• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பேச திமுகவினருக்கு ‘தடை’ – மா.செ அறிக்கையால் சலசலப்பு | Talk Ban of DMK Members Against MP Su.Venkatesan

Byadmin

Aug 5, 2025


சு.வெங்கடேசன் எம்.பி.க்கும், கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் இனி யாராக இருந்தாலும் பேசக்கூடாது என்று மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மத்தியில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தூய்மை நகரங்கள் பட்டியலில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 மாநகராட்சிகள் பட்டியலில் மதுரைக்கு 40-வது இடத்தையும், சென்னைக்கு 38-வது இடத்தையும் மத்திய அரசு வழங்கியது.

இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கணக்கெடுப்பில் குறைபாடுகள் இருந்தாலும், மதுரை நகரத்தின் தூய்மை மிக மோசமாக உள்ளது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. குறுகிய கால அரசியல் லாப நோக்கத்துக்காக மக்கள் நலன் தொடர்ந்து சமரசம் செய்யப்படுகிறது.

கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தபோது நாட்டிலே சிறந்த முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்ட கோயிலாக மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டது. இதை கருமுத்து கண்ணன் தலைமையிலான குழு செய்து காட்டியது. மதுரை நகரை தூய்மையாக நிர்வகிப்பது கடினமல்ல. மதுரை நகரின் தூய்மையை பேணிக் காக்க முதல்வர் தலையிட வேண்டும்’’ என்றார்.

கூட்டணியில் இருந்துகொண்டே அவர் எப்படி இப்படியொரு அறிக்கை வெளியிடலாம் என மாநகர திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் மா.ஜெயராம், ‘‘திமுக தொண்டர்கள் ரத்தமும், வியர்வையும் சிந்தி தெருத்தெருவாக உழைத்ததால் தான் சு.வெங்கடேசன் எம்.பி.யானார். வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விடக்கூடாது, மாமன்ற கூட்டத்தில் வந்து பேச வேண்டும்’’ என்று காட்டமாக பேசிவிட்டார்.

அவரது இக்கருத்துக்கு ஆதரவாக மேயர் இந்திராணியும், திமுகவின் பிற கவுன்சிலர்களும் தங்கள் அதிருப்தியை சு.வெங்கடேசனுக்கு எதிராக பதிவு செய்தனர். இந்த நிகழ்வு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே மட்டுமின்றி அதிமுகவிலும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியது. அடுத்து என்ன நடிக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தூய்மை ஆய்வு சம்பந்தமாக மதுரை மாநகராட்சியில் குப்பைகள், பாதாள சாக்கடை பற்றிய குறைகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கேடேசன் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் தனது கடமையினை செய்யும் நோக்கில், குப்பையை சரிசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை எம்.பிக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட வேண்டுகோள்களை அரசு எடுத்துக்கொண்டு சரிசெய்து வருகிறது.

கடந்த ஜூலை 29ம் தேதி அன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் மா.ஜெயராம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை பற்றி சொன்ன பேச்சுக்கள் தேவையற்றவை. முதல்வர் இதுபோன்ற குறைகளை கண்டறிந்து தீர்வு கண்டு வருகிறார். இனிமேல் யாராக இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி.க்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிராக திமுகவினர் யாராக இருந்தாலும் இனி பேசக்கூடாது என்று நேரடியாகவே குறிப்பிடும் வகையில் மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதியின் அறிக்கை இருப்பதாகவும், அக்கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்களிடையே கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மாவட்டச் செயலாளர் அறிக்கை, முழுக்க முழுக்க சொந்தக் கட்சிக்கும், கவுன்சிலர்களுக்கும் எதிராக உள்ளது. அவரது இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் அனைத்தும், அவரது சொந்த கருத்தாகவே நாங்கள் கருதுகிறோம். சு.வெங்கடேசன் கருத்துக்கு அவரது கட்சி கவுன்சிலர்களும், மாவட்டச் செயலாளரும் ஆதரவாக நிற்கின்றனர். ஆனால், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் கோ.தளபதி, கட்சி நலனுக்காக பேசிய எங்களுக்கு எதிராக நிற்கிறார்.

அவர், கட்சித் தலைமைக்கு மாவட்டத்தில் சு.வெங்கடேசனின் செயல்பாடுகளை பற்றி சரியாக கொண்டுபோய் சேர்க்கவில்லை. முதல்வர் மேற்பார்வையில் உள்ள சென்னை மாநகராட்சியுமே, 40 இடங்கள் பட்டியலில் 38-வது இடத்தில் உள்ளது. அப்படியென்றால் சென்னையிலும் தூய்மையாக இல்லை என்று சு.வெங்கடேசன் கூறுகிறாரா?.

மாவட்டச் செயலாளரின் இந்த அறிக்கை, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளது. இனி அதிமுகவின் செயல்பாடுகளைக் கூட திமுகவினர் பேச தயங்கக்கூடும். சட்ட சபை தேர்தல் விரைவில் வர இருக்கிற நிலையில், மாவட்டச் செயலாளரின் இந்த செயல்பாடு, கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதுவரை சு.வெங்கடேசன் – திமுகவினர் இடையே இருந்த மோதல், மாவட்ட செயலாளருக்கு எதிராகவும் திசை மாறும்’ என்றனர்.



any_content_bottom">

By admin