சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மேக வெடிப்பால் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் புழுக்கமும் நிலவியது. நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் இருந்தது. இந்த நிலையில், இரவு 11 மணிக்கு மேல் லேசான தூறலுடன் தொடங்கிய மழை, கனமழையாக கொட்டித் தீர்த்தது. நள்ளிரவு சுமார் 12 மணிக்கு பிறகும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை நீடித்தது.
‘சென்னையில் ஆக.30-ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் 3 இடங்களில் அதிகனமழை, 8 இடங்களில் மிக கனமழை, 28 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ., மணலி புதுநகரில் 26 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேக வெடிப்பே இதற்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகனமழை காரணமாக, சென்னை வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. 23 விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டது.
திடீர் கனமழை, பாதிப்புகள், முன்னேற்பாடுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம், ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
செப்.6 வரை மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
செப்.2 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.