• Fri. Jan 30th, 2026

24×7 Live News

Apdin News

சூறாவளி தாக்கம்: மத்தியத் தரைக்கடலில் 380 பேர் வரை நீரில் மூழ்கியிருக்கலாம் என இத்தாலி சந்தேகம்

Byadmin

Jan 30, 2026


கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய ஹாரி சூறாவளியின் தாக்கம் காரணமாக, மத்தியத் தரைக்கடலில் பயணித்த சுமார் 380 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. துனிசியாவில் இருந்து புறப்பட்ட இந்த அகதிகள், கடல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து ஆட்கடத்தல்காரர்களால் இயக்கப்பட்டதாகக் கருதப்படும் சுமார் 08 படகுகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடும் வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மால்டா அருகே இடம்பெற்ற மற்றொரு கடல் விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆப்பிரிக்காவில் இருந்து பலர் தொடர்ந்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பயணங்களின் காரணமாக, 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 25,600 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு பதிவுசெய்துள்ளது.

By admin