• Wed. Oct 2nd, 2024

24×7 Live News

Apdin News

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வாதம்: புதிய மனு தாக்கல் செய்தால் பரிசீலனை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு | Argument for cancellation of bail of Senthil Balaji in Supreme Court

Byadmin

Oct 2, 2024


புதுடெல்லி: அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக வரும் அக்.22-ல் பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில்வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதன்காரணமாக அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், செந்தில் பாலாஜிமீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக.8-ம் தேதி உத்தரவிட்டது. ஓராண்டு கடந்த பிறகும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு ஏதுவாக எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக சிறப்பு நீதிபதியையும், சிறப்பு அரசு வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த ஆளுநர்ஒப்புதல் அளித்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஒய்.பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர், ‘‘அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார்.

போலீஸாரின் தந்திரம்: சென்னை மத்திய குற்றப்பிரிவுபோலீஸார் செந்தில் பாலாஜிக்குஎதிராக பதிவு செய்துள்ள மூன்றுமூல வழக்குகளின் விசாரணையையும் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த வழக்கில் புதிதாக சேர்த்து தமிழக அரசும், தமிழக போலீஸாரும் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிஜாமீனில் வெளியே வந்தவுடன்அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

மனுதாரர் தரப்பின் இந்த கோரிக்கையை தற்போது இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க முடியாது என்றும், புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் விசாரணையை அக்.22-க்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 மோசடி வழக்குகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 600-க்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதி முன்பாக தற்போது29 வழக்குகள் நிலுவையில் இருந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி சிறப்பு நீதிபதி: எனவே, செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை மட்டும் துரிதமாக பிரத்யேகமாக விசாரித்து முடிக்கும் வகையில் தனியாக சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.



By admin