பட மூலாதாரம், Getty Images
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, கருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரை பரந்து விரிந்த பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை மங்கோலிய நாடோடி ஒருவர் நிறுவினார். தெமூஜின் என்ற இயற்பெயர் கொண்ட அந்த நாடோடி, பேரசரர் செங்கிஸ் கான் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டார்.
புகழ்பெற்ற பைக்கால் ஏரியின் கிழக்கே கரடுமுரடான பகுதியில் நாடோடி ஒருவரின் குழந்தையாக பிறந்தார் தெமூஜின். பிறக்கும்போது அவரது உள்ளங்கையில் சிவப்பு மச்சம் ஒன்று இருந்ததாவும், அது அவர் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியாளராக உருவாகுவார் என்பதற்கான அடையாளமாக கருதப்பட்டதாகவும் ‘The Secret History of the Mongols’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது.
தெமூஜின் சிறுவனாக இருந்தபோதே, எதிரிகள் நச்சு கொடுத்ததால் அவரது தந்தை கொலை செய்யப்பட்டதால் அவர் மிகச் சிறிய வயதிலேயே ஆதரவற்றவராக ஆனார்.
செங்கிஸ் கான் என்ற பெயர், அவரை இஸ்லாமியர் என்று பலர் நினைக்கக் காரணமாக இருக்கிறது. உண்மையில், கான் என்பது மரியாதைக்குரிய பட்டப்பெயர் ஆகும். மங்கோலியரான செங்கிஸ்கான், வானத்தை வணங்கும் பாரம்பரியத்தைக் கொண்ட ஷாமனிசத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கல்வியறிவு இல்லாத செங்கிஸ் கான் தனது ஆரம்பகால வாழ்க்கையை அவமானம் மற்றும் வறுமையில் கழித்தார்.
அவரது வெற்றிப் பயணம் 50 வயதில் தொடங்கினாலும், உலகின் தலைசிறந்த போர்வீரர்களில் ஒருவராகவே அவர் திகழ்ந்தார். செங்கிஸ் கானின் தலைமையின் கீழ் உருவான மங்கோலிய வம்சம், சீனா, மத்திய ஆசியா, இரான், கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் பெரும்பகுதியை ஆண்டது.
செங்கிஸ் கானின் படைகள், ஆஸ்திரியா, பின்லாந்து, குரோஷியா, ஹங்கேரி, போலந்து, வியட்நாம், பர்மா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு சென்றன.
“செங்கிஸ் கானின் மங்கோலியப் பேரரசு, 12 மில்லியன் சதுர மைல்களுக்கு மேல் பரவியிருந்தது, அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் சமமான பரப்பளவையும் வட அமெரிக்கக் கண்டத்தை விடப் பெரிய இடத்தை ஆண்டது. மங்கோலியப் பேரரசுடன் ஒப்பிடுகையில், ரோமானியப் பேரரசு மிகச் சிறியதாக இருந்தது” என்று F.E. க்ராஸ் தனது ‘epoch der mongolian’ என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
வரலாற்றில் இடம் பெற்றுள்ள பேரரசர்களில், மகா அலெக்சாண்டர் தனது தந்தை பிலிப் உருவாக்கிய பிரமாண்டமான போர் கட்டமைப்பைக் கொண்டிருந்தார். ஜூலியஸ் சீசர் 300 ஆண்டுகாலமாக ராணுவ மேன்மை பெற்றிருந்த ரோமானியப் பின்னணியைக் கொண்டிருந்தார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கிடைத்த மக்கள் ஆதரவே நெப்போலியனின் ஆட்சிக்கு அடித்தளமாக இருந்தது.
இவற்றுக்கு நேர்மாறாக, செங்கிஸ் கான் தனது சொந்த முயற்சியிலேயே மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தார். அத்துடன், அவர் ஏராளமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தனக்கென சரித்திரத்தில் தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர் செங்கிஸ் கான்.
பட மூலாதாரம், Getty Images
சகோதரனை கொலை செய்த தெமுஜின்
இளம் வயதிலேயே பருந்துகளைப் பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடும் கலையை தெமுஜின் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். அந்தக் காலத்தில், எதிர்காலத்தில் தலைவராக உருவாகும் ஒருவருக்கு இதுவொரு அத்தியாவசியத் திறமையாகக் கருதப்பட்டது. செங்கிஸ் கான் எழுதப் படிக்கத் தெரியாதவர், கல்விக் கற்காதவர்.
13 வயதாக இருந்தபோதே தனது சகோதரர் பெஹ்டர் என்பவரைக் கொலை செய்தார்.
“இளம் வயதிலேயே தனது சகோதரரையே கொல்லத் துணித்த அவருடைய துணிவு, இரக்கமற்ற அவரது சுபாவத்தைக் குறிக்கிறது. தனது இளமைப் பருவத்திலேயே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொண்டார். தந்தையின் மூத்த மகனான பெஹ்டர், மரபுகளின் படி வாரிசாக வருவதற்கான உரிமை பெற்றவராக இருந்தார். எனவே தெமூஜின் மூத்த சகோதரனை தனது போட்டியாளராகக் கருதினார்” என்று ஃபிராங்க் மெக்லின் தனது ‘Genghis Khan: The Man Who Conquered the World’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
படிப்படியாக, தன்னை ஒரு இளம் போர்த் தளபதியாக நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கிய செங்கிஸ் கான், கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுவதையும் கூடாரங்களிலும் சண்டையிலும் கழித்தார், இதனால் நாட்டை நிர்வகிக்க அவருக்கு சிறிது நேரம் மட்டுமே கிடைத்தது.
பிரபல இரானிய வரலாற்றாசிரியர் மின்ஹாஜ் அல்-சிராஜ் ஜுஸ்ஜானி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “செங்கிஸ் கான் சிறந்த திறன்களைக் கொண்ட மனிதர், அவர் ஓர் கடவுளைப் போல தனது படையை வழிநடத்தினார். கோரசானுக்கு வந்தபோது, அவருக்கு 65 வயது. உயரமாகவும், நல்ல உடலமைப்புடனும் இருந்த அவரது முகத்தில் முடி மிகக் குறைவாகவும் வெண்மையாகவும் இருந்தது. அவரது கண்கள் பூனையின் கண்கள் போல இருந்தன. அவரது உடலில் மிகப்பெரிய ஆற்றல் இருந்தது. தனது எதிரிகளிடம் இரக்கமே காட்டதவர்.”
பட மூலாதாரம், Calcutta University Press
நச்சு பூசப்பட்ட அம்பினால் காயமடைந்த செங்கிஸ் கான்
“அந்த நாட்களில், போரில் பயன்படுத்தப்படும் அம்புகளில் பாம்புகளின் கொடிய நச்சு பூசப்படுவது வழக்கம். சண்டையில் அம்பால் ஒருவர் தாக்கப்பட்டால், அதிலுள்ள நச்சு உடலில் விரைவாக பரவும், உடலில் நச்சு நீண்ட நேரம் தங்கினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அம்பால் தாக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சையளிக்க, காயம்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி, பருக பால் கொடுக்க வேண்டும். ஆனால் செங்கிஸ் கானுக்கு ஏற்பட்ட காயம் கடுமையானதாக இருந்தது. அவரது கழுத்தில் பாய்ந்த அம்பு, நரம்பை துண்டித்து, அதிக ரத்த சேதத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அவரது தளபதிகளில் ஒருவரான ஜெல்மே செய்த சமயோஜிதமான முதலுதவியே செங்கிஸ் கானின் உயிரைக் காப்பாற்றியது. ரத்தப்போக்கை நிறுத்த முடியாத நிலையில், அவர் செங்கிஸ் கானின் கழுத்தில் இருந்து நச்சு ரத்தத்தை உறிஞ்சி துப்பி, நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்தினார்.”
சிறிது நேரத்திற்குப் பிறகு, செங்கிஸ் கானுக்கு சுயநினைவு வந்தது, உடனே அவருக்கு பால் கொடுத்த ஜெல்மே அவரது உயிரைக் காப்பாற்றினார்.
ஆனால் தனது உயிரைக் காப்பாறியவரை பாராட்டுவதற்குப் பதிலாக முரட்டுத்தனமாக நடந்துக் கொண்ட செங்கிஸ் கான், ‘அந்த நச்சு ரத்தத்தை இன்னும் கொஞ்சம் தூரமா துப்ப முடியாதா?’ என்று கடிந்துக் கொண்டார்.
பட மூலாதாரம், Vintage
செங்கிஸ் கானின் குறைபாடுகள்
செங்கிஸ் கானின் ஆளுமையில் பல குறைபாடுகள் இருந்தபோதிலும் அவரது அரசியல் திறமைகளில் எந்த சந்தேகமும் இல்லை என பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.
ரஷ்ய வரலாற்றாசிரியர் ஜார்ஜ் வெர்னாட்ஸ்கி எழுதிய ‘மங்கோலியர்களும் ரஷ்யாவும்’ என்ற புத்தகத்தில், “செங்கிஸ் கான் ராணுவத் திட்டமிடலில் ஒப்பிடமுடியாத தலைசிறந்தவராக இருந்தபோதிலும், அவர் ஓர் போர் தளபதியைப் போல திறம்பட செயல்படவில்லை. மக்களின் மனதையும் மனித உளவியலையும் படிக்கும் அவரது திறன் குறிப்பிடத்தக்கது. அவரது கற்பனையும் போற்றத்தக்கது. பல தனிப்பட்ட அதிர்ச்சிகளைக் கடந்து வந்தவர். தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், கட்டுப்பாடுக் கொண்டவர் மற்றும் தந்திரமான மனிதர். அது மட்டுமல்ல, இரக்கம், நன்றி போன்றவை இல்லாதவர், பழிவாங்கும் தன்மை கொண்டவர் என்பது அவரது குறைபாடுகளில் முக்கியமானவை.
மர்கிட்ஸ் உடனான போரின் போதுசெங்கிஸ் கானின் முதல் மனைவி போர்தா காதூன் எதிரிகளினால் கடத்தப்பட்டார். ‘The Secret Life of Mongols’ என்ற புத்தகத்தில், செங்கிஸ் கான் தனது தாயார் ஹோயெலுன் உட்பட பிறருடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றபோது, தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனதற்காக விமர்சிக்கப்படுகிறார்.
செங்கிஸ் கான் தனது குதிரையில் ஏறி தப்பித்துவிட்டதால், அவரது மனைவி போர்தா கடத்தப்பட்டதாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகன் செங்கிஸ் கான், மற்றொரு மகனான பெஹ்டர்-ஐ கொன்றபோது, அவரது தாய் செங்கிஸ் கானை “மிருகம்” என்றும் “பிசாசு” என்று வசைபாடினார்.
செங்கிஸ் கான் மிகவும் எச்சரிக்கையாகவும், கூர்ந்து கவனிப்பவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் படையை முன்னால் இருந்து வழிநடத்தும் இயல்பு கொண்டவரல்ல.
பட மூலாதாரம், Getty Images
செங்கிஸ் கானின் கோபம்
செங்கிஸ் கான் கோபப்படும் சுபாவத்தைக் கொண்டவர். 1220களில் டிரான்ஸாக்சியானாவைக் கைப்பற்றிய பிறகு, மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய இளவரசர்களுடன் தொடர்பு கொள்ள மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தர் ஒருவரையும் நியமித்தார்.
மின்ஹாஜ் சிராஜ் ஜுஸ்தானி தனது ‘Tabaqat-i-Nasiri’ புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “மொசூல் இளவரசர் சிரியாவைத் தாக்கப் போகிறார் என்ற செய்தி செங்கிஸ் கானுக்குக் கிடைத்தது. உடனே அவ்வாறு செய்யத் துணிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை எழுதுமாறு அவர் தனது எழுத்தருக்கு உத்தரவிட்டார். ராஜ்ஜிய ரீதியிலான கடிதம் என்பதால், இஸ்லாமிய உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி கடிதம் எழுதினார். மங்கோலிய மொழியில் அந்த கடிதத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட செங்கிஸ் கானுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது. அவரது கோபத்தைக் கண்டு நடுங்கிப் போன எழுத்தரைப் பார்த்து,’நீ ஒரு துரோகி. இந்தக் கடிதத்தைப் படித்தால் மொசூல் இளவரசர் இன்னும் திமிர்பிடித்தவராகிவிடுவார்’ என்று சீறினார்.”
திட்டியதுடன் அவர் சீற்றம் அடங்கவில்லை, தனது கைகளைத் தட்டி வீரர்களை அழைத்த செங்கிஸ் கான், கடிதம் எழுதிய எழுத்தரை கொல்லும்படி கட்டளையிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
தாராளமும் கொடூரமும் கொண்ட மனப்பான்மை
செங்கிஸ் கானின் கொடூரத்தை விவரிக்கும் வேறு சில கதைகளும் உள்ளன. அவர் ஒரு நகரத்தைக் கைப்பற்றியதும், இளைஞர்கள் மற்றும் உடல் தகுதியுள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து அம்புகளை எய்தி கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஜேக்கப் அபோட் எழுதிய ‘தி ஹிஸ்டரி ஆஃப் செங்கிஸ் கான்’ புத்தகத்தில், “ஒருமுறை வயது முதிர்ந்த பெண் ஒருவர் மங்கோலியர்களிடம் தனது உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டாள். அதற்கு ஈடாக விலைமதிப்பற்ற முத்து ஒன்றைத் தருவதாக அந்த பெண் கூறினார். முத்து எங்கே இருக்கிறது என்று கேட்டபோது, அதை விழுங்கிவிட்டதாக அந்தப் பெண் கூறினாள். செங்கிஸ் கானின் வீரர்கள் தங்களிடம் இருந்த வாளால் பெண்ணின் வயிற்றைப் கிழித்து அந்த முத்தை எடுத்தனர். ஒரு பெண் தன்னுடைய வயிற்றில் முத்தை பதுக்கி வைத்திருந்ததைப் போல பிற பெண்களும் முத்துக்களை மறைக்க முயன்றிருக்கலாம் என்று நினைத்து, அவர்கள் பல பெண்களின் வயிற்றைக் கிழித்து சோதித்தனர்.”
இப்படி பிறர் மீது இரக்கம் இல்லாமல் இருந்த செங்கிஸ் கான், தனது பேரக்குழந்தைகளை மிகவும் நேசித்தார். பால் ரச்னீவ்ஸ்கி தனது “Genghis Khan: His Life and Legacy” என்ற புத்தகத்தில் , “பாமியான் முற்றுகையின் போது செங்கிஸ் கானின் பேரன்களில் ஒருவர் கொல்லப்பட்டார். அதில் கோபமடைந்த செங்கிஸ் கான், நாய்கள், பூனைகள், கோழிகள் உட்பட அந்தப் பகுதியில் இருந்த அனைத்து உயிரினங்களையும் கொல்ல உத்தரவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், திடீரென்று தாராள மனப்பான்மையைக் காட்டும் குணமும் அவருக்கு இருந்தது. ஒருமுறை, விவசாயி ஒருவர் கொளுத்தும் வெயிலில் வியர்வை பொங்க வேலை செய்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், விவசாயியின் அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்து, கொத்தடிமையாக உழைத்துக் கொண்டிருந்த அவரை விடுவித்தார்.

கொடுமையை நியாயப்படுத்தும் தன்மை
செங்கிஸ் கான் கொடூரமானவர், பழிவாங்குவதில் வல்லவர் மற்றும் துரோகம் செய்யும் மனிதர் என்பதை வரலாற்றாசிரியர்கள் கிட்டத்தட்ட ஒருமனதாக ஒப்புக் கொள்கின்றனர். சிலர் அவரை ஒரு மனநோயாளி என்றும் அழைக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள், துரோகிகள் மற்றும் விசுவாசமற்றவர்களைக் கொன்றதாகக் கூறி தனது கொலை வெறியை நியாயப்படுத்துபவர் என்றே செங்கிஸ் கான் கருதப்படுகிறார்.
“செங்கிஸ் கான் கொடூரமானவர் என அவரது சகாக்கள் கருதவில்லை, ஏனென்றால் 21ஆம் நூற்றாண்டில் குற்றங்கள் என்று நாம் கருதுபவை அனைத்துமே 13 ஆம் நூற்றாண்டில் சர்வசாதாரணமானவையாக இருந்தவை. அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ படையெடுப்பாளர்கள் கூட இதில் விதிவிலக்கல்ல. 16-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனின் எட்டாம் ஹென்றி செய்த கொடுமைகளை விடக் குறைவான கொடுமைகளையே செங்கிஸ் கான் செய்தார் என்று சொல்லலாம். அதேபோல கொடுமைகளை செய்வதில், தைமூர் லாங் மற்றும் சீனர்களும் செங்கிஸ்கானை மிஞ்சியவர்கள்” என்று வெர்னாட்ஸ்கி எழுதுகிறார்.
தனது “சரணடைதல் அல்லது இறத்தல்” கொள்கையானது, எதிரிகள் தங்களுடைய உயிரைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பை வழங்கியதாக செங்கிஸ் கான் எப்போதுமே கூறி வந்தார். அவர்கள் இந்த விருப்பத்தெரிவைப் பயன்படுத்த மறுத்தபோதுதான் அவர்களின் உயிரைப் பறித்ததாக செங்கிஸ் கான் கூறுகிறார். தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்த செங்கிஸ் கான் , தனது குதிரையிலிருந்து இறங்க விரும்பமாட்டார் என்று கூறப்படுகிறது. அவர் வசதியான படுக்கையில் உறங்க மாட்டார். எப்போதும் பசியுடனும், மரண பயத்துடனும் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய எல்லையிலிருந்து திரும்பிய செங்கிஸ் கான்
1211 முதல் 1216 வரை, மங்கோலியாவிற்கு அப்பால் சீனாவைக் கைப்பற்றும் தனது இலக்கை நோக்கி செங்கிஸ் கான் ஐந்து ஆண்டுகள் பயணித்தார்.
பர்வான் போரில் மங்கோலியர்களுக்கு எதிராக குவாரசமியப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான சுல்தான் ஜலால் அல்-தின் ஒரு அரிய வெற்றியைப் பெற்றார், இது செங்கிஸ் கானை கோபப்படுத்தியது.
ஜலாலுதீனைப் பின்தொடர்ந்த செங்கிஸ் கான் இந்தியாவின் எல்லையை அடைந்தார். செங்கிஸ் கானுக்கும் ஜலால் அல்-தினின் படைகளுக்கும் இடையிலான இறுதிப் போர் சிந்து நதிக்கரையில் நடந்தது.
ஜலால் அல்-தினின் படையை செங்கிஸ் கான் மூன்று பக்கங்களிலும் சுற்றி வளைத்தார். அவர்களுக்குப் பின்னால் சிந்து நதி பாய்ந்துக் கொண்டிருந்தது. வில்ஹெல்ம் பர்தோல்ட் தனது ‘Turkestan Down to the Mongol Invasion’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், “ஜலால் தனது அனைத்து படகுகளையும் அழித்தார், எனவே அவரது வீரர்கள் போர்க்களத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. செங்கிஸ் கானை விட அதிகமான வீரர்களைக் கொண்டிருந்த ஜலால், செங்கிஸ் கானின் முதல் தாக்குதலை முறியடித்தார், ஆனால் செங்கிஸ் கானின் வீரர்கள் மிகச் சிறிய பகுதியில் பரவியிருந்ததால், அம்புகளை எய்வதும் வாட்களால் சண்டையிடுவதும் அவர்களுக்குக் கடினமாக இருந்தது.”
பட மூலாதாரம், Getty Images
இந்தப் போரை விவரிக்கும் முகமது நேசவி, “மங்கோலியர்களின் அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியபோது, ஜலால் அல்-தின் தனது குதிரையுடன் 180 அடி ஆழமுள்ள சிந்து நதியில் குதித்தார். 250 கெஜ அகலத்தைக் கடந்து, ஆற்றின் மறுகரையை அடைந்தார். ஜலாலுதீனின் துணிச்சலைக் கண்ட செங்கிஸ், அவரை குறி வைக்க வேண்டாம் என தனது வீரர்களைத் தடுத்தார், ஆனால் ஜலாலின் தோழர்களைக் விட்டுவைக்கவில்லை. அவரது வில்லாளர்கள் துல்லியமாக இலக்கு வைத்து ஜலாலின் படையில் பெரும்பாலோரைக் கொன்றனர். ஜலாலின் மகன்கள் மற்றும் ஆண் உறவினர்கள் என பலருக்கும் செங்கிஸ் கான் மரண தண்டனை விதித்தார்” என்று எழுதியுள்ளார்.
அங்கிருந்து தப்பித்து சென்ற ஜலால் அல்-தின், டெல்லி சுல்தான் இல்துமிஷ்-இடம் அடைக்கலம் கோரினார். ஆனால் மங்கோலியர்களின் தாக்குதலுக்கு பயந்து அவருக்கு அதிகாரப்பூர்வ அடைக்கலம் வழங்க சுல்தான் மறுத்துவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
செங்கிஸ் கானுக்கு எதிரியான இந்தியாவின் வெப்பம்
ஜலால் டெல்லிக்குச் செல்லவில்லை என்றபோதிலும், தன்னை செங்கிஸ்கான் பின்தொடரும் எண்ணத்தை கைவிடும் வரை இந்தியாவிலேயே இருந்தார்.
செங்கிஸ் கான் தனது நாடான மங்கோலியாவுக்குத் திரும்பிவிட்டார் என்பதை உறுதியாக அறிந்த பின்னரே, சிந்து நதியின் முகத்துவாரத்திலிருந்து படகில் புறப்பட்ட ஜலால் அல்-தின் கடல் வழியாக இரானை அடைந்தார்.
செங்கிஸ் கானின் கடந்த கால வரலாற்றைக் கருத்தில் கொண்டால், அவர் ஜலால் அல்-தினைப் பின்தொடரும் யோசனையை கைவிட்டது மற்றும் இந்தியாவிற்குள் தனது படையை அனுப்பாமல் இருந்தது ஆச்சரியமானதாக இருந்தது.
‘உண்மையில், பாலா மற்றும் தோராபி தோக்ஷன் தலைமையில் இரண்டு படைப்பிரிவுகளை செங்கிஸ் கான் இந்தியாவிற்கு அனுப்பினார். அவர்கள் சிந்து நதியைக் கடந்து லாகூர் மற்றும் முல்தானைத் தாக்கினர், ஆனால் அவர்களால் முல்தானைக் கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் முன்னேற முடியாமல் போனதற்குக் காரணம் அங்குள்ள வெப்பம் மிகக் கடுமையாக இருந்தது. அது அவர்களுக்கு சிறிதும் பழக்கமில்லாதது’ என்று ஃபிராங்க் மெக்லீன் எழுதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
டெல்லி சுல்தான் இல்துமிஷ், ஜலால் அல்-தினுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்றாலும், ஜலால் அல்-தினைப் பின்தொடரவும் அவர் செங்கிஸ் கானை ஊக்குவிக்கவில்லை.
ஜான் மெக்லியோட் தனது ‘இந்திய வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார், “இல்துமிஷ், செங்கிஸ் கானை திட்டவட்டமாக மறுத்து கோபப்படுத்தவில்லை. இந்தியாவிற்குள் நுழைந்து ஜலால் அல்-தினைப் பின்தொடரக் கோரிய செங்கிஸ் கானின் வேண்டுகோளுக்கு அவர் ஆம் அல்லது இல்லை என எவ்வித பதிலையும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் இல்துமிஷ் தன்னுடன் சண்டையிட விரும்பவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். அவரும் இல்துமிஷுடன் சண்டையிடும் மனநிலையில் இல்லை.”
டாக்டர் விங்க் தனது ‘Slave Kings and the Islamic Conquest’ என்ற புத்தகத்தில், “இந்தியாவின் வெப்பம் செங்கிஸ் கானுக்கு தாங்க முடியாததாக இருந்தது. அதனால்தான் செங்கிஸ் கானின் தளபதிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வர முடிவு செய்தனர்.”
குதிரைகளுக்கு பற்றாக்குறை
செங்கிஸ்கான் எதிர்கொண்ட மற்றொரு பிரச்னை குதிரைகள் ஆகும். பலஆயிரம் குதிரைகளைக் கொண்ட மங்கோலிய ராணுவத்திற்கு 250 டன் தீவனமும் 250,000 கேலன் தண்ணீரும் தேவைப்பட்டது என்று இப்னு பதூதா குறிப்பிடுகிறார். சிந்து மற்றும் முல்தான் பகுதிகளில் தண்ணீர் கிடைத்தது, ஆனால் தீவனம் கிடைக்கவில்லை.
இரண்டாவதாக, அந்தப் பகுதியில் உயர்தரக் குதிரைகளுக்குப் பற்றாக்குறை இருந்ததால், கூடுதல் குதிரைகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை. மேலும், செங்கிஸ்கான் இவ்வளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியிருந்ததால், அதைக் கட்டுப்படுத்த அவரிடம் போதுமான வீரர்கள் இல்லை. பின்னர், வீரர்களின் உடல்நலம் குறித்த பிரச்சனையும் இருந்தது.
ஃபிராங்க் மெக்லீன் எழுதுகிறார், “செங்கிஸ்கானின் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் அந்தப் பிராந்தியத்தின் நோய்களுக்கு ஆளானார்கள். முன்னால் இருந்த இந்தியாவின் காடுகள் மற்றும் மலைகள் பற்றிய துல்லியமான தகவல்கள் செங்கிஸ்கானிடம் இல்லை. செங்கிஸ்கான் ஒரு மூடநம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவரது வீரர்கள் ஒரு காண்டாமிருகத்தைக் கண்டனர், அது மேலும் முன்னேறுவதற்கு ஒரு கெட்ட சகுனமாக கருதப்பட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில், செங்கிஸ்கான் தனது நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்.”
மரணப் படுக்கையில் செங்கிஸ் கான்
ஜூலை 1227 வாக்கில், செங்கிஸ்கானின் உடல்நிலை மோசமடைந்தது. தனது அனைத்து மகன்களையும் நம்பகமான தளபதிகளையும் வரவழைத்தார்.
அவரது படுக்கைக்கு அருகில் நின்றவர்களுக்கு அவர் இனி நீண்ட நேரம் உயிர்வாழ மாட்டார் என்பது புரிந்துவிட்டது. ஆனால் செங்கிஸ் கானுக்கு காய்ச்சல் இருப்பதாக மக்களிடம் கூறப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
தனது ‘The History of the Mongols’ என்ற புத்தகத்தில் ஆர்.டி. தாக்ஸ்டன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மரணப் படுக்கையில் இருந்த செங்கிஸ் கான் தனது மகன்களிடம், ‘வாழ்க்கை மிகவும் குறுகியது. என்னால் உலகம் முழுவதையும் வெல்ல முடியவில்லை. இந்தப் பணியை நீங்கள் முடிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய பேரரசை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். அதைப் பாதுகாக்க நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்குள்ளே நீங்கள் சண்டையிட்டால், இந்தப் பேரரசு உங்கள் கைகளில் இருந்து நழுவிவிடும்'” என்று சொன்னார்.
தலைமைப் பதவிக்காக தனது மூத்த சகோதரையே கொன்ற தெமூசின் எனும் செங்கிஸ்கானின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வந்த சிறிது நேரத்தில், அவரது உயிர் உடலைவிட்டு நழுவியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு