பட மூலாதாரம், Getty Images
2025 ஆகஸ்ட் 15 அன்று, டெல்லி செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கடுமையான நிலைப்பாடு, தற்சார்பின் முக்கியத்துவம், ஜிஎஸ்டியில் மாற்றங்கள், வேலைவாய்ப்புத் திட்டம் அறிவிப்பு என பல விஷயங்களை பற்றி பேசினார்.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளைப் பற்றி பிரதமர் நேரடியாக எதையும் குறிப்பிடவில்லை, மாறாக தற்சார்பு குறித்து வலியுறுத்தினார். அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இது பிரதமர் மோதியின் மறைமுக செய்தி ஆகும்.
மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களான அதிதி ஃபட்னிஸ் மற்றும் ஷரத் குப்தாவின் கூற்றுப்படி, பிரதமர் மோதியின் சுதந்திர தின உரை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பல வழிகளில் மாறுபட்டிருந்தது.
இந்த முறை, நீண்டகாலத் திட்டங்களுக்குப் பதிலாக, தற்போதைய சவால்கள் மற்றும் சூழ்நிலைகளில் பிரதமர் அதிக கவனம் செலுத்தினார் என்று அவர் நம்புகிறார்.
“கடந்த ஆண்டுகளில், பிரதமரின் உரைகள் 10 ஆண்டு திட்டம் அல்லது 5 ஆண்டு திட்டம் என நீண்டகால திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. ஆனால் இந்த முறை, இந்தியா எதிர்கொள்ளும் உடனடி சவால்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது” என்று அதிதி ஃபட்னிஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
அமெரிக்காவிற்கு மறைமுக பதில்; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பிரதமரின் உரையில் முக்கியமான விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
பாகிஸ்தானையும் சமீபத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர் மோதி, “இனிமேல் நாங்கள் மிரட்டலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆபரேஷன் சிந்தூரின் வீராதி வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நமது துணிச்சலான வீரர்கள், எதிரிகள் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத வகையில் தண்டித்துள்ளனர்” என்று கூறினார்.
அத்துடன், தற்சார்பை வலியுறுத்திய பிரதமர், “நாங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை கட்டாயத்திற்காக அல்ல, மாறாக வலிமையுடன் பயன்படுத்துவோம். தேவைப்பட்டால், மற்றவர்களை கட்டாயப்படுத்தவும் ‘சுதேசி’ஐ பயன்படுத்துவோம், இதுவே நமது பலமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
பட மூலாதாரம், PIB
எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோதி, “வேறொருவரின் கோட்டை சிறிதாக்குவதற்காக நமது சக்தியை வீணாக்க வேண்டியதில்லை. நமது கோட்டை முழு ஆற்றலுடன் நீட்டித்து பெரிதாக்குவோம். நாம், நமது கோட்டை நீட்டித்தால், உலகமும் நமது பலத்தை ஏற்றுக்கொள்ளும். இன்று, உலகளாவிய சூழ்நிலையில் பொருளாதார சுயசார்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நெருக்கடிகளைப் பார்த்து நாம் சோர்ந்துபோய் அழக்கூடாது என்பது காலத்தின் தேவை. நாம் தைரியத்துடன் நமது கோட்டை பெரிதாக்க வேண்டும்.”
பிரதமர் மோடியின் முழு உரை குறித்து பேசும் அதிதி ஃபட்னிஸ், “அவர் எந்த பெரிய அறிவிப்பையும் வெளியிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா என்ன செய்தாலும் அதன் தாக்கம் ஒவ்வொரு இந்தியரையும் பாதிக்கும். இது இன்னும் முழுமையாக உணரப்படவில்லை என்றாலும், இந்தியர்கள் எவரும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள். எனவே, பிரதமரின் முழு உரையும் இந்தப் பிரச்னையைச் சுற்றியே இருந்தது என்று நினைக்கிறேன். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வலுவாக பதிலளிக்க வேண்டும் என்பதே மறைமுக செய்தி. மேலும் நாம் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும் எஎன பிரதமர் சொல்கிறார்” என்று கூறுகிறார்.
சமீபத்தில் இந்தியா மீது 50 சதவீத வரியை அறிவித்துள்ள அமெரிக்கா, எதிர்காலத்தில் மேலும் வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
“பிரச்னை என்னவென்றால், நாம் இன்னும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமெரிக்காவிற்கு நமது தயாரிப்புகள் எவ்வளவு தேவையோ அவ்வளவு நமது சந்தையும் தேவை. அதனால்தான் வரி தொடர்பான விசயத்தில் இழுபறி தொடர்கிறது.” என்கிறார் ஷரத் குப்தா
பாதுகாப்புத் துறையில் உற்பத்தியை வலியுறுத்திய பிரதமர், “போர் விமானங்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜெட் என்ஜின்களை நாம் கொண்டிருக்க வேண்டும்… தற்சார்பு என்பது நமது வலிமையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதை, அமெரிக்காவின் வரிவிதிப்புக் கொள்கைக்கான பிரதிபலிப்பாக அதிதி ஃபட்னிஸ் பார்க்கிறார். ஆனால் இதனை, சீனாவிலிருந்து இறக்குமதியை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியைக் குறைப்பதன் சவாலுடனும் இந்த செய்தி இணைக்கப்பட்டுள்ளது என்று ஷரத் குப்தா நம்புகிறார்.
பட மூலாதாரம், DD News
ஆர்.எஸ்.எஸ் பற்றிய குறிப்பு, எதிர்க்கட்சிகள் மீதான மென்மையான நிலைப்பாடு
ஆர்.எஸ்.எஸ் குறித்து பேசிய பிரதமர் மோதி, “ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. தனிநபர் வளர்ச்சி மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற இந்த உறுதியுடன், தாய்நாட்டின் நலனுக்காக தன்னார்வலர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்” என்றார்.
அதிதி ஃபட்னிஸ் இதை, பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்புப் பகுதிகளில் ஒன்றாகக் கருதுகிறார். “பிரதமர் தனது ஆகஸ்ட் 15 உரையில் முதன்முறையாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் செங்கோட்டையில் இருந்து ஆர்எஸ்எஸ் பற்றிப் பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு அந்த அமைப்பை அவர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்” என்று அவர் கூறுகிறார்.
இதை முக்கியமான செய்தியாகக் கருதும் ஷரத் குப்தா, “செங்கோட்டையிலிருந்து ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரை உச்சரித்த பிரதமர் மோதி, அந்த அமைப்பிற்கு ஒரு செய்தியை அனுப்ப முயன்றார். எதுவாக இருந்தாலும், நாங்கள் உங்களுக்காக (ஆர்.எஸ்.எஸ்) இதைச் செய்கிறோம், எதிர்காலத்திலும் அதைத் தொடர்ந்து செய்வோம், ஆனால் குறைந்தபட்சம் எங்களுக்கு சுதந்திரம் கொடுங்கள், எங்கள் விருப்பப்படி அரசாங்கத்தை நடத்துவோம். தயவுசெய்து பின் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட வேண்டாம், உங்கள் மரியாதையை நாங்கள் எந்த வகையிலும் குறைக்க மாட்டோம் என்பதே அந்த செய்தி” என்று கூறுகிறார்.
இதைப் பற்றி விளக்கமாக பேசும் அவர், “பாஜக, பல மாதங்களாக தனது தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரவிருக்கிறது, வேட்பாளர் யார் என்பதுகூட முடிவு செய்யப்படவில்லை. பல முக்கியமான பதவிகள் காலியாக உள்ளன. அவை நிரப்பப்பட வேண்டும். அத்துடன், பல ஆளுநர்கள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது. அதாவது, ஆர்எஸ்எஸ் மற்றும் அரசாங்கத்தால் ஒருமித்த கருத்தை எட்ட முடியாத இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன.” என்கிறார்
பட மூலாதாரம், DD NEWS
எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் குறித்து பிரதமர் மோதி எடுத்த நிலைப்பாடு குறித்து பேசும் அதிதி ஃபட்னிஸ், “இந்த சுதந்திர தின உரையை, இதற்கு முந்தைய ஆண்டுகளின் உரையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முன்பு அவர் எதிர்க்கட்சிகளை அதிகம் குறிவைத்திருந்தார். இந்த முறை அவரது உரையில், இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது, நாம் அனைவரும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்ற ஒரு அரசியல்வாதி போன்ற தொனியில் இருந்தது. (மக்களவையில்) நாம் கொஞ்சம் பின்தங்கிவிட்டோம் என்பதை பாஜக இப்போது உணர்ந்துள்ளது என்பதையும், அதை சரிசெய்வது அவசியம் என்பதையும் இது காட்டுகிறது” என்றார்.
இதை தற்போதைய அரசியல் சமன்பாட்டுடன் இணைக்கும் ஷரத் குப்தா, “பிரதமர் தனது முந்தைய உரைகளில் இருந்ததைப் போல நம்பிக்கையுடன் இல்லாமல் இருக்கலாம். இந்த முறை மத்திய அரசாங்கம் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவில் இயங்குகிறது. இது அவரது நம்பிக்கையை எங்கோ பாதிக்கிறது. அதனால்தான் அவர் எதிர்க்கட்சியை வெளிப்படையாக குறிவைக்கவில்லை” என்று சொல்கிறார்.
‘தேர்தல் முறைகேடு புகார்’
“பிகார் தேர்தல் பற்றி அவர் குறிப்பிடவே இல்லை. முன்னதாக, தேர்தல்கள் நெருங்கி வந்தபோது, பேச்சில் அதற்கான அறிகுறிகள் இருந்தன. வரவிருக்கும் தேர்தல்களைப் பற்றி அவர் பலமுறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் இந்த முறை அவர் அவ்வாறு செய்யவில்லை” என்று அதிதி ஃபட்னிஸ் கூறுகிறார்.
“சில விஷயங்கள் சொல்லப்படவில்லை, ஆனால் கவனம் செலுத்தப்பட வேண்டும். உதாரணமாக, தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறியதற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை, தேர்தல் ஆணையம் முழுமையாக சமரசம் செய்து கொண்டது, அது அதன் கடமையை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அவர் எதிர்வினையாற்றவில்லை.” என்று அவர் மேலும் கூறினார்.
பட மூலாதாரம், DD News
பொருளாதார அறிவிப்பு
தீபாவளிக்கு “பெரிய பரிசு” வழங்குவதாகக் கூறி “அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி” சீர்திருத்தத்தை அறிவித்தார் பிரதமர்.
“அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம், இது இந்த தீபாவளிக்கான சிறப்பான பரிசாக இருக்கும், அத்தியாவசிய வரிகள் கணிசமாகக் குறைக்கப்படும், மேலும் வசதிகள் பெருமளவில் அதிகரிக்கும்” என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, ‘பிரதான் மந்திரி விகாஸ் பாரத் ரோஜ்கர் யோஜனா’ தொடங்கப்படும், இதில் முதல் வேலை பெறும் இளைஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்என அவர் கூறினார்.
அமெரிக்க வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் வெளியிட்ட பொருளாதார தன்னிறைவுக்கான செய்தியாக இதை அதிதி ஃபட்னிஸ் கருதுகிறார்.
மேலும், “தீபாவளிக்குள் மக்களுக்கு நிறைய பரிசுகள் கிடைக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். இதன் பொருள் இன்னும் தெரியவில்லை, ஆனால் வரும் சில வாரங்களில் இந்த திசையில் எதுபோன்ற பணிகள் செய்யப்படும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கூறுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு