• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்! | chennai one application travel various transport service using single ticket

Byadmin

Sep 23, 2025


சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கார், ஆட்டோ என அனைத்து பொது போக்குவரத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2-வது ஆணையக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்’ (CHENNAI ONE) மொபைல் செயலியை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த செயலி பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், கேப் (Cab) மற்றும் ஆட்டோக்களை ஒரே க்யூஆர் பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களின் நிகழ்நேர இயக்கத்தை அறிந்து கொள்ளவும், யுபிஐ அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயணப் பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

இச்செயலி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



By admin