படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி ( கோப்புப் படம்)கட்டுரை தகவல்
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வாழ்த்துவதற்காக அவர் டெல்லி செல்வதாக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்தாலும், அவர் செல்லும் நேரம், கட்சிக்குள் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள், இது அரசியல் பயணமாகத்தான் இருக்கும் என உறுதியிட்டு கூறுவதாக, அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்க சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவில் நடக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவில் என்ன நடக்கிறது?
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் செப். 5 அன்று தெரிவித்திருந்தார். அதற்காக, 10 நாள் காலக்கெடுவையும் அவர் விதித்திருந்தார். அதற்கு மறுநாளே கட்சியில் செங்கோட்டையன் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஆனால், செங்கோட்டையனின் இந்த கருத்தை அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றிருந்தனர். ‘செங்கோட்டையனை சந்திப்பேன்’ என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
“தொண்டர்களை தாண்டி மக்கள் நினைக்கும் கோரிக்கையை வலியுறுத்திய செங்கொட்டையனை நீக்கியது அவருக்கு கேடு அல்ல, அதை செய்தவர்களுக்கே கேடு” என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
படக்குறிப்பு, செங்கோட்டையன் ( கோப்புப் படம்)
இதையடுத்து, ஹரித்வார் பயணத்தின் ஒரு பகுதியாக, டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். “தமிழக அரசியல் சூழல் குறித்து அமித் ஷாவிடம் விவாதித்ததாக” பின்னர் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறினார்.
செங்கோட்டையன் விதித்த காலக்கெடு திங்கட்கிழமையுடன் (செப் 15) முடிவடைந்த நிலையில் தான் இன்று எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லி பயணம் எதற்காக?
இதுகுறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “குடியரசு துணைத் தலைவரை சந்திக்கத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார் என அதிமுக தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அமித் ஷாவை சந்திக்கவும் அவருக்கு அழைப்பு இருக்கலாம் அல்லது திட்டமிடாமல் கூட அவரை சந்திக்கலாம்.” என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையனையே அமித் ஷா சந்தித்த நிலையில், தங்கள் கூட்டணியின் முதன்மை கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அமித் ஷா சந்திக்கவே அதிகம் வாய்ப்புள்ளது என்று குபேந்திரன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அரசியலில் நிரந்தர எதிரி என யாரும் இல்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார் ( கோப்புப் படம்)
ஆனால், செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த போதே இதுகுறித்து அதிமுக தலைமை பாஜகவிடம் எச்சரித்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார், மற்றொரு மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.
“தங்கள் கட்சி தலைமைக்கு கெடு விதித்த செங்கோட்டையனை கூட்டணி கட்சியான பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா சந்தித்து பேசுகிறார். கட்சியிலிருந்து பிரிந்து வந்த ஒருவரை சந்தித்து பேசுவது தவறு என அதிமுக தலைமை பாஜகவிடம் கூறியிருக்க வேண்டும்.” என்கிறார் சாவித்திரி கண்ணன்.
இதனிடையேதான், திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தான் பேசுவதாக கூறியிருந்தார்.
“நயினார் நாகேந்திரனிடம் நான் பேசினேன், அவரும் பேசினார். சந்திப்பதாக கூறியிருக்கிறார். இருவரது நேரமும் ஒத்துவந்தால் சந்திப்போம்.” என அவர் கூறினார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பாஜக தலைமையை சந்திப்பது, தமிழ்நாடு பாஜக தலைவரிடம் பேசுவதும், “அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு அதிகரித்திருப்பதை காட்டுவதாக” சாவித்திரி கண்ணன் நம்புகிறார்.
அதிமுக, பாஜக கூறுவது என்ன?
என்றாலும் இதை தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மறுக்கிறார்.
“எந்தவொரு கூட்டணியாக இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவது இயல்புதானே, அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. எங்கள் கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.” என அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்து பேசிய அவர், “ஒருவரை பார்ப்பதாலேயே யூகங்களுடன் பேசக்கூடாது. ஒருவரை பார்த்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.” என்றார்.
பாஜக என்றைக்குமே மற்ற கட்சிகளின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் அதற்கான அவசியமில்லை என்றும் நாராயண் திருப்பதி தெரிவித்தார்.
பட மூலாதாரம், EPSTamilNad/X
படக்குறிப்பு, டெல்லி பயணத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர் ( கோப்புப் படம்)
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்தும் அதிமுகவில் பாஜகவின் தலையீடு இருக்கிறதா என்பது குறித்தும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனிடம் கேட்டதற்கு, “எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி செல்கிறார் என்பது இன்று தெரியவரும். செங்கோட்டையன் விவகாரத்தால் அதிமுகவுக்கு அழுத்தம் என்பதெல்லாம் மற்றவர்கள் கூறுகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் வேலையை மட்டுமே பார்க்கிறார்.” என்றார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை என்றும் அவர் கூறினார்.
பிரிந்து சென்ற தலைவர்கள் சந்திப்பார்களா?
தான் விதித்த 10 நாள் கெடு முடிவடைந்த நிலையில் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுக இன்னும் நூறாண்டு ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற நோக்கில் தான் அன்றைக்கு நான் மனம் திறந்து பேசினேன். இந்த கருத்துக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகளிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் நோக்கம் இயக்கம் (அதிமுக) ஒன்றுபட வேண்டும், அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான். தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துகளை மனதில் கொண்டு, புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். 2026ல் அதிமுக வெற்றி பெற அனைவரும் உறுதுணையாக இருந்து பணியாற்ற வேண்டும்” என கூறினார்.
‘மறப்போம், மன்னிப்போம்’ என அண்ணா கூறியது போன்று அவரது வழியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என செங்கோட்டையன் கூறினார்.
ஆனால், செங்கோட்டையன் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு சாத்தியம் இல்லை என்றே தோன்றுவதாக கூறுகிறார் குபேந்திரன்.
“ஒருவேளை டெல்லி பயணத்தில் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்தாலும், அதன் பின், செங்கோட்டையனுடன் அவர் சமாதானமாக செல்வதற்கு வாய்ப்பிருக்காது. ஏனெனில், கலகக்குரல் எழுப்பும் செங்கோட்டையனைவிட அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்குதான் முக்கியத்துவம் இருக்கிறது. எனவே, பழனிசாமி என்ன கோரிக்கை வைக்கிறாரோ, அதற்கு தான் அமித் ஷா செவி சாய்ப்பார்.” என்றார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
பட மூலாதாரம், TTV Dhinakaran
படக்குறிப்பு, இபிஎஸ் டெல்லி பயணம் குறித்து தினகரன் பதிலளிக்கவில்லை
ஒன்றுபட்ட அதிமுக சாத்தியமா?
அதேசமயம், சென்னையில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “செங்கோட்டையனிடம் நானும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன், அவரும் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.” என தெரிவித்தார்.
சசிகலா, செங்கோட்டையன், தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்த வாரம் சந்திக்கக் கூடும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என ஒற்றை வரியில் பதிலளித்தார்.
ஆனால், ஒன்றுபட்ட அதிமுக என்பது அக்கட்சிக்குள் இன்னும் பல குளறுபடிகளையே உருவாக்கும் என்கிறார் குபேந்திரன். “ஒன்றுபட்ட அதிமுக என்பது கட்சிக்கு நல்லதுதான், ஆனால் எல்லோரும் உள்ளே வந்தால் இன்னும் குளறுபடிகள் அதிகமாகும். கட்சியில் அனைவரும் ஒன்றிணைய, தனக்கு எந்த பலனும் வேண்டாம் என பன்னீர்செல்வம் சொல்கிறார். ஆனால், எதுவும் வேண்டாம் என்பதை அரசியலில் இதை யாராவது நம்புவார்களா?” என அவர் கேள்வியெழுப்புகிறார்.
பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எதுவும் நடக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள்.” என கூறினார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி உட்பட சட்ட விதிகள் எதுவும் மாறக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தை நாடியிருப்பதாக கூறிய அவர், அந்த சட்ட விதிகள் அப்படியே இருந்தால் எதுவும் சாத்தியம் என்றார்.
அதேபோன்று, தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் விவகாரம், எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து எந்த பதிலையும் அளிக்கவில்லை.
மாறாக, அமமுக பங்குபெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறிய டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் அதை அமமுக ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதையும் மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.
ஆனால், தேர்தல் நெருக்கத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணையவே அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.
“பாஜக கூட்டணியிலிருந்து தினகரன் நிரந்தரமாக வெளியேறுவார் என நான் நம்பவில்லை. அதேபோன்றுதான் ஓபிஎஸ்ஸும். ஏனெனில், தினகரன், ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு பல நெருக்கடிகள் உள்ளன. அதனால் தேர்தல் நெருக்கத்தில் இருவரும் கூட்டணியில் இணைவார்கள் என்றே கருதுகிறேன். எடப்பாடி பழனிசாமியும் அதை ஏற்றுக்கொள்ளலாம். தேர்தல் நேர பரபரப்பில் இது பெரிய விஷயமாக தெரியாது.” என்கிறார் அவர்.
எனினும், “செங்கோட்டையன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன அணுகுமுறையை கையாள போகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை” என்றே கூறுகிறார் சாவித்திரி கண்ணன்.