• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

“செந்தில் பாலாஜி பொது வெளியில் காங்கிரஸை அவமதிக்கிறார்” – ஜோதிமணி எம்.பி கொதிப்பு | Senthil Balaji insults Congress party in public Jyothimani upset

Byadmin

Sep 24, 2025


சென்னை: “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அந்தப் புகைப்படத்தை, செந்தில் பாலாஜி தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், ‘தமிழ்நாடு தலைநிமிர, முதல்வர் ஸ்டாலின் தலைமை தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிரணி தலைவர் கவிதா இன்று தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்’ எனத் தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்தது.

செந்தில் பாலாஜியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் மொழி, இனம், பண்பாடு, எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.

பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது’ என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் ஜோதிமணி எம்.பி.



By admin