• Sun. May 18th, 2025

24×7 Live News

Apdin News

சூரப்பட்டில் ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி | Govt Approves Construction of Rs.146 Crore Drinking Water Treatment Plant on Surapattu

Byadmin

May 18, 2025


சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில், நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், கடந்த 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையம், பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு, சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பகுதியில் உள்ள 12 குடியிருப்பு பகுதிகளுக்கும், சூரப்பட்டு மற்றும் சண்முகாபுரம் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. 59 ஆண்டுகள் பழமையான இந்த நிலையத்தில் தற்போது தினமும் 7 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது.

இதனால், இந்த பழைய கட்டமைப்பை இடித்துவிட்டு, நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்கவும், இந்த நிலையத்துக்கு புழல் ஏரியிலிருந்து தினமும் 52 மில்லியன் லிட்டர் நீரை கொண்டு செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்தவும் சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, 47 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.81.95 கோடியில் அமைப்பது, புழல் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 52 மில்லியன் லிட்டர் குடிநீரை எடுக்கும் கட்டமைப்பை ரூ.12.04 கோடியில் அமைப்பது, இந்த நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு ரூ.52.63 கோடி செலவில் பராமரிப் பது என மொத்தம் ரூ.146.62 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதை கவனமாக பரிசீலித்த அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதியை வழங்கி, நேற்று முன்தினம் (மே 16) அரசாணை பிறப்பித்துள்ளது.



By admin