பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திவந்த தூய்மை பணியாளர்கள், புதன்கிழமையன்று வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என சில புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் அவர்களுக்கு ஆறுதல் தருமா?
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமையன்று தடைவிதித்ததோடு, அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றவும் உத்தரவிட்டது.
இதற்குப் பிறகு மாலை ஐந்து மணியளவில் பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் ரிப்பன் மாளிகை பகுதியில் குவிக்கப்பட்டனர்.
ரிப்பன் மாளிகைக்கு எதிரான சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
ஆனால், அவர்கள் கைதுசெய்யப்படவில்லை. இதற்குப் பிறகு நள்ளிரவில் சுமார் 11.30 மணியளவில் காவல்துறை போராட்டக்காரர்களை கைதுசெய்யத் துவங்கியது.
இதனை அவர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.
சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் இதுபோல கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக் கூடங்களிலும் அடைக்கப்பட்டனர்.
பட மூலாதாரம், PTI
காவல்துறை மீது குற்றச்சாட்டு
காவல்துறையினர் கைது நடவடிக்கையின்போது தங்களை மிக மோசமாகக் கையாண்டதாக சிலர் புகார் தெரிவித்தனர். சில பேருந்துகளில் சென்றவர்கள் வேறு இடத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
கைது நடவடிக்கையின்போது மயக்கமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். தூய்மைப் பணியாளர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மண்டபங்களுக்கு பலத்த காவல் போடப்பட்டிருக்கிறது. சில மண்டபங்களுக்கு அருகில் செல்லக்கூட ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதற்குப் பிறகு ரிப்பன் மாளிகை முன்பாக உள்ள நடைபாதையில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டதோடு, பலத்த காவல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
எதிர்கட்சிகள் & கூட்டணி கட்சிகள் கண்டனம்
தூய்மைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
“இந்த பிரச்னையை அனைத்து அரசு அமைப்புகளும் மூர்க்கத்தனமாகவே கையாண்டுள்ளன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைவதும் நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கைகள்” என்று குறிப்பிட்டிருக்கும் அக்கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அரசு இந்த விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாண்டிருக்க வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.
6 திட்டங்களை அறிவித்த அரசு
இதற்கிடையில், இன்று காலையில் கூடிய தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஆறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவுசெய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி,
1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது ஏற்படும் தொழில்சார்ந்த நோய்களைக் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் தற்போது நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியுடன் கூடுதலாக 5 லட்ச ரூபாய்க்கு காப்பீடு இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும்.
3. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 35% தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 3,50,000 வரை இந்த மானியம் வழங்கப்படும்.
4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6. நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஆனால், முன்பு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், இதனை எப்படி நம்ப முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றன இந்த போராட்டத்தில் முன்நின்ற அமைப்புகள்.
இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவரான பாரதி இது குறித்து பிபிசியிடம் பேசும்போது, “இப்போது சொல்லியிருப்பது எல்லாம் பிரமாதமான திட்டங்கள்தான். இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டால் தொழிலாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகத்தான் இருக்கும். ஆனால், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேபோல போராட்டம் நடத்தியபோது பணி நிரந்தரம் செய்யப்படும் என அரசு வாக்குறுதி அளித்தது. தி.மு.கவும் தனது தேர்தல் அறிக்கையில் தூய்மைப் பணியாளர்களுக்கு என பல வாக்குறுதிகளை அளித்தது. அந்த வாக்குறுதிகளையெல்லாம் இவர்கள் நிறைவேற்றினால், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களையும் நிறைவேற்றுவார்கள் என நம்பலாம். இல்லாவிட்டால் இதுவும் வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் சென்ற ஆறு வழக்கறிஞர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் வழக்கறிஞர் தான் மிக மோசமாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
“போராட்டத்தைக் கையாண்டவிதம் சரியல்ல”
இது நிச்சயம் அரசுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
“எல்லாத் தரப்பினருக்குமே தூய்மைப் பணியாளர்கள் மீது பெரும் அனுதாபம் உண்டு. அவர்கள் சமூகத்தில், எல்லா விதங்களிலும் கீழ் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் நகரங்கள் ஸ்தம்பித்துவிடும். அப்படியிருக்கும்போது தூய்மைப் பணியாளர் பணிகளை தனியாருக்கு விட வேண்டுமா என்பதே கேள்விக்குறிதான். இது யாரும் செய்ய முன்வராத வேலை. அந்த வேலையை இவர்கள் செய்கிறார்கள். இதனை தனியார் மயமாக்கும்போது இதிலும் வேறு மாநிலத் தொழிலாளர்கள் பணிக்குச் சேர்வார்கள். இது இங்கே இருப்பவர்களின் வாய்ப்பைப் பாதிக்கும். அப்படியிருக்கும்போது இது போன்ற போராட்டங்களை இன்னும் சரியாகக் கையாண்டிருக்க வேண்டும்” என்கிறார் ஷ்யாம்.
நீதிக் கட்சிக் காலத்திலிருந்தே உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவது என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் இதுபோல நடத்தப்பட்டது கருத்து ரீதியாக வாக்காளர்களிடம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.
இந்தப் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்.
“போராட்டங்கள் என்று வரும்போது, அவை பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன என்ற பெயரில் அவற்றை நீதிமன்றங்கள் தடைசெய்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்பதுதான் எனது கருத்து. தூய்மைப் பணியாளர் போராட்டம் தொடர்பாக பொது நல வழக்கைத் தொடர்ந்தவர் காஞ்சிபுரம் அருகில் உள்ள வாலஜாவைச் சேர்ந்தவர். இந்தப் போராட்டம் நடப்பதால் ரிப்பன் மாளிகைக்கு அருகில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கிறது என்று கூறி இந்த வழக்கைத் தொடுக்கிறார். இந்த வாதத்தை ஏற்று நீதிமன்றம், அவர்களை அகற்ற உத்தரவிடுகிறது. பொதுவாகவே போராட்டங்கள் என்று வரும்போது, அவை பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகின்றன என்ற பெயரில் அவற்றை நீதிமன்றங்கள் தடைசெய்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்பதுதான் எனது கருத்து” என்கிறார் ஹரி பரந்தாமன்.
இந்த விவகாரத்தில் அரசு நடந்துகொண்டவிதம் சரியல்ல என்கிறார் அவர்.
“நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்னை என்று வரும்போது, அரசு, நீதிமன்றம், காவல்துறை ஆகியவை நடுநிலை வகிக்க வேண்டும். வேண்டுமானால் அந்த நிர்வாகம், தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இதில் அரசோ, நீதிமன்றமோ ஏன் தலையிட வேண்டும். வன்முறை சூழல் இருந்தால் தவிர, இதில் அரசின் தலையீடு தேவையே இல்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஊழியர்கள் போராட்டம் ஒன்றின்போது நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. ஊழியர்கள் விதி மீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. அப்போது நீதிபதியாக இருந்த சந்துரு, ஊழியர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் ‘நீங்கள் நடவடிக்கை எடுங்கள். ஏன் எங்கள் கையை வைத்து அவர்களை அடிக்கப் பார்க்கிறீர்கள்’ எனக் கேட்டார். அதுதான் சரியான பார்வை” என்கிறார் ஹரி பரந்தாமன்.
போராட்டம் என்ன ஆகும்?
தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அடுத்தகட்டமாக அனுமதி பெற்ற இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்போவதாக உழைப்பாளர்கள் உரிமை இயக்கத்தின் பாரதி பிபிசியிடம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். தங்களின் பணியை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தங்களின் சம்பளத்தைக் குறைக்கக் கூடாது ஆகியவற்றையே தூய்மைப் பணியாளர்கள் முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கின்றனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு