படக்குறிப்பு, 2023-இல் மோதல் தொடங்கியதிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மேற்கு தர்ஃபூர் பகுதியிலிருந்து 8,00,000 பேர் வெளியேறியுள்ளனர்.கட்டுரை தகவல்
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
மேற்கு சூடானில் உள்ள மர்ரா மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 370 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐ.நாவின் மனிதநேய உதவிகளை சூடானுக்காக ஒருங்கிணைக்கும் அண்டோய்ன் ஜெரார்ட், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி அணுகுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் பாதிப்புகள் எவ்வளவு, உயிரிழப்புகள் எத்தனை என்று கணக்கிட சிரமமாக இருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக, 1,000 பேர் நிலச்சரிவில் உயிரிழந்ததாக சூடான் லிபரேஷன் ஆர்மி என்கிற கிளர்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பல நாட்களாக பெய்த கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, இதில் ஒருவர் மட்டுமே பிழைத்துள்ளார். தராசின் கிராமம் மொத்தமாக நிலச்சரிவில் சிக்கியுள்ளது என அக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகள், பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என அக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
உடனே உதவிகளை பெறுவது கடினமாக இருக்கும் என்று அண்டோய்ன் ஜெரார்ட் கூறுகிறார்.
“நம்மிடம் ஹெலிகாப்டர்கள் இல்லை, கரடு முரடான சாலைகளில் வாகனங்கள் மூலமே அனைத்தும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதற்கு நேரமாகும் மற்றும் இது மழைக்காலம். சில சமயம் ஒரு பள்ளத்தாக்கை கடக்க, பல மணி நேரம் அல்லது ஓரிரு நாட்கள் கூட காத்திருக்க வேண்டும்…சரக்கு வாகனங்களை உள்ளே கொண்டு வருவது சவாலான காரியமே” என்றார்.
சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் பிரிவான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (ஆர்எஸ்எஃப்) இடையே போர் மூண்ட பிறகு வடக்கு தர்ஃபூர் மாநிலத்தில் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மர்ரா மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தர்ஃபூரின் ஆளுநரும் ராணுவ சார்பு கொண்டவருமான மின்னி மின்னாவி இந்த நிலச்சரிவை, “மனிதாபிமான சோகம்” எனத் தெரிவித்தார்.
“சர்வதேச மனிதநேய அமைப்புகள் உடனடியாக தலையிட்டு, இந்த இக்கட்டான தருணத்தில் ஆதரவும் உதவியும் வழங்க கோருகிறோம். இந்த துயரம் எங்கள் மக்கள் தனியே தாங்க முடியாததாகும்” என்று அவர் பேசியதாக ஏ எஃப் பி செய்தி முகமை கூறுகிறது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சூடான் ராணுவம் மற்றும் ஆர்எஸ்எஃப் இடையே ஏற்பட்ட உள்நாட்டு போர், நாட்டில் பஞ்சம் ஏற்படவும் மேற்கு தர்ஃபூர் பகுதியில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் எழுவதற்கும் வித்திட்டுள்ளது.
இந்த உள்நாட்டு போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை பரவலாக வேறுபடுகின்றது. 2023-இல் மோதல் தொடங்கியதிலிருந்து 1,50,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு தெரிவித்துள்ளார். 1.2 கோடி பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூடான் லிபரேஷன் ஆர்மியின் குழுக்கள் சூடான் ராணுவத்துடன் இணைந்து ஆர்எஸ்எஃப்-க்கு எதிராக சண்டையிடப்போவதாக உறுதிமொழி அளித்துள்ளது.
பல்வேறு இன மக்கள் வாழும் பகுதியை அரேபியர்கள் ஆளும் பகுதியாக மாற்றவே ஆர்எஸ்எஃப் மற்றும் அதனுடன் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள் போரை தொடங்கியிருப்பதாக தர்ஃபூர் மக்கள் பலரும் நம்புகின்றனர்.