சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, இலங்கை உட்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸார் உடனடியாக சோதனை நடத்தி விசாரித்ததில் அவை அனைத்தும் புரளி என்று உறுதி செய்தனர். வெளிநாட்டில் இருந்து மிரட்டல் விடுக்கும் கும்பலை தனிப்படை அமைத்து சென்னை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர் வீடு, அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள், டிஜிபி அலுவலகம், பல்கலைக் கழகங்கள், நடிகர் கமல்ஹாசன், எஸ்.வி.சேகர், நடிகை த்ரிஷா உள்ளிட்டோரின் வீடு என பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, தாய்லாந்து, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் துணை தூதரகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் நேற்று மிரட்டல் வந்தது. இதையடுத்து, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
ஆனால், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதேபோல், சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வீட்டுக்கு நேற்று 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.