சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாகவும், மக்கள் பிரச்சினை குறித்து அமித் ஷாவை சந்தித்ததாகவும் பழனிசாமி கூறினாலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதிமுக வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், திமுக கூட்டணியின் பலம், பலவீனம், 2026 தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பழனிசாமியின் அனுமதி பெற்று தான் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்திக்கிறாரா? அனுமதி பெறாமல் சந்தித்தால் அவர் மீது ஏன் பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்? என அதிமுகவினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீமான் மறுப்பு: இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் சந்தித்ததாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. இதற்கு சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தால், சந்தித்தேன் என்று தைரியமாக கூறியிருப்பேன். அதை சொல்வதற்கு எனக்கு என்ன பயமா? தயக்கமா? அவரை சந்தித்தால், சந்தித்ததாக கண்டிப்பாக நானே சொல்வேன். அதைவிடுத்து சீமான் மத்திய அமைச்சரை சந்தித்ததாக நீங்களே கற்பனை செய்துகொண்டால் நான் என்ன செய்யமுடியும் என்றார்.