நீங்கள் குற்றங்கள் சார்ந்த த்ரில்லர் படங்கள் மற்றும் ஓடிடி தொடர்களின் ரசிகராக இருந்தால், ஒரு குற்றம் நடக்கும்போது, அந்த நிகழ்விடத்தில் ஒரு முடியோ அல்லது விரல் ரேகையோ அல்லது நகத்துகளோ அல்லது மொபைல் குறுஞ்செய்தியோ ஒரு முக்கிய தடயமாக மாறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அவை உண்மையை கண்டறிவதற்கான வழியாக மாறும்.
தடய அறிவியல் துறையில் உள்ளவர்கள், இந்த தடயங்களை சேகரித்து, அதன்மூலம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய உதவுகின்றனர். இந்த துறை தர்க்க ரீதியிலான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை பார்ப்போம். இந்த துறை யாருக்கெல்லாம் பொருத்தமாக இருக்கும், அதற்கு என்ன மாதிரியான தகுதிகள் தேவை?
தடய அறிவியல் துறையில் வேலைவாய்ப்புகள்
பட மூலாதாரம், Getty Images
தடயவியல் நிபுணர்கள் குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் கிடைக்கும் தடயங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்பவர்கள். அவர்கள் தரும் அறிக்கை, காவல்துறையினர், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள் அல்லது நீதிபதிகள் ஆகியோர் குற்ற சம்பவத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
தடயவியல் நிபுணர்கள் எங்கு வேலை பார்க்கலாம்?
மத்திய மற்றும் மாநில தடயவியல் ஆய்வகங்கள் (CFSL/FSL)
குற்றப் புலனாய்வுத் துறை (CID)
உளவுத்துறை (IB)
மத்திய புலனாய்வு பணியகம் (CBI)
காவல்துறை
தனியார் துப்பறியும் நிறுவனங்கள்
நீதிமன்ற ஆய்வகங்கள்
ஆய்வு நிறுவனங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் உள்ள பெரும் கல்வி நிறுவனங்களான தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU), தடயவியல் அறிவியல் நிறுவனம் (மும்பை), பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (BHU), ஒஸ்மானியா பல்கலைக்கழகம் (ஹைதராபாத்) ஆகியவற்றில் இதைப் படிக்க முடியும்.
NFSU-க்கு இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வளாகங்கள் உள்ளன. இதற்காக தனியே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களும் இந்த படிப்பை வழங்குகின்றன, அவற்றிலும் தனியே நுழைவுத்தேர்வுகள் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
என்னென்ன வகைகள் உள்ளன?
தடய அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு படிப்பாகும், இவையனைத்தும் குற்றங்களை விசாரித்தல் அல்லது நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தடயங்களை சேகரித்தல் ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.
இதற்கான வாய்ப்புகள் பரவலாக உள்ளன. தடயவியலில் எத்தனை வகைகள் உள்ளன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்:
தடய உயிரியல்: இதில், டிஎன்ஏ, ரத்தம், முடி போன்ற உயிரியல் ரீதியான தடயங்கள் ஆய்வு செய்யப்படும்.
தடய வேதியியல்: இதில், மருந்துகள் (drugs), வேதிபொருட்கள், வெடிபொருட்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படும்.
தடய நோயியல்: இதில் இறந்தவர்களின் சடலங்களை ஆய்வு செய்து, ஒருவர் இறந்த நேரம் மற்றும் காரணம் ஆகியவை கண்டறியப்படுகிறது.
தடய நச்சுயியல்: ஒருவரின் உடலில் நச்சுகள், விஷம், மருந்துகள் (drugs) ஆகியவை உள்ளதா என்பது ஆராயப்படுகிறது.
டிஜிட்டல் தடயவியல்: மின்னணு சாதனங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் ஆகியவற்றை இந்த நிபுணர்கள் ஆய்வு செய்கின்றனர்.
தடய மானுடவியல்: மனித எலும்புக்கூடு அல்லது எச்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் இறந்தவரின் அடையாளங்கள் மற்றும் இறந்த நேரம், காரணங்கள் கண்டறியப்படுகின்றன.
தடய பல் மருத்துவம்: பல் தொடர்பான தடயங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
தடயவியல் துறை யாருக்கெல்லாம் பொருத்தமாக இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
தடயவியல் துறை மாணவர்கள் தங்களின் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/கணிதம் ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்க வேண்டும். பெரும்பாலான கல்லூரிகளில் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்களின் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
இத்துடன், தடய அறிவியல் ஒரு மாணவருக்கு சிறந்ததா, இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும்.
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர் சிம்ரன் தாகூர். இவர் 2021ம் ஆண்டில் பி.எஸ்சி தடயவியல் துறையில் பட்டம் பெற்றார். தற்போது அதே துறையில் பிஹெச்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
12ம் வகுப்பில் உயிரியலை தேர்ந்தெடுத்து படித்தவர் சிம்ரன். அவர் மருத்துவம் பயில வேண்டும் என அவரின் குடும்பம் விரும்பியது. ஆனால், அவர் தடயவியலை தேர்ந்தெடுத்தார்.
தனக்கு இயற்பியல் மற்றும் வேதியியலும் பிடிக்கும் என சிம்ரன் கூறுகிறார். அனைத்துவித அறிவியலையும் படித்து, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே, தடயவியல் துறையை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் என்கிறார்.
இந்த துறையை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு என்ன திறன்கள் இருக்க வேண்டும் என அவரிடம் கேட்டோம்.
அவர் கூறுகையில், “முதலில், ஒன்றை உற்றுநோக்கும் திறனில் கவனம் செலுத்த வேண்டும். எங்காவது நீங்கள் நடந்து சென்று கொண்டிருந்தாலும், உங்கள் கண்கள், காதுகள் திறந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மூலையிலும் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு விஷயத்தை நீங்கள் எவ்வளவு உற்றுநோக்குகிறீர்கள் என்பதுதான் தடயவியலில் முக்கியமானது” என்றார்.
“இரண்டாவதாக, பொறுமையாக இருக்க வேண்டும். சில சமயங்களில் நாம் விரைந்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், ஆனால் தடயவியலில் அப்படி இருக்காது. நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஆழமான அறிவை பெற்றிருக்க வேண்டும். இறுதியாக, ஒரு பிரச்னையை தீர்க்கும் திறன்களை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.
வருங்காலத்தில் என்ன ஆவார்கள்?
பட மூலாதாரம், Getty Images
தடயவியல் விஞ்ஞானிகள் – ஆய்வகத்தில் தடயங்களை ஆய்வு செய்பவர்கள்
குற்ற சம்பவ விசாரணையாளர்கள் – குற்ற சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரிப்பவர்கள்
தடய நச்சுயியலாளர்கள் – ஒருவரின் உடலில் மருந்துகள்/நஞ்சுகள் இருந்ததா என்பதை கண்டுபிடிப்பது
தடய ஆவண நிபுணர்கள் – ஒருவரின் கையெழுத்து, போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வது
சைபர் தடயவியல் நிபுணர்கள் – டிஜிட்டல் குற்றங்கள் மற்றும் ஹேக்கிங் போன்றவை தொடர்பான தடயங்களை ஆராய்வது
டிஎன்ஏ ஆய்வாளர்கள் – குற்றங்களில் சந்தேகிக்கப்படுபவர்கள்/பாதிக்கப்பட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை பொருத்துதல்
தடய பாலிஸ்டிக் நிபுணர்கள் – தோட்டாக்கள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை ஆய்வு செய்தல்
SSC CGL: மத்திய அரசு துறைகளில் தடயவியல் தொடர்பான வேலைகள்
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்: மாநிலங்களில் உள்ள அரசு ஆய்வகங்களில் உள்ள வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு
UPSC: சிபிஐ அல்லது ஐபி போன்றவற்றில் தடயவியல் நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள்
DRDO/ISRO: தடயவியல் தொடர்பான ஆய்வுகள் சம்பந்தப்பட்ட வேலைகள்
மற்ற வாய்ப்புகள் என்னென்ன?
நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் தடயவியல் துறை தலைவராக உள்ள முனைவர் விஷ்வபிரகாஷ் நாயக் கூறுகையில், தடயவியல் துறையில் பி.எஸ்சி படித்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உளவுத்துறையில் (IB) வெளியிடப்படும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பது, அரசு வேலைகளுக்கான பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றார்.
அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும், 1200-1300 பேர் உளவுத்துறையில் இணைகின்றனர். 2025ம் ஆண்டு உளவுத்துறையில் 4,000 ACIOக்கள் (உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி) மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றது. ஒன்றை உற்றுநோக்கும் திறன்தான் இங்கு மிக முக்கியமானது” என்றார்.
“தடயவியல் நிபுணர்கள் உணவுத்துறையிலும் வேலை செய்கின்றனர். அவர்கள் உணவில் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்கின்றனர். பால், இனிப்புகள் அல்லது சீஸ் ஆகியவற்றில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என தடயவியல் நிபுணர்கள் கண்டுபிடிக்கின்றனர்.” என்றார் விஷ்வபிரகாஷ் நாயக்.
தமிழ்நாட்டில் எங்கு படிக்கலாம்?
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக இணை பேராசிரியர் மைக்கேல் எல். வளன் கூறுகையில், “தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தடயவியலை படிக்க வேண்டும் என விரும்பினால், சென்னையில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகம் உள்ளது. பிளஸ் 2 முடித்த பிறகு தேசியளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வின் மூலம் இங்கு சேரலாம். இது மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் இங்கு உள்ளன. இதுதவிர, எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திலும் தடயவியல் துறை உள்ளது.
சென்னை பல்கலைக்கழகம், ஒருசில தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில், குற்றவியல் துறை (criminology) உள்ளது. இதில் ஒரு பிரிவாக, தடயவியலை படிக்க முடியும்.” என்றார்.
துறையில் வளர்ச்சி எப்படி இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
தடயவியலில் பிஹெச்டி முடித்தவுடன் பல வாய்ப்புகள் இருப்பதாக சிம்ரன் தாகூர் கூறினார்.
அதன்படி, உதாரணமாக, நீங்கள் கல்வித்துறையில் கற்பிப்பதற்கு செல்லலாம்.
அடுத்ததாக, ஆய்வுகளில் ஈடுபடலாம். ஒவ்வொரு நாளும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, எனவே ஒவ்வொரு குற்றங்களும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள நமக்கு புதிய தொழில்நுட்பங்கள் தேவை.
சிம்ரன் கூறுகையில், “துப்பறியும் நிறுவனங்களில் சேரலாம் அல்லது வழக்கறிஞர்களிடமும் பணிக்கு சேரலாம்.” என்றார்.
முனைவர் விஷ்வபிரகாஷ் நாயக்கும் இதையே கூறுகிறார். தடயவியலில் எம்எஸ்சி முடித்திருந்தால் பல வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். விரல்ரேகை ஆய்வு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதில் சிறந்து விளங்குபவர்கள், வங்கி துறை மற்றும் காப்பீடு நிறுவனங்களிலும் சேரலாம் என்றார் அவர்.
வேதியியலில் ஆர்வம் கொண்டவர்கள் ஆய்வகங்களில் இணையலாம், தற்போது தண்ணீர், காற்று மற்றும் உணவு சம்பந்தப்பட்ட ஆய்வகங்கள் தொடங்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் ஐடி நிறுவனங்களில் இணையலாம்.
இவை தவிர்த்து, தனியார் விசாரணை முகமைகளும் தடயவியல் துறை மாணவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
தடயவியல் மாணவர்களுக்கு சட்ட நிறுவனங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கறிஞர்கள் அறிவியல் ஆய்வறிக்கைகளை புரிந்துகொள்வதில் அடிக்கடி சிரமப்படுவர். எனவே, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வாதங்களை முன்வைக்க தடயவியல் நிபுணர்கள் உதவ முடியும்.