பட மூலாதாரம், Getty Images
‘மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழின் அடிப்படையில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மூன்று பேர் உரிமை கோருகின்றனர். இதற்காக பல்வேறு சிவில் வழக்குகளைத் தொடுத்து பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்குமாறு தாம்பரம் தாசில்தாருக்கு ஆகஸ்ட் 25 அன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் என்ன நடந்தது? நில மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். சம்பந்த முதலியார் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த நிலத்தை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக போனி கபூர் தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரின் இரண்டாவது மனைவி, மகன், மகள் என மூன்று பேர் தங்களுக்கு சொத்தில் பங்கு உள்ளது எனக் கூறி வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கின் மனுவில் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.
போனி கபூர் தரப்பு வாதம் என்ன?
பட மூலாதாரம், Facebook
‘சம்பந்த முதலியாருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று சொத்து பிரிப்பு தொடர்பாக இவர்களுக்குள் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் ஸ்ரீதேவி நிலத்தை வாங்கியதாக, வழக்கின் மனுவில் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ‘தங்களுக்கும் சொத்தில் பங்கு உள்ளது’ எனக் கூறி 2005 ஆம் ஆண்டு தாம்பரம் தாசில்தாரிடம் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் சந்திரசேகரின் இரண்டாவது மனைவி தரப்பில் பெறப்பட்டுள்ளது.
‘நிலத்தின் உரிமையாளரான சம்பந்த முதலியாரின் உறவினர்கள் மைலாப்பூரில் வசித்து வரும் சூழலில், வாரிசு சான்றிதழை தாம்பரம் தாசில்தார் வழங்குவதற்கு அதிகாரம் இல்லை’ எனவும் வழக்கின்போது போனி கபூர் தரப்பு வாதிட்டது.
‘1975 ஆம் ஆண்டு தன்னை சந்திரசேகர் திருமணம் செய்ததாக சிவகாமி என்பவர் கூறியுள்ளார். ஆனால், அவரின் முதல் மனைவி 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறந்துள்ளார். ஆகவே, இதை சட்டப்பூர்வ திருமணமாக கருத முடியாது’ என, போனி கபூர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அந்தவகையில், இந்து வாரிசுரிமை சட்டத்தின்கீழ் மூன்று பேரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக வகைப்படுத்த முடியாது’ எனவும் போனி கபூர் தரப்பில் வாதிடப்பட்டது.
‘மோசடியாக பெறப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் தான் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும்’ என நீதிமன்றத்தில் போனி கபூர் தரப்பில் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 25 அன்று மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘போனி கபூரின் விண்ணப்பம் மீது நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
“ஸ்ரீதேவி குடும்பத்தினரின் வழக்கில் வாரிசு சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் தாசில்தாரிடம் உள்ளது. பட்டாவைக் கூட அவர் ரத்து செய்யலாம்” எனக் கூறுகிறார், சிவில் வழக்குகளைக் கையாளும் மூத்த வழக்கறிஞர் சத்திய சந்திரன்.
“நிலத்துக்கான பத்திரத்தில் இருந்து தான் உரிமை என்பது வருகிறது. பட்டாவுக்கும் பத்திரத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் கண்டறியப்பட்டால் பத்திரம் மட்டும் செல்லுபடியாகும்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
நில மோசடி எப்படி நடக்கிறது?
நில மோசடிகள் நடக்கும்விதம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன் கார்த்திகேயன், “கிழக்குக் கடற்கரைச் சாலையில் 1960 ஆம் ஆண்டில் ‘மாடர்ன் பில்டர்ஸ்’ என்ற நிறுவனம், மிகக் குறைந்த விலையில் அரசு ஊழியர்களுக்கு மனைகளை விற்றது. அந்த நிலங்கள் எல்லாம் தற்போது கோடிக்கணக்கில் விலை போகின்றன” என்கிறார்.
“நிலங்களை வாங்கியவர்களின் வாரிசுகளில் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுவிட்டனர். சிலரின் வாரிசுகளுக்கு நிலம் இருப்பதுகூட தெரியவில்லை” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
நிலத்தை வாங்கிய நபர் இறந்துவிட்டதாக வருவாய்த்துறையில் இறப்புச் சான்றிதழை போலியாக வாங்கியும் அதன்மூலம் தான் அவரது வாரிசு எனக் கூறியும் சொத்துகளை விற்று மோசடி நடப்பதாகவும் சரவணன் கார்த்திகேயன் கூறுகிறார்.
பத்திரப் பதிவுத்துறையில் அசல் ஆவணங்களை ‘தொகுதி’ என்ற பெயரில் பராமரித்து வருகின்றனர். பத்திரப்பதிவு நடக்கும்போது அதன் நகல் ஒன்று சேமித்து வைக்கப்படுகிறது. நிலத்தை விற்கும்போது இரு ஆவணங்களும் பொருந்தி வந்தால் மட்டுமே பத்திரப்பதிவுகள் நடக்கின்றன.
“வருவாய்த்துறையில் பெறப்படும் வாரிசு சான்றிதழை அடிப்படையாக வைத்து, போலி ஆவணம் தயாரித்து வேறு நபர்களுக்கு விற்றுவிடுகின்றனர். ஆவணம் என ஒன்று உருவாகிவிட்டால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை” என்கிறார், சரவணன் கார்த்திகேயன்.
பட மூலாதாரம், Getty Images
‘மோசடிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன’
“தமிழ்நாட்டில் பத்திரப்பதிவின்போது தொடர்புடைய நபரின் புகைப்படங்களை ஒட்டும் வழக்கம் என்பது 1.7.2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது” எனக் கூறுகிறார் ஓய்வுபெற்ற சார் பதிவாளர் பன்னீர்செல்வம்.
அதற்கு முந்தைய காலகட்ட ஆவணங்களில் நில உரிமையாளரின் பெயர் மட்டும் இருந்ததால் ஏராளமான மோசடிகள் நடந்ததாகக் கூறும் அவர், “தற்போது பத்திரப்பதிவில் பயோ மெட்ரிக், ஆதார் சரிபார்ப்பு என கணினிமயமாக மாற்றப்பட்டுவிட்டதால் மோசடிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார்.
“பத்திரப்பதிவுச் சட்டம் 1908, பிரிவு 83ன்படி தனது நிலத்தின் மீது தவறான பதிவு நடந்திருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம்” எனவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
ரத்து செய்யப்பட்ட சட்டத்திருத்தம்
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நில உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் என மோசடிகள் கண்டறியப்பட்டதால் பத்திரப்பதிவுச் சட்டத்தில் 77ஏ என்றொரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. சார்பதிவாளருக்கு பத்திரப்பதிவை ரத்து செய்யும் உரிமையை வழங்கிய இந்த சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனை மேற்கோள் காட்டிப் பேசிய ஓய்வுபெற்ற சார் பதிவாளர் பன்னீர்செல்லம், “மாவட்ட பதிவாளர் என்பவர் சிவில் நீதிபதி கிடையாது என நீதிமன்றம் கூறியது. நில மோசடி நடந்திருப்பதாக உரிமையாளர் கருதினால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்” என்கிறார்.
வழக்கு தொடர்ந்தால் செய்ய வேண்டியது என்ன?
“வழக்கின்போது, தனது நிலத்தில் மேற்கொண்டு எந்தவிதப் பரிவர்த்தனையும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சார் பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்” எனக் கூறிய பன்னீர்செல்வம், “இதன்மூலம் நிலத்தை வேறு நபர்களின் கைகளுக்குச் செல்லாமல் பாதுகாக்க முடியும்” என்கிறார்.
இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரன், “தனது நிலம் மோசடியாக அபகரிக்கப்பட்டது தெரியவந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் சிவில் வழக்கு தொடர வேண்டும். மோசடி என்ற அடிப்படையில் பத்திரத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரலாம்” என்கிறார்.
“கிரிமினல் நீதிமன்றங்களின் தீர்ப்பு, சிவில் நீதிமன்றங்களுக்கு பொருந்தாது. ஆனால், சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பு, கிரிமினல் நீதிமன்றங்களில் செல்லுபடியாகும். அந்தவகையில், சொத்துகளை மீட்பதற்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது சரியானது” எனவும் சத்தியசந்திரன் குறிப்பிட்டார்.
என்ன தண்டனை?
“சிவில் வழக்குகளில் தீர்வைப் பெறுவதற்கு அதிக ஆண்டுகள் தேவைப்படுகிறதே?” என சத்திய சந்திரனிடம் கேட்டபோது, “ஆனால், அது ஒன்று தான் தீர்வாக உள்ளது. கிரிமினல் வழக்குகளில் தண்டனை மட்டுமே கிடைக்கும். வேறு எந்த நிவாரணமும் பெறுவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார்.
“கிரிமினல் நீதிமன்றங்களால் சொத்துப் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. பத்திரம் ரத்து செய்யப்பட்டால் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
“சிவில் நீதிமன்றங்களின் மூலம் சொத்துகளை மீட்டெடுக்க முடியும். மோசடி நடந்திருந்தால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 477, 477(ஏ), 468 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது” எனக் கூறும் சத்திய சந்திரன், “குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்” என்கிறார்.
ஆவணங்களைத் திருத்துவது உள்பட பல்வேறு குற்றங்களை மேற்கண்ட சட்டப்பிரிவுகள் குறிக்கின்றன.
நில மோசடியைக் கண்டறிவது எப்படி?
அதேநேரம், ஒருவர் நிலம் வாங்கும்போது அது மோசடியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் வழிமுறைகளை ஓய்வுபெற்ற சார் பதிவாளர் பன்னீர்செல்வம் பட்டியலிட்டார்.
* நிலத்தை வாங்கும்போது தொடக்கத்தில் இருந்து அதன் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். சொத்து தொடர்பான முதல் ஆவணத்தில் இருந்து தற்போது வரை அனைத்து பரிமாற்றங்களும் சரிவர நடந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
* ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் ஆய்வு செய்வது சரியானது. பொதுமக்களால் அனைத்துப் பரிமாற்றங்களையும் ஆராய்வது கடினம்.
* தனது வழக்கறிஞர் யார் என்பதை தரகர்களிடம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். வழக்கறிஞரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தரகர்கள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* தரகர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலத்தின் உரிமையாளரை சந்திக்கவிடாமல் தடுத்தால் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
*நிலம் வாங்குவதாக இருந்தால் அதுகுறித்து செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நிலம் தொடர்பாக யாருக்கேனும் ஆட்பேசனை இருந்தால் முப்பது நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.
* பெரிய நிறுவனங்கள் வாங்கும் சொத்துகள் பலவும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனை வாசிக்கும் நபர் அசல் உரிமையாளராக இருந்தால் தொடர்பு கொள்வதற்கான சூழல் உருவாகும்.
* நில ஆவணங்களில் அதன் எல்லைகள் சரியாக உள்ளதை என்பதை வைத்து போலியானதா என்பதை அடையாளம் கண்டறியலாம்.
*தனிப்பட்ட முறையில் ஆன்லைனில் வில்லங்க சான்று போட்டு நிலத்தின் மீதான பரிமாற்றங்களைக் கண்டறியலாம். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தொடர்புடைய சார் பதிவாளரை நேரில் அணுகி நிவாரணம் பெறலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு