தமிழ்நாட்டில், உயர் சிகிச்சை மருத்துவ படிப்புகளில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) சேர்க்கை குறைவாக உள்ளது. வாழ்க்கை – வேலை சமநிலை, ஊதியம், பதவி உயர்வு, மற்றும் கலந்தாய்வு நடைமுறையில் சிக்கல் ஆகிய காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நமது இருதயத்தில் ஏதேனும் கோளாறு என்றால் இருதயவியல் நிபுணரை சந்திக்கிறோம். மூளையில் பிரச்னை என்றால் நரம்பியல் மருத்துவரை அணுகுகிறோம். இது போல, துறை சார்ந்த நிபுணத்துவம் பெறுவதற்கான மருத்துவ படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன.
அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மருத்துவத்தில் உயரிய படிப்புகளில் ஒன்றான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவத்தை படிப்பதில் ஏன் மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை?
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே இப்படியான நிலை உள்ளது. வேலை-வாழ்க்கை சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தலைமுறையினரின் விருப்பங்கள் வேறு மாதிரியாக உள்ளனவா? உயரிய மருத்துவ படிப்பை படிக்கும் மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா? ஆகிய கேள்விகளும் எழுகின்றன.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்காக (இருதயவியல் , சிறுநீரகவியல், குடல் மருத்துவம், நரம்பியல் உள்ளிட்ட துறை சார்ந்த நிபுணத்துவம் அளிக்கும் படிப்புகள். இவை முதுநிலை மருத்துவ படிப்புக்கு பிறகு, மேற்கொள்ளப்படும் படிப்பாகும்) நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சுமார் 50% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களில் 50% அந்த மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதாவது முதுநிலை மருத்துவ படிப்பு முடித்து அந்த மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு 50% கோட்டா ஒதுக்கப்படுகிறது. இந்த 50% இடங்களை மாநில தேர்வுக்குழு ( மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை நடத்தி இடங்களை நிரப்பும் குழு) நிரப்பிட வேண்டும். ஆனால் இந்த இடங்களை நிரப்புவது சவாலாகி உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மருத்துவர்களுக்கு ஆர்வம் குறைகிறதா?
ஊதியம், பதவி உயர்வு, அங்கீகாரம் கிடைக்காததால் “நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்” என்ற எண்ணம் இளம் மருத்துவர்களுக்கு எழுவது இயல்பு தான் என்கிறார் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம்.
“சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு முடிப்பதாலேயே ஒருவருக்கு பெரிய அளவில் கூடுதல் சம்பளமோ, அல்லது பதவி உயர்வோ இப்போதைய அமைப்பில் தரப்படுவதில்லை. முதுநிலை படிப்பு முடித்தவுடன் ஒருவர் உதவி பேராசிரியராக தகுதிப் பெறுகிறார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி முடித்தும் அதே உதவி பேராசிரியராகவே பல ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுகிறவர்கள் இருக்கிறார்கள். அரசு மருத்துவர் கோட்டாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்தவர்கள், ஓய்வு பெறும் வரை அரசு பணியில் இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. அப்படி இருக்கையில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் இதில் குறைவாக உள்ளன. ஏனென்றால், பதவி உயர்வு இடங்கள் ஒரு மருத்துவரின் கல்விக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதில்லை.” என்கிறார் ராமலிங்கம்
தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க செயலாளர் அகிலன் பேசுகையில் “ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறையில் ஜூனியர் மருத்துவர்கள் என்ற பதவியில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருதயவியல், நரம்பியல் போன்ற துறைகளுக்கு நோயாளிகள் வரும் போது, அவர்களுக்கு தேவையான முதற்கட்ட பரிசோதனைகளை செய்வது, தகவல்களை பதிவு செய்வது போன்ற வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் அந்த நிலை இல்லை.” என்றார்.
இந்திய நிலைமை என்ன?
இந்தியா முழுவதும் உள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி இடங்களில் தமிழ்நாட்டில் இருப்பது சுமார் 10 சதவீதம். தேசிய அளவில் சுமார் 600-1000 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலைமையை எதிர்கொள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கான கட் ஆப் சதவீதம் குறைக்கப்படுகிறது.
நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி 2022 சேர்க்கையின் போது இரண்டு சுற்று கலந்தாய்வுக்கு பிறகு இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் கட் ஆப் தகுதி 50 பெர்சண்டைல் முதல் 20 பெர்சண்டைல் என குறைக்கப்பட்டது. அடுத்த ஆண்டும் இடங்கள் அனைத்தும் நிரப்பப்படவில்லை.
எனவே நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி 2023-ல் கட் ஆப் 20 பெர்சண்டைல் முதல் பூஜ்ஜியம் என்று குறைக்கப்பட்டது. அதாவது மருத்துவ முதுநிலை படிப்பை முடித்து, நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்கான தேர்வை ஒருவர் எழுதியிருந்தாலே, அவர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு நீதிபதி பி ஆர் கவய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, “1003 மதிப்பு மிகுந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களுக்கான பற்றாக்குறை எப்போதும் இருப்பதை பார்க்கிறோம். மறு புறம் இந்த மதிப்பு மிகுந்த இடங்கள் காலியாக உள்ளன” என்று தெரிவித்திருந்தது.
அதே போன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரம் குறித்த மற்றொரு வழக்கில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்ட போது, மருத்துவ இடங்கள் காலியாக போகக் கூடாது, அதை மத்திய அரசு அதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி பி ஆர் கவய் மற்றும் கே வி விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
வேலை – வாழ்க்கை சமநிலைக்கான எதிர்பார்ப்பு
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளின் போது வார விடுப்பு கிடையாது. 24 மணி நேரமும் பணிக்கு அழைப்பு வரக்கூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பராமரிப்பு, பெற்றோர்களை கவனித்தல் மற்றும் அவசர விடுப்பு தேவைகள் சிரமமாகும். பணியோ, பணி நேரமோ வரையறுக்கப்படுவதில்லை என்பதால் வேலை-வாழ்க்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. சென்னையில் ஒரு முன்னணி அரசு மருத்துவ கல்லூரியில், குறிப்பிட்ட சூப்பர் ஸ்பெசாலிட்டி துறையில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பதாலேயே அந்த இடங்களை தேர்வு செய்யாமல் விட்டுள்ளனர்” என இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு தகுதி பெற்றும் தனிப்பட்ட காரணங்களால் படிப்பில் சேராத மருத்துவர் மணிகண்டன் கூறுகிறார்.
“அடிப்படையில் மருத்துவத்தை தனியார்மயப்படுத்துவதே பிரச்னை ஆகும். எந்த துறை வணிக ரீதியாக உதவியாக இருக்குமோ, அதற்கு தான் அதிக தேவை உள்ளது. பிற துறைகளை மருத்துவர்கள் விரும்புவதில்லை” என்கிறார், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்.
“சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளில் மருத்துவர்கள் நேரடி தலையீடுள்ள துறைகளிலேயே விருப்பம் அதிகமாக உள்ளது. இருதயவியல், இரைப்பை-குடல் மருத்துவம், இறைப்பை-குடல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகள் விரும்பப்படுகின்றன. அதே நேரத்தில், மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்கும் துறைகளான நரம்பியல் போன்றவையோ, அரசு மருத்துவமனைகளில் குறைந்த நோயாளிகளையே ஈர்க்கும் பிளாஸ்டிக் சர்ஜரி, குழந்தைகள் அறுவைசிகிச்சை ஆகிய துறைகள் விருப்பமான படிப்புகளாக இல்லை” என்கிறார் மணிகண்டன்.
பதவி உயர்வுக்கான வாய்ப்பில்லை
உதவி பேராசிரியர் அடுத்ததாக இணை பேராசிரியராக வேண்டும். ஆனால் பல இடங்களில் இந்த பணியிடமே கிடையாது, அல்லது மிக சொற்ப எண்ணிக்கையில் இருக்கும். நான்கு உதவி பேராசிரியர்கள் இருந்து, ஒரு இணை பேராசிரியர் பணியிடங்கள் இருந்தால் அதில் ஒரு உதவி பேராசிரியர் மட்டுமே இணை பேராசிரியராக முடியும். அவர் பதவி உயர்வு பெற்று பேராசிரியரானால் அடுத்து உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
“அது எல்லா நேரத்திலும் நடக்காது. பதவி உயர்வு இல்லாத போது, சம்பளமும் அதற்கு ஏற்றாற் போலவே இருக்கும். பல நேரங்களில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனக்கு கீழ் படித்த மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளில் துறைத் தலைவர்களாக, அதிக சம்பளம் பெறும் நிலையில் உள்ளனர்” என்கிறார் எஸ்.பி.டி.ஜி.ஏ தலைவர் மருத்துவர் ராமலிங்கம்.
பட மூலாதாரம், Getty Images
கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பம்
இடங்கள் நிரம்பாமல் போனதற்கு கலந்தாய்வுக் குழப்பமும் ஒரு காரணம் என்கின்றனர். தமிழ்நாட்டில் 412 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் உள்ளன. அதில் 215 இடங்கள் அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இந்த ஆண்டு மே மாதம், அரசு மருத்துவர்களுக்கு நடந்த முதல் சுற்று கலந்தாய்வுக்கு பின் 145 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவிற்கு திருப்பி வழங்கப்பட்டன.
“மாநிலத்தில் அடுத்தடுத்த சுற்றுகள் கலந்தாய்வு நடத்தாமல், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை திருப்பி வழங்கியது தவறு. இது குறித்து உச்ச நீதிமன்றத்தி வழக்கு தொடுக்கப்பட்டது” என்று கூறுகிறார் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க செயலாளர் அகிலன். இந்த இடங்களை மாநிலமே தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே பி நட்டாவுக்கு கடிதம் எழுதினார்.
நாடாளுமன்றத்தில் திமுகவின் உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். அகில இந்திய கோட்டாவுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த பின், 39 இடங்கள் மாநிலத்துக்கு திருப்பி வழங்கப்பட்டன. அந்த இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில் மீண்டும் 24 இடங்கள் காலியாக இருந்தன. எனவே அந்த இடங்களை நிரப்ப மீண்டும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்த மாநில சுகாதாரத்துறை மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி கேட்டது. மொத்தம் 215 இடங்கள் அரசு மருத்துவர்களால் நிரம்பியிருக்க வேண்டிய நிலையில், 100க்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன.
“அரசு மருத்துவர்களுக்கு என இடம் ஒதுக்குவதற்கு பதிலாக, தமிழ்நாட்டுக்கு என ஒதுக்க வேண்டும். நான் தமிழ்நாட்டிலேயே தான் பிறந்து வளர்ந்து, இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தான் படித்து வந்துள்ளேன். ஆனால் அரசு மருத்துவராக பணி புரியாததால், நானும் அகில இந்திய கோட்டாவில் பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு தான் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிக்க வேண்டியுள்ளது” என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இருதயவியல் படிப்பை அகில இந்திய கோட்டாவின் கீழ் தேர்ந்தெடுத்து படித்து வரும் தமிழ்நாடு இருப்பிட மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் மருத்துவர் கீர்த்தி வர்மன்.
“அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் தகுதி பெற 2 ஆண்டுக அரசுப் பணி கட்டாயம் என்ற விதியை தளர்த்த வேண்டும். அதற்கு பதிலாக, கலந்தாய்வில் அரசு மருத்துவர்களின் பணி அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமை வழங்கலாம்” என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.
சூப்பர் ஸ்பெசாலிட்டி பணியிடங்கள் வேண்டும்
மருத்துவ நிபுணரை சந்திக்கவே பல வாரங்கள் காத்துக் கிடக்கும் மேற்கத்திய நாடுகளை ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால், நமது மருத்துவமனைகளில் ஒரு நிபுணர் மிக அதிகமான நோயாளர்களை பார்க்க வேண்டியுள்ளது. எனவே, நமக்கு தேவை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப தேவையை அறிந்து பணியிடங்களையும், புதிய துறைகளையும் உருவாக்க வேண்டும்” என்றார் மருத்துவர் கீர்த்தி வர்மன்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் எல்லா ஊரிலும் சூப்பர் ஸ்பெசாலிட்டி துறைகள் இல்லை. சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேலாகியும், இருதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறை அங்கு இல்லாததால் நோயாளிகளை மதுரை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பும் நிலை உள்ளது. தேனி, கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் புற்றுநோய் துறை கிடையாது.
ரத்த அறிவியல், முடநீக்கியல் உள்ளிட்ட துறைகளும் நகரங்களில் மட்டுமே உள்ளன. எனவே, சூப்பர் ஸ்பெசாலிட்டி முடித்த மருத்துவர்கள் தமது துறை சார்ந்த பணியிடங்கள் இல்லாததால், படித்ததற்கு குறைவான வேலைகளை செய்ய நேர்கிறது. பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு குறைகிறது. இதுவும் சேர்க்கையை பாதிக்கிறது” என்று கூறிய மருத்துவர் மணிகண்டன், இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மருத்துவ நிபுணர்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் ” என எச்சரிக்கிறார்.