சென்னையில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான நபர்கள் வட மாநிலத்தவர்கள் என்றும் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் என்ன நடந்தது? குற்றத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களைக் காவல்துறை கைது செய்தது எப்படி?
சென்னை சைதாபேட்டை உள்ளிட்ட ஆறு இடங்களில் செவ்வாய்க் கிழமையன்று (மார்ச் 25) காலை ஆறு மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்ததாக சென்னை பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஒரு மணிநேரத்திற்குள் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததால் சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு, புனித தோமையர் மலை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், HANDOUT
முன்னதாக, காலை 6 மணியளவில் திருவான்மியூர், இந்திரா நகர் பகுதியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த 54 வயது பெண்மணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 8 சவரன் நகையைப் பறித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்மணி புகார் மனு கொடுத்துள்ளார். அடுத்து சாஸ்திரி நகரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த 66 வயது மூதாட்டியிடம் இருந்து 4 கிராம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டதாக பெசன்ட் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப் பகுதி, சைதாப்பேட்டை, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வயதான பெண்களைக் குறிவைத்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக அங்குள்ள காவல் நிலையங்களில் புகார் பதிவானது.
விமான நிலையத்தில் இருவர் கைது
பட மூலாதாரம், HANDOUT
இதில் சில சம்பவங்கள் அடையாறு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு ஹைதராபாத் செல்வதற்குத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வைத்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக அடையாறு துணை ஆணையர் பொன்.கார்த்திக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. ” கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல் எதுவும் எனக்கு வரவில்லை. இதுதொடர்பாக மாநகர காவல்துறை தலைமை தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியிடப்படும்” என்று மட்டும் பதில் அளித்தார்.
இதையடுத்து, விமான நிலையத்தில் வைத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள், சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாக அறியப்பட்டதன் அடிப்படையில் தனிப்படையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை விமான நிலைய நுழைவு வாயிலிலும் மற்றொரு நபரை விமானத்தின் உள்ளேயும் சென்று கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்பில் வட மாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?
பட மூலாதாரம், HANDOUT
இவர்கள் இரண்டு பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதற்கு முன்னரும் இதேபோல தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களை மூன்று மணிநேரத்தில் காவல்துறை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், “சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நேரத்தில் தங்கச் சங்கிலிகளைப் பறித்துவிட்டு சந்தேக நபர்கள் வந்த வாகனத்தைப் பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே அவர்கள் நிறுத்தியுள்ளனர்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அங்கிருந்து விமான நிலையம் சென்று ஹைதராபாத் சென்று பின்னர் மும்பை செல்லத் திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மும்பையில் இருந்து உ.பி செல்வது இவர்களின் பயணத் திட்டமாக இருந்துள்ளது” எனக் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் காவல்துறை பெண் அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலியும் அடக்கம்.
இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய காவல்துறை உயர் அதிகாரி, “இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் என முடிவானது. அவர்களை வட மாநிலங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அதே பாணியில் கொள்ளை நடந்ததால் துரிதமாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளோம்” எனக் கூறினார்.
தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை
பட மூலாதாரம், Getty Images
தற்போது மேலதிக விசாரணை நடைபெற்று வருவதால், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கும்பலின் முழு பின்னணியும் விரைவில் தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தங்கத்தில் விலை சவரன் 65 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பதால் தங்கச் சங்கிலிகளைப் பறிப்பதற்கு விமானம் மூலம் வந்து குறுகிய நேரத்தில் கொள்ளையடிக்கும் திட்டத்தை அரங்கேற்றி இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தங்கச் சங்கிலி பறிப்புக்காக இவர்கள் பயன்படுத்திய வாகனம் கர்நாடக மாநில பதிவெண் கொண்டதாக உள்ளது.
‘இதையடுத்து, இந்த வாகனங்களை யாரிடம் இருந்து வாங்கியுள்ளனர்? கொள்ளையடித்த தங்கத்தை என்ன செய்கின்றனர்? சென்னையில் இவர்களுக்கு உதவி செய்த கும்பல் யார்?’ என்பவை குறித்து போலீஸ் தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.