திருநெல்வேலி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு பதில் அளித்துள்ளார்.
திருநெல்வேலியில் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் மக்களை கசக்கி பிழிந்தது. தற்போது வரியை குறைத்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது. இந்த வரி குறைப்பால் மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ நன்மை இருப்பதாக தெரியவில்லை.
தற்போது மத்திய அரசுக்கு 50 சதவீதமும், மாநில அரசுக்கு 50 சதவீதமும் வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதை மாற்றி மாநிலங்களுக்கு 75 சதவீதமும், மத்திய அரசுக்கு 25 சதவீதமும் வரி வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
நீட் தேர்வைப் போலவே ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வையும் கொண்டு வந்துள்ளனர். இது தேவையற்றது. இந்த தேர்வு முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு என்று கூறுகிறார்கள். ஆனால், அதிக எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. ஏற்கெனவே பி.எட். படிப்பு, ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்தவர்களுக்கு மீண்தும் ஒரு தேர்வு வைப்பது அவசியமற்றது. கல்வி மாநில பட்டியலில் இருந்தால் இதுபோன்ற குளறுபடிகள் இருக்காது. என்று அப்பாவு தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, இது குறித்து கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அப்பாவு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி கூட்டணி உடைந்து வருவது குறித்த கேள்விக்கு, “உடைந்தது பற்றியும், உடைத்தவர்கள் பற்றியும் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் எங்களது அரசு கொள்கைப் பிடிப்புடன் செயல்படும் அரசு” என்று அப்பாவு அளித்தார்.