சென்னையில் வீட்டில் எலி மருந்து வாயு பரவி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்களின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை கூறுகிறது.
மூடிய அறைக்குள் எலி மருந்து வாயுவின் வீரியம் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள்.
எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்படும் மருந்து மனித உயிரைப் பறிக்குமா? இதுபோன்ற மருந்துகளைப் பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?
என்ன நடந்தது?
சென்னை, குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் பணிபுரியும் இவருக்கு மனைவியும் ஐந்து வயது மற்றும் ஒரு வயதில் மகளும் மகனும் உள்ளனர்.
வீட்டில் எலித் தொல்லை அதிகரித்ததால், தி.நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை கிரிதரன் தொடர்பு கொண்டதாக குன்றத்தூர் காவல்நிலைய போலீஸார் கூறுகின்றனர்.
புதன்கிழமையன்று (நவம்பர் 13) பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகள், வீட்டை ஆய்வு செய்துவிட்டு எலிகளை ஒழிப்பதற்கான ரசாயன மருந்தை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் கிரிதரனும் அவரது குடும்பத்தினரும் அவதிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“குடும்பத்தினருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதால், தனது நண்பர் ஒருவரை கிரிதரன் உதவிக்கு அழைத்துள்ளார். அவர் மூலமாக தனியார் மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
11 மணியளவில் ஒரு குழந்தையும் 1 மணியளவில் இரண்டாவது குழந்தையும் இறந்துவிட்டது” என்கிறார் பிபிசியிடம் பேசிய குன்றத்தூர் காவல் ஆய்வாளர் வேலு.
“எலி மருந்து காரணமாக குழந்தைகள் இறந்தார்களா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்பே தெரியவரும்” எனக் கூறிய காவல் ஆய்வாளர் வேலு, “ஆனால் குழந்தைகள் இறப்புக்கு அது மட்டுமே பிரதான காரணமாக உள்ளது” என்கிறார்.
‘எலி மருந்து தான் காரணம்’
இதை உறுதி செய்யும் வகையில், எலி மருந்து வாயுவை உட்கொண்டதால் கிரிதரனுக்கும் அவரது மனைவிக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுதாகர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கணவன், மனைவி இருவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் அடுத்த இரு நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“கிரிதரன் வசித்த குடியிருப்பின் முதல் மாடியில் இருந்த அந்த அறைக்குள் எங்களால் போக முடியவில்லை. ஓர் அறையில் பிளீச்சிங் பவுடர்களை அதிக அளவு கொட்டினால் என்ன நெடி வருமோ, அப்படியொரு வாடை வீசியது” என்கிறார் ஆய்வாளர் வேலு.
நீண்டநாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிதரன் குடும்பத்தினர் குடியேறியதாகக் கூறும் ஆய்வாளர் வேலு, “அந்த வீடு சரியான பராமரிப்பில்லாமல் இருந்துள்ளது. இடமும் அசுத்தமாக இருந்தது” என்கிறார்.
தியாகராய நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வீட்டை ஆய்வு செய்து மருந்தை வைத்துள்ளனர்.
“எலிகளைக் கொல்வதற்கு தேவையான மாத்திரைகளை தனியார் நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர். ஆனால், ‘நாங்கள் ஏ.சி அறையில் உறங்குவோம். ஹால் பகுதியில் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அதிக மாத்திரைகளை வைக்குமாறு கிரிதரன் மனைவி கூறியதாக விசாரணையில் தெரியவந்தது” என்கிறார், ஆய்வாளர் வேலு.
இதையடுத்து, வீட்டில் மூன்று இடங்களுக்கு பதிலாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் எலி மருந்து வைத்ததால் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இருவர் கைது
இந்த வழக்கில், எலி மருந்தை அலட்சியமாக கையாண்டதாக பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்கள் தினகரன், சங்கர்தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 106ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“முறையான பயிற்சி இல்லாத ஊழியர்களை தனியார் நிறுவனம் அனுப்பியது தான் இப்படியொரு சம்பவம் நடப்பதற்கு காரணம்” என்கிறார், காவல் ஆய்வாளர் வேலு.
குன்றத்தூர் சம்பவம் தொடர்பாக, தியாகராய நகரில் செயல்படும் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயற்சி செய்தது. அந்நிறுவனத்தின் மேலாளர் உள்பட யாரிடமும் பதில் பெற முடியவில்லை.
எவ்வாறு கையாள்வது?
எலி மருந்துகளைக் கையாள்வதில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைப் பட்டியலிட்டார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் வி.ஆர்.சுவாமிநாதன்.
* ஜிங்க் பாஸ்பைடு, செல்பாஸ் (அலுமினியம் பாஸ்பைடு) என எந்த ரசாயனத்தைக் கையாண்டாலும் கையில் உறை அணிந்திருக்க வேண்டும்.
* குழந்தைகளின் கைகளில் எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது
* முதல் நாள் வைத்த மருந்தை எலி சாப்பிடவில்லை என்றால் மறுநாள் அதை அப்புறப்படுத்த வேண்டும்
* செல்பாஸ் மருந்தை எலி வலைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவெளியில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.
* ஜிங்க் பாஸ்பைடு வயிற்றுக்குள் சென்றால் உடனே வாந்தி எடுத்துவிட வேண்டும். அது செரிமானம் அடைந்து ரத்தத்தில் கலந்துவிடக் கூடாது.
கரப்பான் பூச்சி மருந்தால் பாதிப்பு வருமா?
“அதேநேரம், கரப்பான் பூச்சிகளுக்கு வைக்கப்படும் மருந்து இந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை” எனக் கூறுகிறார் வி.ஆர்.சுவாமிநாதன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “கரப்பான்களுக்கு வைக்கப்படும் நச்சு மருந்துகளின் வழியே அவை நடந்து சென்றாலே உயிரிழந்துவிடும். அவற்றின் காலில் உள்ள நுண் துளைகள் வழியாக மருந்து உள்ளே சென்று இறப்பை ஏற்படுத்தும். இந்த மருந்தால் மனிதர்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதில்லை” என்கிறார்.
குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏன்?
“எலி மருந்தால் பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நுரையீரல் உள்பட உறுப்புகளின் வளர்ச்சி குறைவு என்பதுதான் காரணம்” என்கிறார், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “எலிகளைக் கொல்வதற்கு வைக்கப்படும் மருந்தில் இருந்து பாஸ்பைன் என்ற வாயு வெளியேறும். இதை வீடுகளில் உபயோகப்படுத்தக் கூடாது. வாயுவை வெளியேற்றும் எந்தப் பொருளாக இருந்தாலும் அதை வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்” என்கிறார்.
மூடப்பட்ட அறைக்குள் எலி மருந்து இருந்தால், நேரம் செல்ல செல்ல அதன் வீரியம் அதிகரிப்பதாக கூறும் மருத்துவர் அரசர் சீராளர், “ஒரு மனிதனின் நினைவை பாஸ்பைன் வாயு இழக்கச் செய்துவிடும். அவரால் வேறு எந்த செயலையும் மேற்கொள்ள முடியாது. என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய்விடும்” என்கிறார்.
“பாஸ்பைன் வாயுவால் பாதிக்கப்படும் நபர்கள் இறந்து போவதற்கு வாய்ப்பு அதிகம். இது நுரையீரலை அதிகம் பாதிக்கும். வாயு பரவுவதை எவ்வளவு நேரத்துக்குள் கண்டறிகிறோம் என்பது முக்கியம்.
வாயுவின் அளவைப் பொறுத்து உடலில் விஷத்தின் தன்மை மாறும். அதற்குள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். விரைவாக, மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் பாதிப்பின் அளவை பெருமளவு குறைக்க முடியும்” என்கிறார், மருத்துவர் அரசர் சீராளர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு