பட மூலாதாரம், Nikhil Inamdar
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ராம்ஜி தரோட் நிர்வகித்து வந்த தெருமுனைக்கடை தற்போது மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது.
இந்தக் கடை மும்பையில் பரபரப்பான கடைத்தெருவில் ஒரு சந்தில் இருக்கிறது. அந்தப் பகுதி மக்கள், 75 வருடங்களுக்கும் மேலாக இந்த கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தன் அப்பாவின் இந்தக் கடைக்கு, தனது பத்து வயதில் இருந்து வந்து கொண்டிருக்கிறார் தரோட். எப்போதாவது வரும் ஒரு வாடிக்கையாளருக்காக, இப்போதெல்லாம் நாளின் பெரும்பாலான நேரம் வெறுமனே உட்கார்ந்திருக்கிறார்.
அவருக்குப் பின்னால் இருக்கும் விற்காத பிஸ்கட்டுகள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் அட்டைப்பெட்டியில் ‘இருப்புப்பொருள் தீர்க்கும் விற்பனை’ (stock clearance sale) என்ற அறிவிப்பு காணப்படுகிறது.
”சில வருடங்களுக்கு முன்பெல்லாம் எனக்கு மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது. இப்போதெல்லாம் யாரும் வருவதே இல்லை,” என்று கசப்புடன் சொன்னார் எழுபது வயதைக் கடந்த தரோட். ”அவர்கள் அனைவரும் ஆன்லைனிலே வாங்கிக் கொள்கிறார்கள். நான் கடையை மூடிவிட்டு ஒய்வு பெற முடிவு செய்திருக்கிறேன்”.
பத்தே நிமிடத்தில் மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுக்கும் Zomato, Blinkit மற்றும் Zepto போன்ற ”விரைவு வர்த்தக செயலிகள்” நகர்ப்புற இந்தியாவில் பரவியுள்ளதால், நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான சுற்றுவட்டாரக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை கடந்த அக்டோபர் வரை 2,00,000 இருக்கலாம் என்று நுகர்வோர் பொருட்களுக்கான விநியோகஸ்தர்களின் ஆதரவுக் குழு ஒன்று கணித்துள்ளது.
அதே நேரம் கடந்த 5 வருடங்களில் சென்னையில் 20% சிறு மளிகைக் கடைகளும், 30% பெரிய பல்பொருள் அங்காடிகளும் மூடப்பட்டுள்ளன என்று நகராட்சி அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
பட மூலாதாரம், Nikhil Inamdar
தரோட்டின் கடைக்கு மிக அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் சுனில் கேனியா, தான் இன்னும் கடை நடத்தி வருவதற்குக் காரணம் அந்தக் கடை இருக்கும் இடம் தன் குடும்பத்துக்கு சொந்தமாக இருப்பதால்தான் என்கிறார். வாடகை கொடுத்து கடை நடத்துபவர்களால் இப்போது எளிதாக சமாளிக்க முடியாது என்கிறார் அவர்.
”கோவிட் ஊரடங்குகளுக்குப் பிறகு எல்லாமே சரியத் தொடங்கியது. தொற்றுநோய் பரவலுக்கு முன் நாங்கள் செய்த வணிகத்தில் 50 %க்கும் குறைவாகவே இப்போது நடக்கிறது,” என்று பிபிசியிடம் சொன்னார் கேனியா.
நொறுக்குத்தீனிகள் விற்கும் தெருவோர விற்பனையாளர்கள் போன்ற வாடிக்கையாளர்களால்தான் அவருக்கு வருமானம் வருகிறது. வீட்டுக்கே பொருட்கள் கொண்டு வரப்படும் வசதியால், தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் இப்போதெல்லாம் ‘காணாமல்’ போய்விட்டார்கள் என்கிறார் அவர்.
விரைவு வர்த்தகத்தின் எளிமை காரணமாக, மும்பையில் கிராஃபிக் டிசைனராகப் பணிபுரியும் மோனிஷா சாத்தே உள்ளிட்ட கோடிக்கணக்கான நகர்ப்புற இந்தியர்கள் இப்போதெல்லாம் வாரா வாரம் மளிகைப்பொருட்கள் வாங்க கடைக்குச் செல்வதில்லை.
”மளிகைப் பொருட்களை வீட்டுக்குத் தூக்கி வருவதே பெரிய வலி,” என்கிறார் சாத்தே. எப்போதாவது பொருட்கள் வாங்கச் சென்றாலும், அந்தக் குறுகிய தெருக்களுக்குள் தனது காரை நிறுத்த இடம் தேடுவதே சவாலாக இருக்கிறது என்கிறார்.
மளிகைக்கடைக்காரர்கள், காய்கறி விற்பவர்களுடனான உரையாடலையும், அங்கே கிடைக்கும் புது மலர்ச்சியுடன் கூடிய விளைபொருட்களின் பல்வேறு வகைகளைத் தவறவிடுவதில் வருத்தம்தான் என்றாலும், தனது வாழ்க்கையை எளிதாக்குவதால் ஆன்லைன் டெலிவரியை தேர்ந்தெடுப்பதாக சாத்தே கூறுகிறார்.
இந்தியாவின் பெரிய நகரங்களில் உள்ள நுகர்வோரில் 42 % சாத்தேவைப் போலவே யோசிக்கின்றனர்.
குறிப்பாகத் தங்கள் அவசரத் தேவைகளுக்கு இப்படிப்பட்ட உடனடி டெலிவரிகளை விரும்புகின்றனர் என்று PwC ஆலோசனை நிறுவனத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வாங்குவோர் நடத்தையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட மாற்றங்களால் பத்தில் மூன்று விற்பனையாளர்கள் தங்கள் விற்பனையில் எதிர்மறை விளைவை ஏற்பட்டுள்ளனர் என்றும், முக்கிய பொருட்களின் விற்பனை 52% க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் கூறுகிறது.
பட மூலாதாரம், Nikhil Inamdar
இந்தியக் கடைத் தெருக்களை விரைவு வர்த்தகம் எந்த அளவு காலியாக்குகிறது?
மளிகைக் கடைகள், தெருமுனைக்கடைகள், ஏன் பெரிய சில்லறை வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது வணிகத்துக்கு ஆபத்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்கிறார் சில்லறை வணிக ஆலோசனையகமான டெக்னோபாக்கின் பங்குதாரரான அங்கூர் பிசேன்.
ஆனால் குறைந்தபட்சம் இப்போதைக்காவது, ‘விரைவு வர்த்தகம் மூன்று நான்கு நகரங்களின் கதையாகத்தான்’ இருக்கிறது என்கிறார் அவர். இந்த நகரங்களில் இருந்துதான் அவர்களது மொத்த வருமானமும் வருகிறது.
நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வசிப்பதால், உலகளாவிய போக்கை ஏற்றுக்கொண்டு, மின்னல் வேக விநியோகங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக ஆயின.
அவை அதிக மக்கள்தொகை உள்ள பகுதிகளில், ‘டார்க் ஸ்டோர்களை’ – அதாவது பொதுமக்களுக்கு நேரடி விற்பனைக்கல்லாமல் டெலிவரிக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கடைகளை – குறைந்த வாடகைக்கு எடுப்பதன் மூலமாக பெரிய அளவிலான பொருளாதாரத்தை சாத்தியப்படுத்துகின்றன.
ஆனால் சிறு நகரங்களைப் பொறுத்தவரை மக்கள் தொகையும் தள்ளித் தள்ளி இருக்கும், அதோடு தேவைகளும் நிலையற்றதாக இருக்கும் என்பதால் இந்த விரைவு வர்த்தக சேவைகளை நிர்வகிப்பது அங்கே விலை உயர்ந்ததாக இருக்கும் என்று பிசேன் கூறுகிறார்.
ஆனால் நீண்டகால நோக்கில் பார்த்தால் பொது வர்த்தகத்தை , ஆன்லைன் வர்த்தகங்கள் குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் இவர்.
பாரம்பரிய வர்த்தக முறைக்கு பதற்றம்
இந்தியாவின் 130 லட்ச சில்லறை விற்பனையாளர்களின் குரலாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் அனைத்திந்திய வணிகர்கள் சங்கம், அனைத்திந்திய நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு போன்ற வர்த்தக அமைப்புகள், இப்படிப்பட்ட அதிவேக விரிவாக்கத்தைத் தடுக்கச் சொல்லி அரசாங்கத்திடம் அவசர மற்றும் தொடர் வேண்டுகோள்கள் விடுத்து வருகிறார்கள்.
கோடிக்கணக்கான மூலதனத்தை இறக்கி அதன் மூலம் ‘மிகக் குறைவான விலை’ அல்லது ‘மிக அதிகமான தள்ளுபடியில்’ பொருட்களை விற்பது போன்ற எதிர்மறை விற்பனை நடைமுறைகளில் இந்த நிறுவனங்கள் ஈடுபடுவதால், குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து நடத்தும் சின்னக் கடைகளுக்கு நியாயமற்ற போட்டிகளை உருவாக்குகின்றன என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதே கவலைகளைத் தெரிவித்த மேலும் பல சிறு வணிகர்களிடம் பிபிசி பேசியது. விரைவு வர்த்தக சேவை நடைபெறும் இடங்களில் இப்படிப்பட்ட எதிர்மறைப் போட்டிகள் நடப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று பிசேனும் ஒப்புக் கொண்டார்.
இந்த சந்தையைப் பெருமளவில் கட்டுப்படுத்தும் Swiggy, Zepto மற்றும் Blinkit போன்றவை இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டன.
தள்ளுபடி என்பது தளத்தில் உள்ள வர்த்தகர்களால் செய்யப்படுவது என்றும் இந்த விரைவு வர்த்தக சேவை நிறுவனங்களால் அல்ல என்று விரைவு வர்த்தக சேவை வட்டாரங்களில் உள்ளே இருக்கும் ஒரு நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
‘சிறிய நபருக்கு எதிராக பெரிய நபர்’ என்று வழக்கமாகச் சொல்லப்படும் இருமைக் கதைக்கு மாறாக, நேரடியாக கடைக்குச் செல்வது ‘அதிர்ச்சிகரமான’ அனுபவமாக நினைக்கும் மக்களுக்கு இதுபோன்ற ஆன்லைன் விநியோக சேவைகள், நிஜ உலக சவால்களைத் தீர்க்கும் விஷயமாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
”பெண்களையோ, வயதாவர்களையோ யோசித்துப் பாருங்கள் – அவர்கள் தங்களுக்குத் துன்புறுத்தல்கள் ஏற்படுவதையோ, போக்குவரத்து நெரிசலில் அல்லது குண்டும் குழியுமான சாலையில் பயணிப்பதையோ விரும்புவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
”அதோடு எங்கள் தளங்களில் விற்பனை செய்யும் சிறிய பிராண்டுகளை யோசித்துப் பாருங்கள் – நேரடி விற்பனையங்களில் அவர்களுக்கு நியாயமான இடம் கிடைக்காது. பெரிய பிராண்டுகள்தான் கண்பார்வைக்குத் தெரிவது போல் வைக்கப்படும். நாங்கள் சந்தையை ஜனநாயகப்படுத்தியுள்ளோம்.”
முன்னேற்றத்தில் பல்வேறு நிலைகள், உள்கட்டமைப்பு மற்றும் வருமானத்தில் வித்தியாசங்கள் போன்ற விஷயங்களில் இந்தியாவின் பன்முகத்தன்மை காரணமாக சிறு தெருமுனைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் விரைவு வர்த்தகத் தளங்கள் அனைத்தும் ஒருங்கே செயல்படமுடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
‘வெற்றி பெற்றவருக்கு சந்தை முழுவதும் சொந்தம்’ என்னும் கதையல்ல இது என்று கூறும் பிசேன், 2010ல் இணைய வணிகம் வந்தபோதே உள்ளூர் கடைகளுக்கு ”மூடுவிழா” நடத்தும் என்று பேசப்பட்டதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.
இத்தனை வருடங்கள் கழித்தும் இந்தியாவில் நடைபெறும் மொத்த வணிகத்தில் 4% தான் ஆன்லைனில் நடப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் இந்த விரைவு வர்த்தக சேவை ஏற்படுத்தும் அலைகள் நேரடி விற்பனையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை மூலம் நல்ல அனுபவத்தை கொடுக்கும் வகையில் சந்தைப்படுத்தலை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
எந்த ஒரு புதுமையும் இல்லாமல் பல தசாப்தங்களுக்கு பொருட்களை விற்று வரும் தெருமுனைக்கடைகள், ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் டெலிவரி என்பதோடு போட்டி போட வேண்டும் என்றால் அவர்களால் வழக்கமான முறையில் தொழிலைக் நடத்த முடியாத நிலை ஏற்படலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு