சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?
காவல் நிலையத்தில் மாணவி புகார்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், அந்த வளாகத்திற்குள்ளேயே திங்கள்கிழமையன்று (23.12.24) இரவு பாலியல் வன்முறைக்கு இலக்கானதாக புகார் அளித்தார்.
திங்கள்கிழமையன்று இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார்
இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.
இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னை நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார்.
“வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் விளக்கம்
அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.