பட மூலாதாரம், India Squash
சென்னையில் நடந்த எஸ்டிஏடி (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இறுதிப் போட்டியில் ஹாங் காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் 3-0 என இந்தியா வென்றது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் இதுதான் இந்தியாவின் இரண்டாவது பதக்கம்; முதல் தங்கம். இதற்கு முன்பு 2023 உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்திருந்தது.
இந்த வெற்றி இந்தியாவில் ஸ்குவாஷ் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்தியா பதக்கம் வென்றது எப்படி?
ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025: ஃபார்மட் என்ன?
டிசம்பர் 9 தொடங்கிய இந்த உலகக் கோப்பையில், மொத்தம் 12 அணிகள் கலந்துகொண்டன. அவை, 3 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் இந்திய அணி ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணிகளோடு பி பிரிவில் இடம்பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்தத் தொடரின் ஒவ்வொரு மோதலிலும் (tie) நான்கு போட்டிகள் நடக்கும்: இரண்டு ஆண்கள் ஒற்றையர் போட்டிகள் மற்றும் இரண்டு பெண்கள் இரட்டையர் போட்டிகள். உதாரணமாக இந்தியா vs ஸ்விட்சர்லாந்து மோதலில், 4 ஒற்றையர் (2 ஆண்கள் & 2 பெண்கள்) போட்டிகள் நடக்கும்.
இதில் எந்த அணி அதிக போட்டிகளை வெல்கிறதோ, அந்த அணியே அந்த மோதலை (tie) வெல்லும். ஆண்கள் போட்டியும், பெண்கள் போட்டியும் மாறி மாறி நடக்கவேண்டும்.
ஒரு போட்டியை வெற்றி பெற, அந்த வீரரோ வீராங்கனையோ குறைந்தது மூன்று கேம்களை வெல்லவேண்டும். அதேபோல், ஒரு கேமை வெல்ல, அவர்கள் குறைந்தபட்சம் ஏழு புள்ளிகள் பெறவேண்டும்.
குரூப் சுற்று மோதல்களில் (ties) 4 போட்டிகளுமே நடக்கும். நாக் அவுட் போட்டிகளில், ஒரு அணி முதல் மூன்று போட்டிகளையும் (3-0) வென்றுவிட்டால், நான்காவது போட்டியை ஆடவேண்டியதில்லை.
பட மூலாதாரம், India Squash
இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பாதை
குரூப் சுற்றின் இரண்டு மோதல்களையுமே இந்தியா 4-0 என வெற்றி பெற்றது. டிசம்பர் 9 ஸ்விட்சர்லாந்தையும், அடுத்த நாள் பிரேசிலையும் வீழ்த்திய இந்தியா பி பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை சந்தித்தது. இந்த மோதலின் முதல் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, டீகன் லியா ரஸலை எதிர்கொண்டார். இதை 3-0 (7-4, 7-4, 7-2) என்று நேர் கேம்களில் வென்றார் ஜோஷ்னா. அடுத்த போட்டியில் 3-0 என்ற கேம் கணக்கில் டெவால் வேன் நீகர்க்கை வீழ்த்தினார் இந்தியாவின் அபய் சிங். மூன்றாவது போட்டியில் ஹேலி வார்டை 3-0 என்று தோற்கடித்தார் இளம் வீராங்கனை அனாஹத் சிங்.
அரையிறுதியில் இந்திய அணி இரண்டு முறை சாம்பியனான எகிப்து அணியை சந்தித்தது. முதலில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 3-0 (7-1, 7-3, 7-6) என்று இப்ராஹிம் எல்கபானியை வீழ்த்தினார்.
அடுத்த போட்டியில் நூர் ஹைக்கல், அனாஹத் சிங்குக்கு கடும் சவால் கொடுத்தார். முதல் கேமை இழந்த அனாஹத், அதன்பிறகு சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்து அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றினார். ஆனால், நூர் நான்காவது கேமை வென்றுவிட, போட்டி பரபரப்பானது. இறுதியில் ஐந்தாவது கேமையும், அந்தப் போட்டியையும் வென்று, (6-7, 7-5, 7-3, 3-7, 7-3) இந்தியாவின் முன்னிலையை அதிகப்படுத்தினார் அனாஹத்.
அடுத்து விளையாடிய அபய் சிங் 3-1 (7-5, 6-7, 7-5, 7-6) என்ற கேம் கணக்கில் ஆடம் ஹவாலை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
பட மூலாதாரம், India Squash
இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?
அரையிறுதியில் ஜப்பானை வீழ்த்திய ஹாங் காங் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது இந்தியா.
முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் முன்னால் இருக்கும் க யி லீ உடன் மோதினார் 39 வயது இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா. முதல் கேமை ஜோஷ்னா 7-3 என்று கைப்பற்றியிருந்தாலும், க யி லீ இரண்டாவது கேமில் கம்பேக் கொடுத்தார். அந்த கேமை 2-7 என ஜோஷ்னா இழந்தார்.
அதன்பிறகு சுதாரித்து ஆடி தன்னுடைய சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்த அவர், அடுத்த இரு கேம்களையும் 7-5, 7-1 எனக் கைப்பற்றினார். அதன்மூலம் 3-1 என வெற்றி பெற்று இந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். க யி லி அவருடைய பலமான ஆட்டத்தைப் பலமுறை காட்டியிருந்தாலும், ஜோஷ்னா தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி அவரை வீழ்த்தினார்.
இரண்டாவது போட்டியில் அபய் சிங் 7-1, 7-4, 7-4 என நேர் கேம்களில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 2-0 என்ற முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர் ஹாங் காங் வீரர் ட்ஸ் க்வான் லௌ (Tsz Kwan Lau) கொடுத்த சவாலை எளிதாக முறியடித்தார்.
மூன்றாவது போட்டியில் நடப்பு ஆசிய சாம்பியன் ஹோ ட்ஸே லோக் உடன் மோதினார் அனாஹத் சிங். ஒரு சாம்பியனுக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் சிறப்பாக ஆடிய அவர், 7-2, 7-2, 7-5 என்று நேர் கேம்களில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங் காங் வெள்ளிப் பதக்கமும், அரையிறுதியில் தோற்ற ஜப்பான் மற்றும் எகிப்து அணிகள் வெண்கலப் பதக்கமும் வென்றன.
பட மூலாதாரம், India Squash
இந்தியாவை சாம்பியன் ஆக்கியவர்கள் யார்?
இந்திய அணிக்காக இந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் சீனியர் ஜோஷ்னா சின்னப்பா. 39 வயதான அவர், சென்னையில் பிறந்தவர். ஆசியன் கேம்ஸில் 5 பதக்கங்களும், காமன்வெல்த் போட்டிகளில் 2 பதக்கங்களும் வென்றிருக்கிறார். கடந்த உலகக் கோப்பையில் (2023) வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். 2013ம் ஆண்டு அர்ஜுனா விருது வென்ற அவர், 2024ல் பத்மஶ்ரீ பட்டம் பெற்றார்.
17 வயதேயான அனாஹத் சிங் புதுடெல்லியைச் சேர்ந்தவர். இவர், 14 வயதிலேயே இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றார். 2023ம் ஆண்டு நடந்த ஆசியன் கேம்ஸில் 2 வெண்கலப் பதக்கங்கள் (கலப்பு இரட்டையர் மற்றும் பெண்கள் அணி) வென்றார். பிவி சிந்துவின் ரசிகையான இவர் ஆரம்பத்தில் பேட்மின்டன் தான் விளையாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் பேட்மின்டன், ஸ்குவாஷ் இரண்டையுமே விளையாடிக்கொண்டிருந்தார். தன் அக்காவும் ஸ்குவாஷ் விளையாடிக்கொண்டிருந்ததால், தன் பெற்றோருக்கு எளிதாக இருக்கவேண்டும் என்று ஸ்குவாஷைத் தேர்வு செய்திருக்கிறார். தற்போது இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை இவர்தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தான் ஆண்கள் பிரிவில் இப்போது தேசிய சாம்பியன். 27 வயதான இவர், 2025 ஆசியன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். தற்போது உலக தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் இவர், 200வது இடத்துக்கும் பின்னால் இருந்து டாப் 50 இடங்களுக்குள் நுழைய எடுத்துக்கொண்டது வெறும் இரண்டே ஆண்டுகள். இவர் அடிக்கடி பார்சிலோனா சென்று பயிற்சி செய்துவருகிறார்.
ஆண்கள் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீரரான அபய் சிங், சென்னையில் பிறந்தவர். 2023ல் நடந்த ஆசியன் கேம்ஸில் அனாஹத் உடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அபய், ஆண்கள் அணிப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், 2023 உலகக் கோப்பையில் வெண்கலம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்திருந்தார். இவருக்கு வயது 27.
பட மூலாதாரம், India Squash
சாம்பியன்கள் சொன்னது என்ன?
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அபய் சிங், “நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நாள் இது. சாம்பியன் டீம் மேட்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். இந்த ஒரு வாரம் எல்லோருமே பெரிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். ஒருவர் கூட ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பதே இந்த அணியைப் பற்றிச் சொல்லும். ஒரு சென்னைப் பையனாக, என்னுடைய ஊரில் இதைச் செய்ததை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை” என்று கூறினார்.
தன்னுடைய இரண்டாவது உலகக் கோப்பைப் பதக்கத்தை வெல்லும் ஜோஷ்னா சின்னப்பா, “இந்த அணியில் இன்னும் விளையாடுவதற்கே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்பதுதான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. சென்னையில், சொந்த மக்கள் முன்னிலையில் விளையாடியது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் இந்த இறுதிப் போட்டியில் விளையாடியதே இல்லை. அதனால் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஏனெனில், உங்கள் நாட்டுக்கு நீங்கள் சிறந்த தொடக்கத்தைக் கொடுக்கவேண்டும். நான் நல்லபடியாக தொடங்கியது மகிழ்ச்சியளித்தது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு