“எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும்போது சொல்லப்படும்” என கடந்த மார்ச் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியலில் கவனம் பெறக் காரணம், சில மாதங்களுக்கு முன்புவரை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள், ‘பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை’ என உறுதியாக கூறிவந்தனர்.
கடந்த ஆண்டு(2024) நவம்பரில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதேசமயம் பாஜக-வோடு கூட்டணி இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது.” என்றார்.
கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்.” என கூறியிருந்தார், பிறகு “தான் அதிமுகவை குறிப்பிட்டுப் பேசவில்லை” என விளக்கமும் அளித்தார்.
அதேநேரத்தில், அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடும் அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, அதிமுக- பாஜக குறித்து வெளியாகும் இத்தகைய கருத்துகளும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளும் ‘2026 தேர்தலுக்காக, அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா?’, ‘அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா’ போன்ற கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக- பாஜக கூட்டணியும் பிரிவும்
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நீடித்த இந்த கூட்டணியால் இரு தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு பாஜகவுக்கு மீண்டும் கிடைத்தது. அக்கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தனர்.
ஆனால், தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுக்குப் பின், இந்த மோதல் தீவிரம் அடைந்தது.
2023, ஜூன் மாதம், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவர் கூறிய கருத்து, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு எதிராக மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அதிமுக மீதும் அக்கட்சியின் தலைவர்கள் மீதும் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதன் காரணமாக, ‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, அக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வதாக,’ 2023 செப்டம்பரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பிறகு, 2024 பிப்ரவரியில் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்துக் கேட்டபோது, “கூட்டணிக்கான எல்லா கதவுகளும் திறந்தே இருக்கின்றன. இது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்று பதிலளித்திருந்தார்.
ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக இருந்தது அதிமுக.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தலைமையில், தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. தேர்தல் முடிவில் ஒரு தொகுதியில்கூட இவ்விரு அணிகளால் வெற்றி பெற முடியவில்லை.
12 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்திருந்தது. சில தொகுதிகளில், திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளின் வேட்பாளர்கள் கூட்டாக பெற்றிருந்த வாக்குகள் அதிகமாக இருந்தன.
உதாரணமாக, தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம்.
‘திமுக தான் ஒரே எதிரி’
பட மூலாதாரம், @Babumurugavel
“எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்.” என்ற எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு குறித்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக செய்தித்தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் கேட்டோம்.
“திமுக தான் எங்கள் எதிரி என்ற கருத்தை நாங்கள் பல வருடங்களாகவே கூறி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி கூறியது போலவே, 2026 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு ஒரு வெற்றிக் கூட்டணி அமைக்கப்படும். திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எங்களுடன் சேரலாம்.” என்று கூறினார்.
ஆனால், எந்தக் கட்சி சேர்ந்தாலும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்று உறுதியாகக் கூறும் பாபு முருகவேல், “பாஜக குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. ஆனால், போட்டி எப்போதும் போல, அதிமுக Vs திமுக தான். அதில் எந்தவித சந்தேகமுமில்லை” என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க, அதிமுக அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா எனக் கேட்டபோது, “அதிமுக-வுக்கு அழுத்தம் கொடுக்குமளவுக்கு இங்கு எந்தக் கட்சியும் இல்லை, கொடுக்கவும் முடியாது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தலைமையின் முடிவு இருக்குமே தவிர்த்து, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் எங்களது கட்சியை வளைக்க முடியாது” என்று கூறினார்.
பட மூலாதாரம், Facebook/SRSekar
இதுகுறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, “பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுகவும், அதன் ஆதரவு ஊடகங்களும் தெளிவாக உள்ளன. அதனால், இரு கட்சிகளின்ன் தலைவர்களும் பேசுவதை பலவாறாக திரித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதையெல்லாம் கடந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒரு ‘மெகா கூட்டணியை’ பாரதிய ஜனதா கட்சி அமைக்கும். அதில் அதிமுக இருக்குமா என இப்போதே சொல்ல முடியாது. ஆனால், திமுகவை எதிரியாகக் கருதும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் இணையலாம்.” என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சிகள் திமுகவுக்கு எதிராக ஓரணியில் சேரும் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், “அதற்கான பணிகளை பாஜக முன்னெடுக்கும். அந்தக் கூட்டணியை பாஜக ஒன்றிணைக்கும்” என்கிறார்.
செங்கோட்டையன் தனி ஆவர்த்தனம்
கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் சந்தித்தார்.
அவைத் தலைவரை தனியே சந்தித்தது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது சாதாரணமானது. இன்று கூட ஏழு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் அங்கு வருகை தந்தார். அவரிடம் அந்த கடிதம் கொடுக்கப்பட்டது” என்று பதிலளித்தார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பழனிசாமி, “அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்.” என்றார்.
அண்மைக்காலமாக செங்கோட்டையனின் செயல்பாடு அதிமுகவில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
‘அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அழுத்தம்’
இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் பிரியன், “பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற அழுத்தம் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்பது உண்மை. ஆனால், அதைத் தாண்டி தேர்தல் கணக்கு என்று பார்க்கையில் அதிமுக-பாஜக கூட்டணி அமைவதே இரு கட்சிகளுக்கும் சாதகமாக இருக்கும்” என்கிறார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும், தனித்தனியாக பெற்ற வாக்குகளை சுட்டிக்காட்டும் பிரியன், “திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள் மக்களவைத் தேர்தலில் பார்த்துவிட்டார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தின் தோல்வி, இதை உணர்த்தியிருக்கும். எனவே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
செங்கோட்டையன் உள்பட அதிமுகவின் பெரும்பாலான முக்கிய தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். அவர்களும் அழுத்தம் கொடுக்கிறார்கள், அதனால் தான் ‘திமுக மட்டுமே எதிரி’ என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.” என்கிறார்.
நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஒருபுறம், சீமானின் ‘நாம் தமிழர்’ ஒருபுறம் என இருப்பதால், இவற்றைத் தவிர்த்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்த்துக்கொண்டு அதிமுக- பாஜக 2026 தேர்தல் கூட்டணி அமையலாம் என்று பிரியன் கூறுகிறார்.
“ஒருவேளை 2026இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் கூட, மத்தியில் பாஜக 2029 வரை ஆட்சியில் இருக்கும் என்பதால் அவர்களை அதிமுக பகைத்துக் கொள்ள விரும்பாது. எனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு