“மழை வந்தாலே வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். கடந்த வருடம்போல இந்த வருடமும் நீரை வெளியேற்ற மோட்டார்களை வைத்துள்ளனர். மழைநீர் வடிகால்களை ஓரளவு கட்டி முடித்துவிட்டதால் நீர் தேங்காது என நம்புகிறோம்” எனக் கூறுகிறார், வேளச்சேரியில் மளிகைக் கடை நடத்தி வரும் கவிதா.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது கடைக்குள் நீர் புகுந்ததால் சுமார் 2 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அக்டோபர் 16-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கனமழையை எதிர்கொள்வதற்கு படகுகளும் நீரை வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடைந்துவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். உண்மையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார்நிலையில் உள்ளதா?
சென்னை வேளச்சேரியில் உள்ள பெரும்பாலான தெருக்களில் நீர் வெளியேற்றும் மோட்டார்களை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. சில பகுதிகளில் சாக்கடைகளைத் தூர்வாரும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் நீர் வெளியேற்றும் மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், வேளச்சேரி ராம்நகரில் வசிக்கும் கவிதா. இவர் இப்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
‘மழைநீர் வடிகால்வாய்களை முழுமையாக அமைக்கவில்லை’
“மழை வந்துவிட்டால் வீட்டுக்குள் இடுப்பளவு நீர் வந்துவிடும். மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் வந்தாலும் படகில் ஏறித்தான் வருவார்கள். இந்த முறை தெருவுக்குள் நீர் வராது எனக் கூறியுள்ளனர்” எனக் கூறுகிறார்.
“மழையின் தாக்கம் அதிகரிக்கும்போது தான் வீட்டுக்குள் நீர் வருமா.. வராதா என்பதைக் கணிக்க முடியும். ஆனாலும், இப்போதே மளிகைப் பொருட்களை எல்லாம் பாதுகாப்பாக வைக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். அந்தளவுக்கு கடந்த காலங்களில் இழப்புகளை சந்தித்துவிட்டோம்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால்வாய்களை முழுமையாக அமைக்கவில்லை” எனக் கூறுகிறார், வேளச்சேரி ராம்நகரில் வசிக்கும் செந்தில்குமார்.
ஐ.டி துறையில் பணியாற்றும் இவர், ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் குடும்பத்துடன் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கிக் கொள்வதாகக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தரைத்தளத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். வேறு இடத்தில் காரை கொண்டு போய் நிறுத்திவிடுவோம். போதிய வசதிகளை அரசு செய்து கொடுத்தால் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது” என்கிறார்.
இவர் வசிக்கும் தெருவில் பாதியளவு மட்டுமே மழைநீர் வடிகால்களை மாநகராட்சி நிர்வாகம் செய்து தந்துள்ளதைப் பார்க்க முடிந்தது.
” 32 வருடங்களாக இந்தப் பகுதியில் வசிக்கிறோம். அதிக மழை பெய்தால் மிதப்போம். இந்தமுறை வீட்டுக்குள் தண்ணீர் வராமல் இருந்தால் போதும்” எனக் கூறுகிறார், இப்பகுதியில் வசிக்கும் அம்பிகாவதி.
“கால்வாய்களை முறையாக தூர்வாரினால் மோட்டார்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இல்லாவிட்டால் மழைநீரில் இந்த பகுதி மிதப்பதை தவிர்க்க முடியாது. தவிர, இந்தப் பகுதியை விட்டு வேறு எங்கேயும் எங்களால் போக முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.
மழையிலும் தொடரும் கான்கிரீட் பணிகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னையில் 1,217 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டுள்ளதாக, கடந்த 16ஆம் தேதியன்று மேயர் பிரியா ராஜன் தெரிவித்திருந்தார்.
இதனை குறிப்பிட்டுப் பேசும் வேளச்சேரி சீதாராம் நகரில் வசிக்கும் மகாலட்சுமி, “முன்பெல்லாம் 3, 4 நாள்கள் தண்ணீர் நிற்கும். தற்போது இந்த பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்” என்கிறார்.
இதையே கூறிய சீதாராம் பகுதியைச் சேர்ந்த பரமசந்திரன், “மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஓரளவு செய்து முடித்துள்ளனர். ஆனால் ஒரு மணிநேரம் மழை பெய்தால் தரைத் தளத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். மீதமுள்ள பணிகளையும் செய்து முடித்தால் நன்றாக இருக்கும்” என்கிறார்.
மழைக்காலம் நெருங்குவதால் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக சாலைகள் தோண்டப்படுவது நிறுத்தப்படுவதாக, அக்டோபர் 16-ஆம் தேதி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கூறியிருந்தார்.
ஆனால், வேளச்சேரியில் உள்ள ராமகிருஷ்ணன் நகர் உள்பட சில சாலைகளில் மழைநீர் வடிகால்களில் கான்கிரீட் அமைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் கான்கிரீட் பணிகள் நடந்து கொண்டிருப்பது குறித்து அங்கிருந்த தனியார் நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது, ‘இதனால் எந்த பாதிப்பும் வராது’ என்று மட்டும் பதில் அளித்தனர். இங்குள்ள சில தெருக்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாமல் இருப்பதையும் பார்க்க முடிந்தது.
‘தெருவில் நடக்கவே முடியவில்லை’
அதேநேரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் பெருமளவு முடிந்திருந்தாலும் சாலையை செப்பனிடும் பணிகள் செய்யப்படவில்லை. சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. இதனால், நடக்கவே பெரிதும் சிரமப்படுவதாகக் கூறுகிறார், கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த கற்பகம்.
“மழைநீர் வடிகால் பணிக்குப் பிறகு அந்த இடத்தில் ஏற்பட்ட சிறுபள்ளங்களை சரிவர மூடாததால் சாலையில் நடக்க முடியவில்லை. ஓரிரு நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியைக் கடப்பது சிரமமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்” என்கிறார் அவர்.
கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. தற்போது பணிகள் முடிந்துவிட்டாலும் மண் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சேறும் சகதியுமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது.
சென்னையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.
“ஆனால், எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை” எனக் கூறுகிறார், கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி.
மாநகராட்சி துணை மேயர் விளக்கம்
மழைக்காலம் தொடங்கிய பிறகும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“சாலைகளைத் துண்டித்து பள்ளம் தோண்டுவதை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மேயர் கூறியுள்ளார். ஏற்கெனவே தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள பணிகளை நிறைவு செய்யும் வேலைகள் மட்டும் நடக்கின்றன” என்று அவர் கூறினார்.
“கான்கிரீட் போடப்பட்டு வரும் இடங்களில் தடுப்பரண்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகள் கடந்தும் பணிகள் முடியாதது குறித்துக் கேட்டபோது, ” பிரதான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால், தங்கள் பகுதியிலும் மழைநீர் வடிகால் கட்டித் தருமாறு சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதனை நிராகரிக்க முடியவில்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது” என்கிறார்.
“மழைக்காலம் வரும் போது படகுகளையும் நீர் இறைக்கும் மோட்டார்களையும் நிறுத்துவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?” என்றோம்.
“தாழ்வான பகுதிகளில் படகுகளைக் கொண்டு போய் நிறுத்துவது, மோட்டார் பம்புகளை அமைப்பது, நிவாரண முகாம்களில் போதிய வசதிகளை செய்து தருவது ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதி” என மகேஷ்குமார் தெரிவித்தார்.
நீரியல் நிபுணர் ஜனகராஜன் கூறுவது என்ன?
மழைக்காலங்களில் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு நிலப் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறுகிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜன். சென்னையில் பருவமழை பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார். 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் குழு 2022 ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி அரசுக்கு இடைக்கால அறிக்கையை அளித்தது.
பிபிசி தமிழிடம் பேசிய ஜனகராஜன், “வெளிவட்டச் சாலைகளை ஆறு மீட்டர் உயரத்தில் அமைக்கின்றனர். இதனால் நீர் வெளியேறும் வடிகால்கள் தடைபடுகின்றன. மெட்ரோ ரயில், பேருந்து நிலையங்கள், பாலங்கள் என உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
‘ஆண்டு முழுவதும் எச்சரிக்கை தேவை’
“வரும் நாட்களில் பருவகாலங்களில் மட்டுமே மழை பெய்யும் என எதிர்பார்க்க முடியாது. இந்தியப் பெருங்கடல் அதிக வெப்படையும் போது அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் அதன் தாக்கம் இருக்கும். அதனால் தான் கன்னியாகுமரி, கேரளா, நெல்லை பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்தது” என்று ஜனகராஜன் கூறுகிறார்.
“கடல் வேகமாக வெப்பமயமாவது தான் அதிக மழைப் பொழிவுக்குக் காரணம். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும். மேக வெடிப்பு என்பது சாதாரணமாக நடக்கும். ஆண்டு முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு