் “இன்னும் குறுகலாக” இருந்ததாலும், அங்கிருந்து வெளியேறுவது “மிகவும் கடினமாக” இருந்ததாக அவர்கள் விவரித்தனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பில்லட் படிக்கட்டுகள் குறுகலாக இருந்ததாகத் தெரியவருகிறது என்று கூறினார், ஆனால் அவை பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இருந்தனவா என்பது குறித்து விசாரணையில் மதிப்பிடப்படும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில் பாரிலிருந்து புகை வருவது முதலில் காணப்பட்டதாகவும், அந்த நேரத்தில் அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பிராந்திய காவல்துறை அதிகாரி ஃபிரடெரிக் கிஸ்லர் தெரிவித்தார்.
முதலில் காவல்துறை அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்தனர், அவர்களைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டனர் என்று கிஸ்லர் கூறினார்.
கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லீ கான்ஸ்டெல்லேஷன் பார் குறித்த விபரங்கள்
பட மூலாதாரம், Police Cantonale Valaisanne
‘லீ கான்ஸ்டெல்லேஷன்’ என்பது சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு விடுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு பெரிய பார் ஆகும்.
இந்த விடுதி மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தாலும், லீ கான்ஸ்டெல்லேஷன் பார் மட்டும் அவ்வளவு ஆடம்பரமானது அல்ல என்று பிபிசியின் சில்வியா கோஸ்டெலோ ரிசார்ட்டிலிருந்து தெரிவித்துள்ளார்.
இதன் மேல் தளத்தில் மக்கள் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதற்கான தொலைக்காட்சித் திரைகள் கொண்ட ஒரு பகுதி உள்ளது.
கீழ் தளத்தில் மக்கள் மது அருந்தவும் நடனமாடவும் கூடிய ஒரு பெரிய பார் உள்ளது.
இது 300 பேர் வரை அமரும் வசதி கொண்டது மற்றும் ஒரு சிறிய திறந்த மாடியையும் கொண்டிருந்தது.
இருப்பினும், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு எத்தனை பேர் இருந்தனர் என்பது தெரியவில்லை.
ஆல்பைன் ஸ்கை விடுதிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலம் என்பது ஆண்டின் மிகவும் பரபரப்பான நேரமாகும்.
எனவே, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாடும் சுவிஸ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அந்த பாரில் நிறைந்திருந்திருக்கக் கூடும்.

மே 2024-இல் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட லீ கான்ஸ்டெல்லேஷன் பாரின் விளம்பர வீடியோ ஒன்றில், மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்த பெண்கள் மது பாட்டில்களில் மத்தாப்புகளை ஏந்தியபடி தங்கள் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவாறு பாரின் வழியாக நடந்து செல்வது காட்டப்பட்டது.
பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்த அதன் தலைப்பில், “கான்ஸ்டெல்லேஷன் கிரான்ஸ்-மொன்டானா உங்களை ஆண்டுக்கு 365 நாட்களும் இடைவேளையின்றி காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வரவேற்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு