அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்.
அவர் அதற்கு முன்னதாகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது தொடர்பாக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஒரு செய்தியாளர் சந்திப்பையும் அவர் நடத்தினார். அதைத் தொடர்ந்து அவரது கட்சிப் பொறுப்புகள் முதலில் பறிக்கப்பட்டன. அதற்குப் பிறகு அக்டோபர் மாத இறுதியில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அ.தி.மு.க-வில் இருந்தே அவர் நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில்தான் அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதை இரு தரப்பும் உறுதி செய்யாமலேயே இருந்தன. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியபோது அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.
மேலும், “எனது 50 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில், ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்துள்ளேன். அப்படிப்பட்ட என்னை கட்சியின் உறுப்பினராகக்கூட இருக்கக்கூடாது என்று முடிவு செய்து, நீக்கம் செய்து பரிசு கொடுத்துள்ளனர். இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மேல் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்றும் கூறியிருந்தார்.
புதன்கிழமையன்று காலையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் எம். அப்பாவுவை சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை கே.ஏ. செங்கோட்டையன் அளித்தார். அந்த நேரத்தில் அந்த அறைக்கு அமைச்சர் சேகர் பாபுவும் வந்ததால், செங்கோட்டையனை தி.மு.க. தரப்பு தங்கள் பக்கம் அழைப்பதாக ஊடகங்களில் யூகங்கள் வெளிப்பட்டன.
பிற்பகலில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வீட்டிற்குச் சென்றார். சுமார் 2 மணிநேரம் அங்கு நடந்த சந்திப்புக்குப் பிறகு செங்கோட்டையன் அங்கிருந்து புறப்பட்டார்.
விஜய் – செங்கோட்டையன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. “தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் வியாழக்கிழமையன்று இணையலாம் என செய்திகள் அடிபட்டு வருகின்றன. இப்போது அவருக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு இதுதான்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
“நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் செங்கோட்டையன். பா.ஜ.கவின் தூண்டுதலின் பேரில்தான் இதைச் செய்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. பிறகு, கெடு விதித்தார். ஆனால், அ.தி.மு.கவை விட்டே நீக்கப்பட்டார்.
இப்போது விஜய் ஒரு சக்தியாக உருவாகி வருவதால் அந்தக் கட்சியில் இணைய விரும்புகிறார் செங்கோட்டையன். அந்தக் கட்சியில் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாததால், அவருக்கு இரண்டாம் இடம்கூட கிடைக்கலாம். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை அவரே நடத்தலாம். ஆகவே, அக்கட்சியில் அவர் சேரலாம்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Facebook/Edappadi Palanisamy/KA Sengottaiyan
செங்கோட்டையன் விவகாரம் தொடங்கியது எங்கே?
நீண்ட காலமாக அ.தி.மு.க-விலும் அ.தி.மு.க. அரசுகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.ஏ. செங்கோட்டையன், 2012ஆம் ஆண்டில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது சில புகார்களின் காரணமாக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார்.
அதற்குப் பிறகு கட்சியிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவு வரை அவர் அ.தி.மு.கவில் ஓரங்கட்டப்பட்டவராகவே இருந்தார். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2017: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் நடந்தபோது முதலமைச்சராகும் வாய்ப்பு செங்கோட்டையனுக்கு கிடைத்ததாகவும் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
2021: கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பட மூலாதாரம், Facebook/KA Sengottaitan
2024 ஜூலை: நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் என அ.தி.மு.க-வின் ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டுமென கட்சித் தலைமையை இந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், அதை எடப்பாடி கே. பழனிச்சாமி ஏற்காத நிலையில், தனது அதிருப்தியை அவ்வப்போது கே.ஏ. செங்கோட்டையன் வெளிப்படுத்தி வந்தார்.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல், கட்சியின் பொதுச்செயலாளர் என்று மட்டுமே செங்கோட்டையன் கூறி வந்தார்.
அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பினரும் விவசாயிகளும் இணைந்து எடப்பாடி கே. பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லை என்று அதற்குக் காரணம் கூறினார்.
மார்ச் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போது எடப்பாடி கே. பழனிசாமியின் அறையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
5 செப்டம்பர் 2025: செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றார். இதற்காக பத்து நாட்கள் காலக்கெடுவையும் விதித்தார்.
6 செப்டம்பர் 2025: கே.ஏ. செங்கோட்டையனிடம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளைப் பறித்தார் எடப்பாடி கே. பழனிசாமி.
30 அக்டோபர் 2025: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.
31 அக்டோபர் 2025: “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்” கே.ஏ. செங்கோட்டையன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
26 நவம்பர் 2025: தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ. செங்கோட்டையன். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்துப் பேசினார்.
அ.தி.மு.கவில் நீண்ட காலம் செயல்பட்ட செங்கோட்டையன்
பட மூலாதாரம், Facebook/KA Sengottaiyan
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கும் குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை துவங்கியதில் இருந்து அக்கட்சியில் இருந்து வந்தார்.
கடந்த 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980ஆம் ஆண்டில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு அவர் தொடர்ந்து கோபிச்செட்டிபாளையம் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஜெ. ஜெயலலிதா அணி, ஜானகி அணி எனப் பிரிந்தபோது ஜெயலலிதா அணியின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். 1991இல் ஜெயலலிதா முதலமைச்சரானபோது, செங்கோட்டையன் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறகு வனத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெ. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானபோது விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பிறகு, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் அதன் பிறகு வருவாய்த் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார் அவர்.
கடந்த 2012ஆம் ஆண்டில் சில புகார்களின் காரணமாக கட்சியிலும் ஆட்சியிலும் அவரது பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இருந்தாலும் 2016ஆம் ஆண்டில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமியின் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரானார் செங்கோட்டையன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிகைக்கு உரியவராக இருந்த காலகட்டத்தில், அவரது பெரும்பாலான தேர்தல் பிரசாரங்களை செங்கோட்டையன்தான் திட்டமிட்டார்.