புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலை அறிக்கையை மே 2-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று பணமோசடியில் ஈடுபட்டதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை, சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், உதவிப் பொறியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைய நீண்டகாலம் பிடிக்கும் என்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி ஒய்.பாலாஜி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் அதிகமான நபர்கள் உள்ள வழக்கை மட்டும் தனியாக பிரித்து விசாரிக்கலாம். மற்ற வழக்குகளை ஒன்றாக இணைத்து தினசரி அடிப்படையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் விசாலமான பெரிய அறைகள் ஒதுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகளை விசாரிக்க ஏதுவாக சிறப்பு நீதிமன்றத்துக்கு காற்றோட்டமுள்ள விசாலமான பெரிய அறையை ஒதுக்க வேண்டும். வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாகப் பதியப்பட்டுள்ள இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் விரைவாக சம்மன் அனுப்பி விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும்.
சிறப்பு நீதிபதி இதற்காக ஒரு வார காலத்துக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வெவ்வேறு தேதிகளில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, மே 2-ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை மே 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.