பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க கடந்த செப்டெம்பர் 5ம் தேதியன்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுநாளே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, செங்கோட்டையன் தரப்பில் பதில் நடவடிக்கை பற்றி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அவருடைய எதிர்ப்பும், நீக்கமும் கொங்கு மண்டலத்திலும் தமிழக அளவிலும் அதிமுகவுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமென்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கோட்டையனால் பெரியளவில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், அவர் எழுப்பும் கேள்வி நிச்சயமாக கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம்.
செங்கோட்டையனின் கருத்து, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு மட்டுமின்றி, கூட்டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பாஜக மாநில நிர்வாகி நாகராஜ். ஆனால் கட்சியில் பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது என்றும், செங்கோட்டையனால் ஈரோடு மாவட்டத்தில் கூட எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்றும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.
செங்கோட்டையனின் அடுத்த நடவடிக்கை என்ன?
பட மூலாதாரம், MGR FAN CLUB
அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இயங்கி வருபவராக அறியப்படுகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட வேறு சிலரையும் அவர்களுடைய கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் இப்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால் செங்கோட்டையனின் கருத்துக்கு அதிமுக முன்னாள் நிர்வாகிகளான ஓபிஎஸ், சசிகலா மற்றும் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலரும் ஆதரவாகக் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அதேநேரத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக ஆதரவோ, கருத்தோ தெரிவிக்கவில்லை.
இதனால் செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கும், அவரால் வரும் தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழத்துவங்கியுள்ளன. ஊடகங்களிலும் இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் கருத்தைப் பகிர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம், ”எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கியபோது, கட்சி நிர்வாகிகள் அனைவரும் கருணாநிதியின் பின்னால்தான் இருந்தார்கள். அதன்பின் எம்ஜிஆர் ஊர் ஊராகச் சென்று நியாயம் கேட்டார். அதன்பின் அந்தத் தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல இப்போது செங்கோட்டையன் சுற்றுப்பயணம் செய்து, ‘கட்சி ஒன்றாயிருக்க வேண்டும் என்று நான் கேட்டது தவறா’ என்று கேள்வி எழுப்புவார்.” என்கிறார்.
”கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமென்று செங்கோட்டையனும், மற்றவர்களும் ஒன்று சேர்ந்து தன்னிடம் கேட்டபோதே அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். அப்போதிலிருந்தே செங்கோட்டையன் ஓரம்கட்டப்பட்டுவிட்டார். அவருக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது. அந்த நிலையில்தான், கட்சி தோற்றுவிடுமென்று நினைத்து, இந்த கெடுவை விதித்தார். ஒரு மாவட்டச் செயலாளர் கட்சித்தலைமைக்கு கெடு விதிப்பது சட்டப்பூர்வமாக தவறாக இருக்கலாம். ஆனால் அவர் எழுப்பிய கோரிக்கையின் நியாயத்தை தொண்டர்கள் யோசிப்பார்கள்.” என்கிறார் அவர்.
செங்கோட்டையனின் கருத்து ‘சைலண்ட் பாம்’
பட மூலாதாரம், Getty Images
செங்கோட்டையனால் எப்போதும் ஓர் உந்து சக்தியாக மாற முடியாவிட்டாலும், கட்சியில் இப்போதுள்ள தலைவர்கள் அனைவரையும் விட சீனியர் என்ற முறையில், அவருக்கான கனம் அதிகம் என்கிறார் ஷ்யாம். அதன் அடிப்படையில்தான் அவர் எழுப்பும் கேள்வியும் பார்க்கப்படும் என்கிறார் அவர். தேர்தலில் இதை திமுக நிச்சயமாக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் என்பது ஷ்யாமின் கணிப்பாகவுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலேயே செங்கோட்டையனுக்கு ஆதரவாக பெரிய நிர்வாகிகள் யாரும் கட்சித்தலைமைக்கு எதிராகக் குரல் கொடுக்காவிட்டாலும், அவர் எழுப்பிய கேள்வி, கட்சியின் கீழ்மட்டத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துமென்று ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பத்திரிகையாளர் துரை கருணா, ”அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்தான். கோடிக்கும் அதிகமான தொண்டர்கள்தான் அக்கட்சியின் உயிர்நாடி. அவர்களுடைய எண்ணமும் கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதுதான். அவர்களின் மனநிலையை அறிந்தவர்கள், நகர, ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள்தான். அவர்களுக்கு செங்கோட்டையன் கேட்டது நியாயமென்று தெரியும்.” என்கிறார்.
”அதிமுக தொண்டன் வெளியில் பேசமாட்டான். ஆனால் செயலில் காட்டிவிடுவான். செங்கோட்டையனின் கருத்து ஒரு சைலண்ட் பாம். அது தேர்தல் நேரத்தில்தான் வெடிக்கும். இப்போதே 320க்கும் அதிகமான நகர, ஒன்றிய கிளைக்கழக நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையனிடம் கொடுத்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.” என்றும் துரை கருணா மேலும் தெரிவித்தார்.
அவர் கூறும் இந்தத் தகவலை, பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இந்த கருத்தை மறுத்தார், செங்கோட்டையனுக்குப் பதிலாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”என்னை அந்தப் பொறுப்புக்கு தற்காலிகமாக நியமித்ததாக அறிந்ததும், அங்கே இருக்கின்ற நிர்வாகிகள் அனைவரும் மேட்டுப்பாளையத்துக்கு என்னைத் தேடி வந்து, தங்களின் ஆதரவை கட்சித் தலைமைக்குத் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் எப்போதுமே கட்டுப்படுவார்கள்.” என்றார்.
தேர்தலுக்கு முன்பு இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் வருமா?
பட மூலாதாரம், Getty Images
எடப்பாடி பழனிசாமி தனக்கிருந்த அதிகார பலம் மற்றும் பணபலத்தால் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகக் கூறும் துரை கருணா, அவருடைய தற்போதைய நடவடிக்கைகளால் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, இரட்டை இலைச்சின்னத்தை முடக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார். அதற்கான வாய்ப்பைப் பற்றியும் அவர் விளக்கினார்.
”வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு, எல்லோரிடமும் உள்ளது. அந்த நிலையில் அதிமுக பலப்பட வேண்டுமென்பது தொண்டர்களின் எண்ணமாகவுள்ளது. அதைப் பிரதிபலிக்கும் வகையில், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் இணைந்து ஒரு பொதுக்குழுவைக் கூட்டி, அமமுகவையும் இணைத்து, இதுவே ஒன்று பட்ட அதிமுக என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. அது கட்சியின் சின்னத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.” என்கிறார் துரை கருணா.
பிபிசி தமிழிடம் பேசிய பெயர் கூற விரும்பாத அதிமுக முன்னாள் மாநில நிர்வாகி ஒருவர், ”சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, அதிமுக ஒருங்கிணைப்பு மாநாட்டை மதுரை அல்லது தேனியில் மிக பிரமாண்டமாகக் கூட்டவும், அதில் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அது நடக்கும்பட்சத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில், தென் மாவட்டங்களில் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.” என்றார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், 40 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளால்தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம், அதற்கு அமமுக பிரித்த சொற்ப வாக்குகள் மிக முக்கியக் காரணம் என்கிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலில், வெற்றி, தோல்விக்கான வித்தியாசம் நுாலிழையில்தான் இருக்கும் என்கிறார் அவர்.
அதிமுகவிற்கு கிடைத்திருக்க வேண்டிய முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்குகள், அமமுகவிற்குச் சென்றதே, தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்ததற்குக் காரணம் என்பது இவர் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்களின் கருத்தாகவுள்ளது.
இந்த முறை, சசிகலா, ஓபிஎஸ் என அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் ஓரம்கட்டப்பட்டுள்ளதால், வரும் தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு வரவேண்டிய முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் மேலும் குறையும் என்பதையே செங்கோட்டையன் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதாகச் சொல்கின்றனர் இவர்கள்.
”செங்கோட்டையனால் எப்போதுமே பெரும் உந்து சக்தியாக மாறமுடியாது. ஆனால் அவருடைய எதிர்ப்பால், அதிமுகவுக்கு இப்போதுள்ள வாக்கு வங்கி குறையவே வாய்ப்புள்ளது. திமுக கூட்டணி மிக வலுவாகவுள்ள நிலையில், இன்றைய நிலையில் அதிமுக–பாஜ கூட்டணிக்குக் கணிக்கப்படும் 30 சதவீத வாக்குகளும் மேலும் குறையவே வாய்ப்பு அதிகம்.” என்கிறார் ஷ்யாம்.
சித்தாந்தரீதியாக திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறும் தமிழக பாஜ விவசாய அணி மாநிலச்செயலாளர் ஜி.கே.நாகராஜ், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக ஒன்றுபட வேண்டியது மிக முக்கியம் என்று வலியுறுத்துகிறார். அதனால்தான் தினகரன், ஓபிஎஸ் என எல்லோரையும் ஒருங்கிணைக்க அண்ணாமலையும் தற்போதுள்ள தலைவர் நயினார் நாகேந்திரனும் முயற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் செங்கோட்டையன் இந்த முயற்சியை கடந்த நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பே எடுக்காமல், இப்போது எடுப்பதுதுதான் பல கேள்விகளை எழுப்புவதாகச் சொல்கிறார் நாகராஜ்.
”செங்கோட்டையன் இப்போது எடுக்கும் முயற்சிக்குப் பின் யாரும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் கட்சி ஒன்று பட வேண்டுமென்ற விஷயத்தை ஓபிஎஸ், செங்கோட்டையன் என யார் எடுத்தாலும் அது நல்ல விஷயம்தான். திமுகவுக்கு சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் ஆதரவு, கூட்டணி பலம் என்று பல விஷயங்கள் சாதகமாக இருக்கும்நிலையில், திமுகவை வீழ்த்துவதற்கு ஒற்றுமை அவசியமாகிறது. அதை மறுத்தால் திமுக அதை ஆயுதமாக மாற்றிக்கொள்ளும் என்பது நிச்சயம்.” என்கிறார் நாகராஜ்.
பட மூலாதாரம், Getty Images
”முக்குலத்தோர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!”
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தில் கட்சியிலிருந்து யாரும் விலகவோ, எதிர்ப்புக்குரல் கொடுக்கவோ முன்வராவிட்டாலும், தென்மாவட்டங்களில் கட்சியின் நிலை குறித்து அவர் எழுப்பிய கேள்வி, அப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் துரை கருணா. இப்போதே பல பகுதிகளில் எதிர்ப்புகள் வலுத்து வருவதாகத் தெரிவிக்கிறார் அவர்.
இதே கருத்தைப் பிரதிபலிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம், ”அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் அனைவருமே ஒற்றுமையை விரும்புகிறார்கள். ஆனால் மேல்மட்டத் தலைவர்கள் தங்கள் பதவிகள் பற்றி கவலைப்படுகிறார்கள். அதனால் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எத்தகைய கேள்வி எழுப்பினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக முக்குலத்தோர் மத்தியில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். யாருக்கு அது லாபமாக முடியும் என்பதே கேள்வி.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
செங்கோட்டையன் எழுப்பிய கேள்விகள், அவர் மீதான நடவடிக்கை, அவருடைய அடுத்தகட்ட நகர்வுகளால் கொங்கு மண்டலத்திலும், தமிழகம் தழுவிய அளவிலும் கட்சியிலும் தேர்தலிலும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து, அதிமுக முக்கியத் தலைவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்க முன்வரவில்லை. கட்சி ஒற்றுமையையே விரும்புவதாகக் கூறினாலும், பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது என்று அதிமுக மூத்த தலைவரும், பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”கணிப்புகளுக்கு எல்லாம் பதில் கூற இயலாது. ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை பொதுச்செயலாளரின் முடிவே இறுதியானது. அதை யாராலும் மாற்ற இயலாது. இந்த விவகாரத்தில் வேறு எந்தத் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.” என்றார்.
செங்கோட்டையனின் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், ”செங்கோட்டையனுக்கு அவருடைய மாவட்டத்திலேயே ஆதரவு இல்லை. அவர் மீதான நடவடிக்கைக்குப் பின் அங்குள்ள நிர்வாகிகள் கட்சித்தலைமைக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இங்கேயே அவருக்கு ஆதரவு இல்லை எனும்போது, தென் மாவட்டங்களில் அவரால் எந்த விதத் தாக்கமும் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை. அவரால் எந்த பாதிப்புமேயில்லை.” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு