• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்! | Men driving pink autos in Chennai will be confiscated

Byadmin

Nov 8, 2025


சென்னை: சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த மார்ச் 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், சென்னையில் பல இடங்களில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் சிலர் ஓட்டுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக நலத்துறையின் கள ஆய்வுக் குழு கடந்த சில நாட்களாக நடத்திய ஆய்வில், சில ஆண்கள் ஆட்டோ ஓட்டுவது கண்டறியப்பட்டது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, பிங்க் ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோ இயக்குபவர்களிடம் இதுகுறித்து பலமுறை கூறப்பட்டுள்ளது. விதிகளை மீறி, ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நலத்துறையால் எச்சரிக்கப்பட்டது. எனவே, அறிவுறுத்தல்களை மீறி, பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.



By admin