செங்காந்தளின்
மொட்டுக்கள் அரும்புகின்றன
என்றோ ஒருநாள்
எங்கோ ஓர் ஒளியில்
மலரும்
அது வரை மொட்டுக்கள் மூச்சு விட துடிக்கிறது…….
செங்காந்தள் காலம் இது
செங்குருதி சொல்கிறது
மெல்ல மெல்ல என்னை கொல்கிறது
எப்போது மலர்ச்சியில் முதிர்ச்சி என்று…..
மழையும்
மண் வாசனையும் என
மன மகிழும் கார் காலம் அல்ல இது
நம் உரிமைகளுக்காய்
உணர்வுகளுக்காய்
உறவுகளுக்காய்
உயிர் துறந்த
நம்மவரின் இறத்தக்
கறை படிந்த காலம் இது…….
ஆங்காங்கே இல்லை
இன்றும் எங்கும்
அழுகுரல்கள் கேட்கிறது
பெற்றவர்கள் நடைபிணமாய்
உற்றவர்கள்
சிறை மனதாய்
மழலைகளும்
மைந்தர்களும்
மலர்ச்சிக்காக
நாளைய எழுச்சிக்காக
ஒவ்வொரு உள்ளத்திலும்
கறுப்பப் புகைகள்
என்றோ ஒரு நாள் பற்றி எரியும் தீயாக
கல்லும் முள்ளுமாய்
கடந்த பாதைகள் ஏராளம்
தேசமெங்கும் செங்காந்தள் மலரும்
இது நம் உள்ளத்து கிளர்ச்சி…….
பூக்களின் வளர்ச்சிக்காய்
தேசம் தாண்டியும்
உண்மையான
உன்னதமான
உணர்ச்சிகளோடு
உள்ளத்தால்
உரம் இடுவோர் ஏராளம்…..
அல்லி மலர்கள்
பள்ளி கொள்ள
நம் தேச முல்லை துளிர்விடும் நேரம் இது…….
இது செங்காந்தள் காலம்
செங்குருதி ஓடிய தேசமெங்கும்
செங்காந்தள் மலரும் காலம் ….
தே. நிலா
The post செங்காந்தள் காலம் | தே. நிலா appeared first on Vanakkam London.