சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகை கெடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக ரயில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, பல்லவன் சாலை ஆகியவற்றை இணைக்கும் சென்னை மத்திய சதுக்கம் பகுதியானது நாள்தோறும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடமாகும்.
இங்கு வரும் பயணிகளும், பொதுமக்களும் சாலைகளை கடப்பதற்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தையும், பூங்கா ரயில் நிலையத்தையும், சென்ட்ரல் மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாய் அருகே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பலரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கான நுழைவு வாயில் முன்பு, பக்கிங்காம் கால்வாயையொட்டி வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி எப்போதும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், அதன் அருகே குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இதனால் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பயன்படுத்த வரும் பயணிகளும், பொதுமக்களும் குப்பைத்தொட்டி வைத்திருக்கும் பகுதியில் இருந்து வரும் துர்நாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் முகத்தை சுளித்தவாறே கடந்து செல்கின்றனர். அதேபோல் நுழைவு வாயில் முன்பு பயணிகளுக்காக காத்து நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அதையொட்டி அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயின் கரைப்பகுதியில் தடுப்பு வேலி இல்லாததால் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள் தண்ணீரில் மிதக்கின்றன. இந்த குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்து காணப்படுவதும் வேதனைக்குரியது.
இதுகுறித்து பெரியமேடு பகுதியை சேர்ந்த ரயில் பயணி சரவணன் என்பவர் கூறுகையில், ” தினந்தோறும் வேலைக்காக மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறேன். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நுழை வாயில் அருகே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படாததால் அங்கேயே மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
நுழைவு வாயில் முன்பு 5 நிமிடம் கூட நிற்க முடிவதில்லை. சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் அடையாளங்களில் ஒன்று.அதேபோல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும் பிரபலமானது. இவற்றின் எதிரேயும், அருகேயும் அமைந்திருக்கும் பக்கிங்காம் கால்வாயை அசுத்தப்படுத்தும் வகையிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகை கெடுக்கும் வகையிலும் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை நுழைவு வாயில் முன்பு வைத்திருக்கும் குப்பைத்தொட்டியை முறையாக பராமரிக்கவும், அடிக்கடி குப்பைகளை அகற்றவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை போடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பக்கிங்காம் கால்வாயின் கரைப்பகுதிகளில் யாரும் குப்பைகள் போடாதவாறு தடுப்புவேலி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.