சென்னை: சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புகளுக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சி சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவைகள் கொண்டு வரப்படும்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
நான் ஏற்கனவே சொன்னது போல, உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும்! என்னைப் பொறுத்தவரைக்கும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு சென்னை தான் இந்தியாவிலேயே – “கிளீன் சிட்டி”, தமிழ்நாடு தான் “கிளீன் ஸ்டேட்” என்று சொல்ல வேண்டும்! அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும்.

எதிர்காலத்தில், மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பதுபோல, மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை நூறு விழுக்காடு கடைப்பிடிப்பவர்களாக முன்னேறி, குப்பைகளை ஒழுங்காக தரம் பிரித்துப் போட்டு, தூய்மைப் பணியாளர்களின் சுமை பெருமளவில் குறைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் என்பது மற்ற எந்தப் பணியையும் போன்ற பணியாக கருதப்படுகின்ற அளவுக்கு இவர்களுடைய கண்ணியமும், முறையான பணிச்சூழலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
என்னுடைய கனவு – உங்களுடைய வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும். உங்களுடைய உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் நன்றாக படித்து, உயர்ந்த பொறுப்புகளில் உட்கார வேண்டும். சுய ஒழுக்கம் இல்லாமல், முழுமையான வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே கிடையாது. அரசு தன்னுடைய கடமையை செய்யும். மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களிலும், நம்முடைய மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம். அதற்காக தொடர்ந்து உழைப்போம்! தன்னலம் கருதாத தூய்மைப் பணியாளர்களின் சேவையை போற்றுவோம்.” என்றார்.