சென்னை: கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் இன்று (நவ.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
கனடா நாட்டில் கோயில்கள் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
இதற்காக அர்ஜூன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் குமரவேல், பாரதமாதா செந்தில் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் அங்கு வரத் தொடங்கினர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததாககூறி கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: “கனடா நாட்டில் இந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெரும் துன்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் அரசியலுக்காக, அங்கு வாழும் 7 லட்சம் சீக்கியர்களின் ஓட்டுகளுக்காக காலிஸ்தான் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுகிறார். இந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிவிட்டார். இது கண்டிக்கத்தக்கது. கனடாவில் வாழும் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,” என்றார்.